ஒரு கவிதை சொல்லட்டா?(part-1)

ஒரு கவிதை சொல்லட்டா? 1

(Strictly No logic)

அது ஒரு அழகான கிராமம். சின்னப் பசங்க எல்லோரும் ஆப்பிள் ஐபோனை வைத்தபடி வாட்ஸ் அப்பை நோண்டிக்கொண்டிருக்க பெரியவர்கள் கில்லி விளையாடிக் கொண்டிருந்தனர்.

"ராமு" ஓர் வயதானவர் அழைக்க இன்னொரு வயதானவர் நிமிர்ந்தார்.

"சொல்லுடா"

"நேத்து ஜல்லிக்கட்டில் கலந்துக்கிட்டேன்"

"சூப்பர் மச்சி"

"இந்த சின்னப்பசங்களுக்கும் கோச்சிங் கொடுத்து விளையாட வைக்கலாம்னா உட்கார்ந்திருக்கிற இடத்தை விட்டு எந்திரிக்க மாட்டேங்கிறாங்க"

"அது என்னமோ வாட்சப் பார்த்திட்டிருக்காங்க"

"அப்படின்னா என்ன?"

"எல்லாருக்கும் காலையில வணக்கம் சொல்றதுக்கு"

"நேரா பார்த்துக்க மாட்டாங்களா?"

"எந்திரிக்கவே அவங்களுக்கு முடியல. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எப்படி போவாங்க?"

"நாம் எல்லோரும் அந்த காலத்துல எவ்வளவு நடந்தோம்?"

"நம்ம காலம் வேற"

அவர்கள் இருவரும் தங்கள் பால்ய கால நினைவுகளில் மூழ்கிக் கொண்டிருக்க அந்தப் பிரதேசத்தின் அமைதியைக் கிழித்தபடி ஒரு குரல் கேட்டது.

"சங்கர் இருக்கானா?"

குரல் வந்த திசையை அனைவரும் நிமிர்ந்து பார்க்க காத்தாயி கிழவி நின்றிருந்தாள்.

"என்னாத்தா எதுக்கு அவனத் தேடற?"

"வள்ளி சாகக் கிடக்கிறா அதான்" அவள் சொன்ன மறு வினாடி அதை காதில் கேட்ட சங்கர் "ஆத்தா" என்று கத்தியபடி வீட்டுக்குள் நுழைந்தான்.

"அட கிரகம் புடிச்சவனே எதுக்கு இப்படி கத்திட்டு வர்றே? சாகறப்பக் கூட நிம்மதியா சாக விடமாட்டியா?" வள்ளி கேட்டபடி எழுந்து அமர்ந்தாள்.

அவளை சோகமாய் பார்த்த சங்கர் கேட்டான்.

"அம்மா எதுக்கும்மா இப்பவே போறே?"

"என்னால முடியலப்பா. " சொன்ன வள்ளி கண்ணீரை துடைத்துக் கொண்டு தொடர்ந்தாள்.

"ரொம்ப போரடிக்குது"

"ஏன்மா அப்படி சொல்ற?"

"டிவில நல்ல சீரியல் போட மாட்டேங்கிறாங்க. புருஷனுங்க எல்லாரும் வயசான காலத்துல பிள்ளைங்க பெரியவங்க ஆனதுக்கு அப்புறம் இன்னொருத்தியை லவ் பண்ணிட்டு சின்னப்பசங்களாட்டம் அவதான் வேணும்னு கத்திட்டு இருக்காங்க. அந்தக் கருமத்த நானும் எத்தனை நாள்தான் பார்க்கறது? அதுக்கு மேல போய் சேரறது மேல். அதான்"

"அதுக்காக என்ன விட்டுட்டுப் போறேன்னு சொல்றதா? என்னோட நிலைமைய யோசிச்சுப் பார்க்க மாட்டியா நீ? "

"அதெல்லாம் பார்த்தா முடியுமா கண்ணு?"

"ம்"

"சரி சரி நீ வெசனப்படாத."

"நான் உன்ற பையன் என்னால எப்படி ஆத்தா வெசனப்படாம இருக்க முடியும்?"

"வேணும்னா ஒன்னு பண்றேன்"

"என்ன ஆத்தா ?"

"ஒவ்வொரு அமாவாசைக்கும் மேல இருந்து கீழ வந்து உன்னை பார்த்துட்டுப் போறேன்"

"மாசம் ஒரு முறை மட்டும் தானா?"

