ஒரு கவிதை சொல்லட்டா?(part-3)

எமதர்மன் சட்டென்று எழுந்தார். எல்லாம் ரெடிதானே என்று சித்ரகுப்தனிடம் கேட்க அவர் ஆம் என்று தலையாட்டினார்.

புஷ்பக விமானத்திலிருந்து இறங்கிய அந்த இருவரும் எமன் உலகத்தில் நுழைய எமன் எழுந்து நின்று வரவேற்றார்.

அவர்கள் இருவரும் தங்களுக்குரிய ஆசனத்தில் அமர்ந்தனர்.

"குடிக்க எதுவும்?" எமன் கேட்கும் முன் கிங்கரர்கள் அவர்கள் இருவருக்கும் பழரசம் கொண்டு வந்து வைத்தனர்.

இருவரில் ஒருவர் கேட்டார்.

"ஃபைல்ஸ் கொண்டு வாங்க"

தயாராய் காத்திருந்த சித்திரகுப்தன் கடந்த மூன்று வருடங்களுக்கான ஃபைல்களைக் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார்.

ஒருவர் ஃபைல் பார்க்க மற்றவர் எமனிடம் சொன்னார்.

"டிஸ்ப்ளே வைக்கணும். வெளிய உள்ள டிஸ்ப்ளே போர்ட் இல்ல"

அவர் சொல்ல எமன் பணிவாய் தலையாட்டினார்.

"சரிங்க சார்"

ஃபைல் பார்த்தவர் "லைஃப் டைம் ரெஜிஸ்டர் எங்க?" என்று கேட்க சித்ரகுப்தனின் உதவியாளர் ஒருவர் எடுத்துக் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்தவர் அதிர்ந்தார்.

"ஆயுள் காலம் முடிஞ்ச பல பேர் இன்னும் சாகாம இருக்காங்க. உங்க கடமையை நீங்க சரியா செய்யல."

அவர் கோபமாய் சொல்ல எமன் அவரிடம் வந்து பணிவாய் சொன்னார்.

"இப்ப கொஞ்ச நாளா எங்களால பூமிக்குப் போக முடியல. எங்க பார்த்தாலும் கொரோனா குரங்கு அம்மைன்னு இருக்கு. அதான் எங்க பாதுகாப்புக்காக நாங்க இங்கயே இருந்துட்டோம்"

"அப்ப உங்களுக்குப் பதிலா யார் உயிர் எடுப்பாங்க? ஆல்டர்னேட் அரேஞ்ச்மெண்ட் ஏதும் பண்ணி இருக்கீங்களா?"

"அது பண்ணலை சார். ஆனா மக்களே நாங்க நினைக்கறதுக்கும் மேல நிறைய பேரை கொன்னு இங்க அனுப்பிடறாங்க. ஒவ்வொரு மாசமும் எங்க டார்கெட்டுக்கு மேலேயே இங்க ஆளுங்க வர்றாங்க சார்" எமன் சொல்ல அவர் தலையசைத்தார்.

மற்ற ஃபைல்கள் எல்லாவற்றையும் பார்த்தவர் சொன்னார்.

"நீங்க சில தப்பு பண்ணியிருக்கீங்க. பார்ட்டிக்கு நிதி ஆதாரம் பத்தின விவரங்கள் இல்ல. கையிருப்பில இருக்கிற தங்கம் குறைஞ்சிட்டே வருது. அதுக்கான செயல்திட்டம் ஒண்ணும் இல்ல. சொர்க்கத்துல டான்ஸ் ஆடறவங்களுக்கு சரியா சம்பளம் கொடுக்கல. நரகத்துல வெச்சிருக்கிற எண்ணெச்சட்டி ரொம்ப பழசா இருக்கு. பூமியில் இருக்கிற மக்களுக்கு சொர்க்கத்துக்கு போகணும்னா என்ன பண்ணனும்னு தெளிவா இன்ஸ்ட்ரக்சன்ஸ் எதுவும் கொடுக்கல. அவங்க இங்க வந்ததுக்கு அப்புறம் நீங்க சொல்ற ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன்ஸ் அவங்க வாழும் போதே சொன்னா அவங்க நரகத்தைத் தவிர்ப்பாங்க. ஆனா அதுவும் நீங்க தெளிவா சொல்லல. எமன் உலகத்துக்கான வெப்சைட் அடிக்கடி ஹேங் ஆகுது. இத சரி பண்ண எந்த நடவடிக்கையும் செய்யல. லீவ் ரெஜிஸ்டர்ல இருக்கிறதும் உண்மையும் வேறயா இருக்கு. உங்களுக்கு தெரியாம இல்லன்னா உங்களை ஏமாத்திட்டு சில பேய்ங்க பூமியிலதான் சுத்திட்டு இருக்கு இத நீங்க கண்டுக்கிறது இல்ல"

அவர் சொல்லிக் கொண்டே போக எமனுக்கு வியர்த்தது.

