ஒரு கவிதை சொல்லட்டா?(part-2)

சங்கர் சாமியாரை நன்றியுடன் பார்த்தான். வாட்சப் எண்களை வெற்றிலையில் வரவழைத்த சாமியார் பெருமையாக புன்னகைத்தார்.

"உன் பிரச்னை தீர்ந்ததா?"

"இனி நான் பார்த்துக் கொள்கிறேன் இவர்கள் நான்கு பேரும் எங்கே இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் இவர்களை நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம்" அவரை வணங்கியபடி சங்கர் சொன்னான்.

"வெற்றி உனதே போய் வா" சாமியார் ஆசிர்வதித்தார்.

கம்பீரமாக வெளியே நடந்தவன் கண்களில் தீப்பொறி தெரிய வாசலில் இருந்த புலி பயந்து போய் விலகி வழி விட்டது. கருப்பன் சங்கரை பின் தொடர்ந்தான்.

"சங்கர்"

"ம்"

"நாலு பேரோட நம்பர் கிடைச்சிடுச்சு அடுத்து என்ன பண்ணப் போறோம்?"

"மர்டர்னு வாட்ஸப் குரூப் கிரியேட் பண்ணப்போறேன்.அதுல அந்த நாலு பேரையும் சேர சொல்லி ரிக்வெஸ்ட் கொடுக்கப் போறேன் "

"சூப்பர் சங்கர்" சங்கரின் அபாரமான யோசனையை கருப்பன் வியந்து போய் பார்த்தான்.

"உடனே பண்ணிடு"

"இல்ல கருப்பா நான் எது பண்ணாலும் எங்க அம்மாவோட ஆசிர்வாதத்தோடத்தான் பண்ணுவேன்"

"ம் புரியுது"

"அம்மா வெள்ளிக்கிழமை எமலோகத்தில் இருந்து வருவாங்க. அவங்க கிட்ட ஆசி வாங்கிட்டு நாம இந்த நாலு பேரையும் தேடிப் போகப் போறோம்"

"ம்"

சங்கர் வீட்டை அடைந்த பொழுது கழுகு காத்திருந்தது. சங்கர் பரவசமானான்.

கழுகுவின் காலில் தங்க நிறத்தில் ஒரு காகிதம்.

அதை எடுத்துக் கொண்டான். கழுகு பறந்தது.

சங்கர் அந்த காகிதத்தை முன்னும் பின்னும் பார்த்தான். இதுவரை எங்கும் பார்க்காதது போல் ஒரு புது மாதிரியாக அந்த காகிதம் இருந்தது. சங்கருக்கு மனதிற்குள் பிரமிப்பாக இருந்தது. எமலோகத்தில் இருந்து அம்மா கடிதம் அனுப்பி இருக்கிறார்.

கடிதத்தை படிக்க ஆரம்பித்தான். சட்டென்று கடிதத்தில் அவன் அம்மா முகம் தெரிந்தது. வள்ளி பேசினாள்.

"கண்ணு நான் இங்க நல்லபடியா வந்து சேர்ந்துட்டேன். உங்க அப்பாவ காணோம். வேற பிறவி எடுத்துட்டார்னு நினைக்கிறேன். உன்ற பாட்டிக்கு இன்னும் புத்தி மாறல. இங்க இருக்கும்போது தான் எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுட்டிருந்தான்னா அங்க போனதுக்கப்புறமும் மூஞ்சத் திருப்பிட்டு போயிட்டா. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். வந்த புதுசுல அடிக்கடி லீவு தர மாட்டாங்களாம். மாசத்துக்கு ஒரு நாள் கேஷுவல் லீவ் மட்டும் தான். அம்மா மாசத்துக்கு ஒரு நாள் வந்து உன்னைப் பார்க்கறேன். அம்மாவோட நிலைமை உனக்கு புரியும்னு நினைக்கிறேன். இந்த வெள்ளிக்கிழமை அம்மாவால வர முடியாது. புதுசா வந்தவங்களுக்கு இங்க வெல்கம் பார்ட்டி இருக்கு. ஆடல் பாடல் நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு ஒரே கவலை. உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்.