"அப்ப என்னதான் கண்ணு சொல்ற?"

"வாரம் ஒரு முறை வந்து பார்த்துட்டுப் போ" கவலையாய் சொன்ன சங்கரை கனிவாய் பார்த்தாள் வள்ளி.

"சரிப்பா. கரெக்டா நைட்டு பன்னெண்டு மணிக்கு வருவேன்"

"அய்யோ"

"ஏன் கண்ணு?"

"நைட் எனக்கு பயமா இருக்கும். நீ பகல்ல வா"

"அட என்ன கண்ணு நீ?"

"ப்ளீஸ்மா"

"சரி போ. பகல்லயே வர்றேன்"

"ரொம்ப தேங்க்ஸ்மா"

"ம் அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட சொல்லணும்"

"என்னம்மா?" சங்கர் கேட்க வள்ளி சோகமாய் சொன்னாள்.

"நான் ஒரு உண்மையை உன் கிட்ட சொல்லணும்"

"சொல்லுமா"

"உங்கப்பா உனக்கு நாலு வயசு ஆகும் போது செத்துப் போயிட்டாரு"

"தெரியுமே"

"அவர் தானா சாகல"

வள்ளி சொல்ல சங்கர் அதிர்ந்தான்.

"என்னம்மா சொல்ற?"

"ஆமா அவரக் கொன்னுட்டாங்க" வள்ளி சொல்ல சங்கரின் விழிகள் சிவந்தன.

"அப்புறம் கண்ணு சிவந்துக்கலாம். முதல்ல சொல்றத முழுசா கேளு" வள்ளி சொல்ல சிவந்த தன் கண்களை மீண்டும் இயல்பாக மாற்றினான்.

"என்னம்மா ஆச்சு?"

"உங்க அப்பாக்கு கமர்கட்டுனா ரொம்ப பிடிக்கும்."

"ம்"

"அப்ப அது வாங்கறதுக்கு அவர் கிட்ட காசு இல்ல"

"ம்"

"அவரும் அவரோட நாலு நண்பர்களும் சேர்ந்து ஒரு கமர்கட் வாங்கினாங்க"

"ம்"

"ஒரு கமர்கட்ட அஞ்சு பாகமா பிரிக்கிறதுல அவங்களுக்குள்ள தகராறு வந்துடுச்சு"

"அய்யோ"

"அந்த தகராறுல உங்கப்பாவ அந்த நாலு பேரும் கொன்னுட்டாங்க"

"நான் அவங்களை விட மாட்டேன்"

"ஆமா கண்ணு விடக்கூடாது நீ அவங்கள பழி வாங்கணும்"

"அப்ப இது ரிவெஞச் ஸ்டோரியாம்மா?"

"என்ன கண்ணு பேசற நீ? "

"ஏம்மா திடீர்னு கமல் மாதிரி பேசற?"

"இல்ல கண்ணு சும்மா ட்ரை பண்ணேன் வரல"

"வரலன்னா விட்ரு"

"ம்" வள்ளி "கண்ணு" அழைத்தாள்.

"சொல்லும்மா"

"நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு பாட்டு இருக்கு கண்ணு"

"என்னம்மா சொல்ற? ஒன்னும் புரியல"

"நம்ம குடும்பப் பாட்டு அதை யார்கிட்ட போய் நாம சொன்னாலும் கேட்கிறவங்க செத்துருவாங்க"

"அவ்வளவு மோசமாவா இருக்கும்?" கேட்ட சங்கரை வள்ளி முறைத்தாள்.

"நம்ம குடும்பப் பாட்டை நாமளே கேவலப்படுத்தலாமா?"

"கேட்கிறவங்க கேவலப்படுத்த முடியாதே.அவங்க தான் உயிரோட இல்லன்னு சொல்றியே"

"சரி சரி வாய் ஜாஸ்தியா பேசாம சொல்றத கேளு"

"சொல்லும்மா"

"அந்தப் பாட்டை நான் உனக்கு சொல்றேன் உன் காதைக் கொடு"

சொன்ன வள்ளியை நம்பாமல் காதை கொடுத்தான் சங்கர்.

வள்ளி அவன் காதில் அந்த கவிதையை சொன்னாள்.

கேட்டவன் நம்ப முடியாமல் அவளை பார்த்தான்.

"அம்மா"

"ம்"

"இதக் கேட்டா எல்லாரும் செத்துப் போனாங்க?"