"அது வந்து…"

"இதெல்லாம் நீங்க சரி பண்ணனும் ரிஜிஸ்டர் கரெக்டா மெயின்டெயின் பண்ணனும் எல்லாருக்கும் சிஸ்டம்ஸ் கொடுக்கணும் சாஃப்ட்வேர் லேட்டஸ்ட்டா இருக்கணும். வர்றவங்களோட டீடெயில்ஸ் வெப்சைட்ல உடனே போடணும் அவங்களுக்கு சொர்க்கமா நரகமான்னு தெளிவா காரணத்தோட குறிப்பிட்டிருக்கணும்"

"சரி சார் அப்படியே பண்ணிடறேன்"

"ஸ்கூல் பொண்ணுங்க சின்ன வயசிலேயே இங்க வந்திருக்காங்க. ஆனா அவங்கள கொலை பண்ணவங்க இன்னும் அங்க தான் இருக்காங்க."

"இல்ல அவங்களுக்கு ஆயுள் இன்னும் முடியல அதான்" எமன் பணிவாய் செல்ல அவர் எமனை தீர்க்கமாய் பார்த்தபடி சொன்னார்.

"ஸ்கூல் பொண்ணுங்க மேல கை வைக்கிறவனுக்கு ஆயுட்காலம் எவ்வளவு இருந்தாலும் சரி அதை ரத்து பண்ணிட்டு அவனைக் கொண்டு வந்து நரகத்துல வச்சு செய்யணும்னு ஒரு விதி போட்டு அந்த விதிப்படி உங்களுக்கு இருக்கிற சிறப்பு அனுமதிய வச்சு நீங்க நடவடிக்கை எடுக்கலாம். தெரியுமா தெரியாதா?"

"தெரியும் சார்"

"அப்புறம் ஏன் பண்ணல?"

"இனிமே பண்ணிடறேன்"

"சரி"

இருவரும் எழுந்தனர். மெதுவாக சுற்றிப் பார்த்தனர்.

எவன் உலகிற்கு தணிக்கை செய்ய வந்திருக்கும் அதிகாரிகளே வருக

பேனர் பார்த்தவர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் அனைத்து இடங்களுக்கும் சென்று பார்த்தனர்.

மூன்று பெண்கள் மிகவும் எழிலாய் அசர வைக்கும் அழகில் இருக்க இருவரும் தங்களை மறந்து பார்த்தனர்.

"இவங்க?"

"இவங்க மூணு பேரும் ரம்பா ஊர்வசி மேனகா. புதுசா வந்தவங்களுக்கு இன்னிக்கு வெல்கம் பார்ட்டி அதான் வந்திருக்காங்க"

"சூப்பர்" சொன்ன இருவரும் கேட்டனர்.

"இவங்க எப்ப டான்ஸ் ஆடுவாங்க?"

**"

"அனிதா" சங்கர் காதலாய் அழைத்தான்.

இடம்: ஆரியாஸ் ஹோட்டல்.

தன் முன் தட்டிலிருந்த ரசகுல்லாவை சாப்பிடாமல் தன் முன் அமர்ந்திருந்த ரசகுல்லாவையே இமைக்காமல் பார்த்தான்.

"சங்கர்"

"ம்"

"என்னால இப்ப தூங்க முடியறதில்ல"

"ஏன்மா கொசு ஜாஸ்தியா?" கேட்டவனை பொய் கோபத்துடன் முறைத்தாள் அனிதா.

சங்கர் சிரித்தான். பச்சரிசிப் பல்லழகா என்ற பாடல் அனிதாவின் மனதிற்குள் வர புன்னகைத்தவள் சொன்னாள்.

"என்னால நம்ப முடியல சங்கர்"

"எது அனிதா ?"

"நான் இவ்வளவு சீக்கிரம் உங்ககிட்ட விழுவேன்னு"

"எல்லாம் கடவுளோட விளையாட்டு"

"என்ன சொல்றீங்க சங்கர்?"