அம்மாக்கு நாளைக்கு பர்ஃபார்மென்ஸ் எவாலுவேஷன் இருக்கு. அதாவது நான் பூமியில எவ்வளவு நல்லது பண்ணி இருக்கேன் எவ்வளவு கெட்டது பண்ணி இருக்கேன்னு கணக்குப் போட்டு எனக்கு சொர்க்கமா நரகமான்னு நாளைக்கு முடிவு பண்ணுவாங்க. எனக்கு என்ன கிடைச்சதுன்னு அடுத்த லெட்டர்ல சொல்றேன்.

உடம்பப் பார்த்துக்க. நல்லா சாப்பிடு. சனிக்கிழமை எண்ணைத் தேய்ச்சுக் குளி தப்புத்தண்டா எதுவும் பண்ணாத. யாருக்கும் தெரியாம தப்பு பண்ணினாலும் மேல கரெக்டா கணக்கெழுதியிருக்காங்க. அது எனக்கு இப்பத்தான் புரிஞ்சிருக்கு.

சரி கண்ணு அடுத்த லெட்டர்ல மிச்சம் எழுதுறேன்"

கடிதம் முடிந்து போய் இருக்க சங்கர் மீண்டும் படித்தான்.

அம்மாவிற்கு சொர்க்கம் கிடைக்க வேண்டும். கடவுளிடம் வேண்டினான்.

***

வேலையை முடித்து விட்டு வந்த செல்வி டிவி முன் அமர்ந்தாள்.தான் வழக்கமாக பார்த்து ரசிக்கும் சீரியலை போட்டவள் அதில் வரும் காட்சிகளில் தன்னை மறந்து லயித்திருக்க அருகில் வந்தமர்ந்த அவள் மகள் அனிதா தலையில் அடித்துக் கொண்டாள்.

"ஏம்மா இப்படி கொடுமை பண்ற?"

*ஏன்டி? நல்லாத்தான இருக்கு இது?"

"இதுவா நல்லா இருக்கு? நம்ம அப்பா இப்போ யாரையாவது லவ் பண்ணா நீ ஒத்துக்குவியா?"

"அவர் பண்ண மாட்டார்"

"ஏன்?"

"அவருக்கு மொபைல் மட்டும் போதும். முதல்லயே அவர் பத்தி தெரிஞ்சிருந்தா நான் அவரை கல்யாணம் பண்ணாம மொபைலுக்குத் தாலி கட்ட வெச்சிருப்பேன்"

செல்வி சொல்ல அனிதா சிரித்தாள்.

"என்ன என்னைப் பத்தி ஏதோ பேச்சு அடிபடுது" சதாசிவம் புன்னகைத்தார்.

"வாங்க என்ன இன்னைக்கு மொபைல் லீவு விட்டீங்களா?"

"ஆமா நீ என்ன பண்ற? சீரியலா?" நமுட்டு சிரிப்புடன் கேட்டார்.

டிவியில் அந்த வயதான குடும்பத் தலைவன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ததற்காக நாயகி போராடிக் கொண்டிருந்தாள்.

'இவனுக்காக எதுக்கு சண்டை போடணும்? இவன்தான் ஒண்ணுமே பண்றது இல்லையே?' தன் மனதில் தோன்றிய எண்ணம் அவருக்கு சிரிப்பை வரவழைத்தது.

அவர் அருகில் வந்த அனிதா அழைத்தாள்.

"அப்பா"

"ம்"

"இன்னிக்கி என்னோட ஃப்ரண்ட்க்கு பர்த்டேப்பா"

"ம்"

"நாங்க ஃப்ரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ட்ரிப் பிளான் பண்ணிருக்கோம்பா"

"எங்க மா?"

"பாலக்காடு"

"சரி பத்திரமா போயிட்டு வா"

"தேங்க்ஸ் பா"

இருவருக்கும் நடந்த உரையாடலை செல்வி முறைப்பாய் பார்த்தாள்.

"உங்களுக்கு கொஞ்சமாவது தலையில் ஏதாவது இருக்கா?"

"ஏன் செல்வி டவுட்? உன் கழுத்துல தாலி கட்டும் போதே என் தலையில எதுவுமே இல்லைன்னு உனக்கு தெரியலையா என்ன?" அவர் புன்னகைக்க செல்வி புஸ்புஸ் என்று மூச்சிரைத்தாள்.

"அவ ஒன்னும் சின்னப் பொண்ணு இல்ல. இன்னும் எல்லா இடத்துக்கும் போய்ட்டு வந்துட்டிருக்கறதுக்கு."