"ஆமா"

"நம்ப முடியல"

"நாம பாணர் வம்சம். அதான்"

"பாணர்னா அந்த காலத்துல ராஜாக்கள் முன்னாடி பாட்டு பாடி காசு வாங்கினவங்க தானே?"

"என்னடா பேசற? நம்ம வம்சத்தைப்பத்தி அவ்வளவு தான் தெரியுமா உனக்கு?" வள்ளி சங்கரைப் பார்த்து பெருமூச்சு விட்டாள். தொடர்ந்தாள்.

"நம்ம வம்சத்துல பாட்டு பாடினா மழை வரும். பாட்டு பாடினா நெருப்பு பத்திக்கும். பாட்டுப் பாடி யாரை வேணாலும் வசப்படுத்தலாம். யாரை வேணாலும் கொலை பண்ணலாம்"

"அம்மா நீ சொல்றதெல்லாம் நிஜமா?"

"ஆமா சங்கர்"

வள்ளி சொல்ல அவன் நம்ப முடியாமல் தலையாட்டினான்.

"சரிமா"

"சரி சங்கர். அம்மா சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சுக்க. நான் வெள்ளிக்கிழமை வந்து உன்னைப் பார்க்கறேன். போயிட்டு வரவா?"

"அம்மா"

"சொல்லுப்பா"

"வெள்ளிக்கிழமை தானே வரப்போற? இடையில் முடியறப்ப லெட்டர் போடுமா"

"அங்கிருந்து எப்படி லெட்டர் வரும் உனக்கு? அது எனக்கு புரியல?"

"கழுகுதான் ரொம்ப உயரமா பறக்குது. ஏதாச்சும் ஒரு கழுகு கால்ல லெட்டரை கட்டி விட்டா என்கிட்ட வந்து கொடுத்துடும்மா"

"சரிப்பா அம்மா ட்ரை பண்றேன்"

ஒரு நிமிடம் இருவருக்கும் மௌனம் நீடித்தது.

"போயிட்டு வரேன் பா"

"ஹேப்பி ஜர்னிமா"

"தேங்க்ஸ்"

***

அம்மா சென்ற மூன்றாவது நாள். சங்கர் தன் அப்பாவைக் கொன்றவர்களை நினைத்துப் பார்த்தான். அவன் கண்கள் சிவந்தன. நரம்புகள் புடைத்தன. அப்பொழுதே பாட்டு பாடி ஆக வேண்டும்போல் தோன்றியது. மிகவும் சிரமப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டான்.

அப்பாவை கொன்ற அந்த நான்கு பேர் யார்? அவர்களை எப்படி கண்டுபிடிப்பது? குழப்பத்தில் ஆழ்ந்தான். எதிலும் மனம் ஈடுபாடு இல்லாமல் இருக்க சற்று நேரம் அமர்ந்து யோசித்தான். ஒரு வழியும் புலப்படவில்லை. டிவியை போட்டான்.

ஏதோ ஒரு பழைய படம் ஓடிக் கொண்டிருக்க அதில் நாயகன் தன் காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க ஒரு சாமியாரை கையெடுத்து கும்பிட்டபடி இருந்தான். அந்த சாமியார் அவனை கெத்தாய் பார்த்தபடி ஒரு வெற்றிலையை அவன் கையில் வைத்தார். அதில் ஏதோ கொஞ்சம் கருப்பு மையைத் தடவ அந்த மைக்குள் குழந்தை சிரித்தது. நாயகன் பரவசம் அடைந்து சாமியாரைக் கும்பிட்டான்.

சங்கருக்கு ஐடியா கிடைத்தது. தன் நண்பன் கருப்பனிடம் சொல்ல அவன் தனக்கு சாமியாரை தெரியும் என்றும் தான் அழைத்துச் செல்கிறேன் என்றும் சொல்ல சங்கருக்கு மகிழ்ச்சி.

"ரொம்ப தேங்க்ஸ் கருப்பா"

"இதுல என்னடா இருக்கு? நீ என்னோட ஃப்ரெண்ட். உனக்காக நான் இதைக்கூட செய்ய மாட்டேனா?" கருப்பன் சொல்ல சங்கர் நெகிழ்ந்தான்.