"ஒண்ணுமில்ல. உங்க அப்பா டூர் போய் இருக்காருன்னு சொன்னியே வந்துட்டாரா?"

"இன்னும் வரல சனிக்கிழமைதான் வருவார். ஆமா உங்க கிட்ட ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன்."

"ஓராயிரம் கேளு. நான் தயார்" என்றபடி உதட்டை ஈரப்படுத்திக் கொண்டவனை வித்தியாசமாய் பார்த்தாள்.

"எப்பவுமே எங்க அப்பா பத்தியே கேட்கறீங்களே ஏன்?"

"எனக்கு மாமனராகப் போறவரு. அதான் ஒரு பாசம்"

"இல்ல நீங்க என்கிட்ட எதையோ மறைக்கிறீங்க." அனிதா சொல்ல சங்கர் உஷார் ஆனான்.

'இவள் தமிழ் படத்தில் வரும் பேக்கு ஹீரோயின் அல்ல. நிறைய கேள்வி கேட்கிறாள். இப்பொழுதே இவ்வளவு கேள்விகள் என்றால் நாளை இவளை திருமணம் செய்தால் கேள்விகளாக கேட்டுக் கொண்டே இருப்பாள். சங்கர் உஷார்' அவன் மனம் அவனை எச்சரித்தது.

"என்ன திடீர்னு சைலண்ட் ஆயிட்டீங்க?"

"சில பொழுதுகள் மௌனத்தால் அழகாகும். அதில் ஒன்று மனதிற்கு இனியவளுடன் இருக்கும் தனிமைப் பொழுதும்"

"நல்லாப் பேசறீங்க"

"அப்படியா?"

"ஆமா அதுலதான் நான் விழுந்திட்டேன்"

"விழுந்தாய் என் விழிகளில்

எழுந்தாய் என் மனதில்

தொழுவேன் நான் தெய்வத்தை

தேவதையைத் தந்தாய் என்றே"

"வாவ் பின்றீங்க"

"இல்லயே"

"புரியல"

"இன்னும் தொடவே இல்ல. எங்க போய் பின்றது?"

"சீ" அனிதா வெட்கப்பட அவன் ரசித்தான்.

"நாணம் உன் அழகைக் கூட்ட

நானும் வரம் பெற்றேன்.

தேனும் பாலும் கற்கண்டும்

காணும் என்னவளுக்கு ஒப்போ?"

"போதும் பா"

"பத்தல பத்தல" கமல் குரலில் சொன்னான். அனிதா சிரித்தாள்.

"அனிதா"

"ம்"

"தொடவா?"

"ம்ஹூம்"

"கொஞ்சம் ?" அவன் பாவமாய் கேட்க அவள் சிரித்தாள். அவள் விரல்களைப் பற்றினான். அவளுக்குள் மின்சாரம் பாய்ந்தது.

***

வெள்ளிக்கிழமை.

சங்கர் வீட்டிற்கு வெளியே சேர் போட்டு அமர்ந்திருந்தான்.

காத்தாயி கிழவி மாடு மேய்த்தபடி கேட்டாள்.

"ஏன் கண்ணு"

"சொல்லுங்க ஆத்தா"

"அம்மா வந்துச்சா?"

"போன வெள்ளிக்கிழமை ஏதோ மீட்டிங் இருந்துச்சு. அதான் வரல. இன்னிக்கு வரும் "

"வந்தா நான் கேட்டதா சொல்லு கண்ணு"

"சரிங்க ஆத்தா"

சங்கர் மணி பார்த்தான். காலை ஒன்பது மணி.

'அம்மா ஏன் இன்னும் வரவில்லை?' யோசனை ஓடியது.

நேரம் கரைந்தது.

"கண்ணு" என்ற குரல் கேட்டவன் நிமிர்ந்தான். மலர்ந்தான்.

வள்ளி நின்றிருந்தாள்.

"அம்மா"

"எப்படி கண்ணு இருக்கே?"

"நல்லா இல்லம்மா" என்றவன் கண்களில் கண்ணீர்.

வள்ளி பதறினாள்.

"என்னாச்சு கண்ணு?"