"நமக்கு அவ குழந்தை தானே?"

"நம்ம அனிதா வயசு தான் உங்க அண்ணன் பொண்ணுக்கும். அவளுக்கு கல்யாணம் ஆகி இப்ப மூணாவது மாசம்"

சதாசிவத்திற்கு புரிந்தது ஒன்றும் பேசாமல் மௌனமானார்.

செல்வி நல்லவள் தான் ஆனால் யாரையாவது யாருடனாவது ஒப்பிட்டுக் கொண்டே இருப்பாள். இந்த ஒப்பீடு ஒப்பிடப்படுபவருக்கு மனதளவில் மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்கும் என்பது செல்விக்குத் தெரியாது.

மௌனமாய் தன் அறைக்கு சென்று விட்டார்.

அனிதா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். அனிதாவை பார்க்கும் எவரும் சட்டென்று எல்லாமே மறந்து விடுவர். அழகென்ற சொல்லுக்கு அனிதா என்று அவளுடன் படிக்கும் மாணவர்கள் அவள் பின்னால் திரிவர்.அனைவருக்கும் அனிதாவைப் பிடித்திருக்க அனிதாக்கு மட்டும் யாரையும் பிடிக்காமல் இருந்தது. உடன் படிக்கும் தோழிகள் பலர் கேட்டும் அவள் மௌனமாக இருந்தாள்.

"உனக்கு ஏன் யாரையும் பிடிக்க மாட்டேங்குது?"

"தெரியல"

"உன் மனசுக்குள்ள ஏதாவது ஒரு உருவம் கற்பனை பண்ணி வச்சிருப்பே கரெக்டா ?"

"இல்ல"

"இல்லயா?"

"ம்"

"நிஜமாவே உனக்கு எதிர்பார்ப்பு எதுவும் இல்லையா என்ன?"

"இருக்கு"

"என்ன உன் எதிர்பார்ப்பு?"

"எனக்கு வரப்போறவன் ரொம்ப வீரனா இருக்கக் கூடாது. ரொம்ப அறிவாளியா இருக்கக் கூடாது. எந்த ஒரு விஷயமா இருந்தாலும் என்கிட்ட கேட்டு செய்யணும். அவ்வளவுதான்"

அவள் சொல்ல தோழிகள் அனைவரும் சிரித்தனர்.

"ஏண்டி?"

"ம்"

"சுமாரா இருக்கிறவளே சூப்பர் ஹீரோ தான் வரணும்னு எதிர்பார்ப்பு வச்சிருப்பா. நீ செமையா இருக்க. உனக்கு என்ன இவ்வளவு சாதாரண எதிர்பார்ப்பு?"

"சூப்பர் ஹீரோவாக இருக்கிறவனுக்கு எப்பவுமே ஈகோ ஜாஸ்தியா இருக்கும். சுமாரா இருக்கிறவன்தான் என்ன தேவதையா பார்ப்பான். எப்பவுமே அப்படியே பார்த்துக்குவான்"

அனிதா சொல்ல தோழிகள் சிரித்தனர்.

அனிதாவும் பல ஆண்களுடன் பழகி இருந்தாலும் யாரும் அவள் மனதில் எந்த விதமான உணர்வையும் ஏற்படுத்தியதில்லை.

அவளுக்கே சில சமயங்களில் தோன்றும். தான் சரியாகத்தான் இருக்கிறோமா என்று.

இப்படியே நாட்கள் செல்ல ஒரு நாள் அனிதா பேருந்தில் கல்லூரி முடிந்து தன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தாள்.அனிதாவின் பார்வையில் அவன் பட்டான். அனிதாவிற்கு மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு. இதுவரை அவள் இப்படிப்பட்ட உணர்வை உணர்ந்ததில்லை.

இன்னும் அவனைப் பார்த்தால் தன் தங்க நிற தேகம் மின்சாரம் பாய்ந்து கரிக்கட்டையாக மாறிவிடும் என்பதற்காக அவனை பார்ப்பதைத் தவிர்த்தாள். ஆனாலும் மனம் கேட்கவில்லை. அவன் மீது தன் கண்களைப் பதித்த அதே வேளையில் அவனும் அவளைப் பார்த்தான். அவன் விழிகள் மலர்ந்தன.