குறிப்பிட்ட நாளில் இருவரும் சைக்கிளில் காட்டுப்பகுதிக்கு கிளம்பினர். ஏன் சாமியார்கள் எப்பொழுதும் காட்டுப்பகுதியிலேயே குடில் அமைக்கிறார்கள்? அப்பொழுதுதான் அவர்கள் செய்வது வெளியுலகிற்குத் தெரியாதோ? என்று கருப்பன் எண்ண அவனுக்கு சிரிப்பு வந்தது.

காட்டில் நீண்ட தூரம் வந்து விட்டனர்.

ஒரு பாறையில் வெற்றிலை சாமியார் 2 கிலோமீட்டர்ஸ் என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்த கல் அவர்களுக்கு வழிகாட்டியது.

அடுத்த இரண்டு கிலோமீட்டர்கள் சைக்கிளில் சென்றனர்.

வெற்றிலை சாமியாரின் குடிலைப் பார்த்தவர்கள் அதிர்ந்தனர். ஒரு புலி ஒன்று அனைவரையும் கோபமாக பார்த்தது.

"கருப்பா" சங்கர் பயந்தபடி அழைக்க

"ம்" என்று சொன்ன கருப்பன் புலியை பயத்துடன் பார்த்தான்.

"திரும்பிப் போயிடலாமா?"

"ஆமா அதுதான் நல்லது"

"சரி வா புலி நம்மளப் பார்க்கல. போயிடலாம்" என்று சொன்ன அந்தத் தருணத்தில் புலி அவர்களைப் பார்த்துவிட உள்ளே அலாரம் அடித்தது. குடிலில் இருந்து இரண்டு பேர் வெளியே வந்தார்கள்.

"யாரு? " அவர்கள் கேட்க கருப்பன் பயமாய் சொன்னான்.

"சாமியாரை பார்க்க வந்தோம்"

"வாங்க"

"இல்ல அந்தப் புலி…" சங்கர் பயமாய் சொல்ல அந்த இரண்டு பேரில் ஒருவன் சொன்னான்.

"ஜிம்மி ஒண்ணும் பண்ணாது. வாங்க." என்றவன் புலியிடம் திரும்பி "ஜிம்மி கீப் கொயட்" என்றான்.

புலி அவனை கண்டுகொள்ளாமல் கொட்டாவி விட்டது.

சங்கர் கருப்பன் இருவரும் ஒரு வழியாக உள்ளே சென்றனர். சாமியார் ஆஜானுபாகுவாக இருந்தார். கண்களால் என்னவென்று கேட்டார். சங்கர் தயங்கியபடி தன் நிலைமையை விவரித்தான். உன்னிப்பாய் கேட்டவர் அவனிடம் கேட்டார்.

"உன்னுடைய எதிரிங்க யாருன்னு உனக்கு தெரியணுமா?"

"ஆமாங்கய்யா"

"என் முன்னாடி இருக்கிற இந்த பலகைல உட்காரு"

சங்கர் அவர் முன் போடப்பட்டிருந்த சிறிய பலகையில் அமர்ந்தான். ஒரு வெற்றிலையை கையில் கொடுத்தார். கொஞ்சம் கருப்பு மையை அவன் முன் வைத்தார். கண்கள் மூடி இஷ்ட தெய்வத்தை பிராத்தித்தார்.சட்டென்று அவர் முகம் மாறியது.

"பிடிச்சிட்டேன் பிடிச்சிட்டேன் தெரியுது தெரியுது" கத்தினார்.

அவர் பரபரப்பு சங்கரையும் ஒட்டிக்கொண்டது.

"என்னய்யா பிடிச்சிங்க?" கேட்டவனை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே சொன்னார்.

"வெத்தலையில மை போடு"

"போட்டேன் அய்யா "

"உன் ரெண்டு கண்ணால வெத்தலைய நல்லாப் பாரு"

சங்கர் பார்த்தான்.

"உன் எதிரிங்க முகம் தெரியுதா?"

"ஆமாங்க... ..ஆனா" பரவசமானவன் பதட்டமாகவும் இருந்தான்.

"ஆனா?"

"அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியல. அது எப்படி தெரிஞ்சுக்கறது?"

"சிம்பிள்"

"எப்படிங்க?"

"வெத்தலயத் திருப்பிப்பாரு. "

"ம்"

"என்ன தெரியுது?"

"ஏதோ நம்பர் தெரியுது."

"அது அவங்க வாட்ஸப் நம்பர்"

"ரொம்ப தேங்க்ஸ்ங்கய்யா"

தொடரும்


Comments