"நீ வீட்ல இருக்கும் போது மனசுல ஒரு தைரியம் இருந்துச்சு. நீ இங்கிருக்கும் போது ஒருசில நாள்ல உன்கிட்ட சரியாக்கூட பேச மாட்டேன். சாப்பாடு சமைச்சு வச்சுட்டு சாப்பிட வா கண்ணு சாப்பிட வா கண்ணுன்னு நீ பலமுறை கூப்பிட்டாலும் அங்க இங்கன்னு சுத்திட்டிருப்பேன். நான் உன்னை சரியா மதிக்கலையோன்னு குற்ற உணர்வா இருக்குமா"

"சீ அப்படியெல்லாம் சொல்லாத கண்ணு"

"இல்லம்மா நீ எனக்கு திரும்ப வேணும். நீ ஏதாவது பண்ணு. இந்த முறை நான் உன்னை கண்டிப்பா நல்லாப் பார்த்துக்குவேன். நீ சொல்றத கேக்கறேன் ப்ளீஸ்மா"

"இப்ப ஃபீல் பண்ணி என்ன கண்ணு பண்றது? "

"நீ ஏதாச்சும் பண்ணுமா"

"என்னால என்ன கண்ணு பண்ண முடியும்? அங்க லீவ் கிடைக்கிறதே ரொம்ப கஷ்டமா இருக்கு. எமன் வேற ரொம்ப பிசியா இருக்காரு. அவரப் பார்க்கறது அவ்வளவு ஈஸி இல்ல"

வள்ளி சொல்ல சங்கர் அவளை பாவமாய் பார்த்தான்.

"கண்ணு ரொம்ப ஃபீல் பண்ணாத. இது சென்டிமெண்ட் ஸ்டோரி இல்ல" வள்ளி புன்னகையாய் சொல்ல சங்கர் தலையாட்டினான்.

"நம்ம எதிரிங்க யாருன்னு தெரிஞ்சதா?"

"தெரிஞ்சதும்மா. வெத்தலை சாமியார் காட்டிக் கொடுத்துட்டார்."

"ம்"

"உன்னப் பார்த்து உன்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு ஸ்டார்ட் பண்ணலாம்னு வெயிட் பண்ணேன்."

"ரொம்ப சந்தோசம் கண்ணு"

"சரிம்மா என்னோட பழி வாங்கற படலத்தை நான் இப்பவே தொடங்கறேன்"

"ரொம்ப சந்தோசம் கண்ணு அந்த நாலு பேர் கிட்டயும் கவனமா இரு எதாவது ஆபத்துல மாட்டிக்காத"

"சரிமா என்ன ஆசீர்வாதம் பண்ணுமா"

"என்னோட ஆசிர்வாதம் உனக்கு எப்பவுமே உண்டு கண்ணு"

சங்கர் எழுந்தான். கிடைத்த நான்கு வாட்ஸப் நம்பர்களையும் வைத்து மர்டர் என்று க்ரூப் ஆரம்பித்தான்.

சதாசிவம்

நாகராஜன்

பழனி

செல்வம்

அவர்கள் பெயர்களை தன் மொபைலில் சேமித்தான். அவர்கள் நான்கு பேருக்கும் குரூப்பில் இணையுமாறு தனித்தனியே ரெக்வஸ்ட் கொடுத்தான்.

"யார் இது?" மெசேஜ் ஆங்கிலத்தில் வர எடுத்துப் பார்த்தான்.

பழனி அனுப்பியிருக்க குரூரமாய் புன்னகைத்தபடி "நான் உன் எமன்" என்று பதில் அனுப்பினான் .

"எங்க இருக்கே? சீக்கிரம் வா" பழனி பதில் அனுப்பியிருக்க இவன் பைத்தியமா என்று சங்கர் ஒரு நிமிடம் யோசித்தான். ஒருவேளை எமன் என்ற பெயரில் அவனுக்கு நண்பன் யாரும் இருப்பார்களோ? அப்படிக்கூட பெயர் வைப்பார்களா என்ன?

இருக்க முடியாது. இவன் என்னை கலாய்க்கிறான். நான் விளையாடுகிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். இவனுக்கு பலமாக எச்சரிக்கை செய்ய வேண்டியது அவசியம்.

யோசித்த சங்கர் மீண்டும் பழனிக்கு மெசேஜ் அனுப்பினான்.

"இன்று தான் உன் கடைசி நாள் நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அதை செய்து கொள்."

சங்கர் அனுப்ப உடனே பழனியிடமிருந்து பதில் வந்தது.

"நிஜமாவா சொல்ற? அப்ப என் பொண்டாட்டிய ஒரு முறை அறைஞ்சுக்கவா? "

தொடரும்.


Comments