'யார் அவன்? என்னைப் பார்த்து ஏன் இவ்வளவு சந்தோஷப்பட வேண்டும்? எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவனைப் பார்த்தால் ஏதோ பல ஜென்மங்கள் ஒன்றாக பழகியவன் போல் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அவனை இதற்கு முன் நான் எங்கும் பார்த்ததாக நினைவில்லை' அனிதா மனதில் போராட்டம்.

தன் நிறுத்தம் வர அவள் இறங்கிக்கொண்டாள்.பின்னால் திரும்பிப் பார்த்தவள் மலர்ந்தாள். அவனும் இறங்கினான்.

அவள் தன் வீட்டிற்கு செல்லும் வழியில் நடக்க அவனும் பின் தொடர்ந்தான்.

அனிதாவிற்கு பதட்டமானது. ஏன் என்னைப் பின்தொடர்கிறான்? இவ்வளவு வேகம் ஆகாது. ஒருவேளை நான் அவனை அந்தளவிற்கு கவர்ந்து விட்டேனோ? தன்னை பற்றி நினைக்க அவளுக்கு பெருமையாக இருந்தது.

அவன் அவளையே பார்த்தபடி அருகில் வர கொஞ்சம் பயத்துடன் அவனைப் பார்த்தாள்.

"ஹலோ" அவன்தான் அழைத்தான்.

"ம்" மான்குட்டியாய் மருண்ட பார்வையுடன் பார்த்தாள்.

"இங்க சதாசிவம் வீடு தெரியுமா?"

அவன் கேட்க அனிதாவிற்கு பூரிப்பு.

அப்பாவை கேட்கிறான். என் வீட்டிற்குத்தான் வருகிறாள். முகம் மலர்ந்தவள் வழி சொன்னாள். தயக்கமாய் கேட்டாள்.

"அவரை எதுக்கு பார்க்கப் போறீங்க?"

"அது எதுக்கு நீ கேட்கற?"

"அவர் என் அப்பா"

அனிதா தன் அப்பா என்று சொல்ல சங்கர் கோபமானான்.

'ஓ இவள் என் எதிரியின் மகள். அதுதான் எனக்கு இவளைப் பார்த்தவுடன் பிடித்துப் போய்விட்டது. இனி இவளுடன் டூயட் பாடிக் கொண்டு இவள் அப்பாவைக் கொலை செய்ய திட்டம் போட வேண்டும்.

சங்கர் அவளைப் பார்த்து புன்னகைக்க அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள்.

***

எமலோகம் பரபரப்பாக இருந்தது. அன்று எமலோகத்திற்கு ஆடிட். எமன் உச்சகட்ட டென்ஷனில் இருந்தார்.

சித்ரகுப்தனை அழைத்தார்.

"என்னவாயிற்று சித்திரகுப்தா ? ஆடிட்டிற்கு வருபவர்கள் மூன்று வருட டேட்டா கேட்பார்கள். தயாராகி விட்டதா?"

"கடந்த மூன்று வருடங்களில் இறந்தவர்கள் அவர்களில் சொர்க்கத்திற்கு சென்றவர்கள் நரகத்திற்கு சென்றவர்கள் சாஃப்ட் காப்பி இந்த லேப்டாப்பில் உள்ளது எமதர்மராஜா"

"உனக்கு எத்தனை முறை சொல்வது? வருபவர்கள் வயதானவர்கள். அவர்களுக்கு சாஃப்ட் காப்பி போதாது. பிரிண்ட் எடுத்து ஃபைல் செய்து வைக்க வேண்டும்"

"அப்படியே ஆகட்டும் எமதர்மராஜா"

"மற்றொரு காரியம் கூட உண்டு"

"சொல்லுங்கள் ராஜா"

"ஆடிட் முடியும் வரை யாருக்கும் லீவ் தரக்கூடாது. அனைவரும் இங்கு தான் இருக்க வேண்டும்."

"அப்படியே ராஜா"

வருபவர்கள் என்ன கேட்டார்கள் எந்தக் குறையை கண்டுபிடிப்பார்கள் என்று எமதர்மராஜா டென்ஷனில் இருக்க வாயில் காப்போன் உள்ளே ஓடி வந்தான்.

"ராஜா அவங்க வந்துட்டாங்க"

தொடரும்


Comments