ஒரு கவிதை சொல்லட்டா?(part-4)

என்னோட பொண்டாட்டிய ஒரு முறை அறைஞ்சுக்கவா? என்று பழனி கேட்க சங்கர் திகைத்தான். அவன் மேல் அனுதாபம் வந்தது. பாவம் இறக்கும் முன்னர் அவன் கடைசி ஆசை இப்படி என்றால் அவன் எப்படி வாழ்ந்திருப்பான் என்று அவன் மனம் எண்ணிப் பார்த்தது.

அவனைக் கொன்றுதான் ஆக வேண்டுமா என்று கூட யோசித்தான். ஆனால் அப்பாவை கொன்றவர்களை மகன் கொல்லாமல் விட்டுவிட்டால் உலகம் பழி சொல்லும் என்பதால் வேறு வழி இன்றி தன் மனதை மாற்றிக் கொண்டு அவனை கொன்றே தீருவது என்று முடிவு எடுத்தான்.

சற்று நேரம் மௌனமாய் இருந்தவனின் மொபைலில் பழனி இடம் இருந்து மீண்டும் வாட்சப் செய்தி வந்தது.

"நீ இங்கே வருகிறாயா? நான் அங்கே வரட்டுமா? எங்கே வரவேண்டும் சொல் சீக்கிரம்"

பழனி கேட்டிருக்க இவன் எதற்கு சாவதற்கு இவ்வளவு அவசரப்படுகிறான் இதில் ஏதேனும் உள்குத்து இருக்குமா என்று சங்கர் யோசித்தான்.

"நீ இங்கே வா" என்று தன் முகவரியை அனுப்பினான். கொஞ்ச நேரத்தில் சங்கரின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது.

கதவை திறந்த சங்கர் அதிர்ந்தான். பொன்னம்பலத்தை விட மிக உயரமாய் அகலமாய் ஒருவன் நிற்க சங்கர் அவனை பயத்துடன் பார்த்தான்.

"யாருங்க?" பவ்யமாய் கேட்டான்.

"நான்தான் பழனி"

சங்கருக்கு மயக்கம் போடாத குறை.

பழனி சங்கரை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தான்.

"யாரோ என்னை இங்க கொல பண்றதா…" பழனி முடிக்குமுன் சங்கர் பதறினான்.

"இல்லைங்க அது சும்மா விளையாட்டுக்கு…" சங்கர் சொல்ல பழனியின் முகம் மாறியது.

"டேய்" உச்சமாய் கத்தினான்.

"நீ என்னை கொலை பண்ணுவேன்னு ரொம்ப ஆசையா வந்திருக்கேன். இனிமே என்னோட வீட்டுக்கு திரும்பி நான் போக முடியாது" பழனி சொல்ல சங்கர் பரிதாபமாய் கேட்டான்.

"ஏங்க?"

"உன்கிட்ட கேட்டுட்டுத்தான என் பொண்டாட்டிய நான் அறைஞ்சேன்? திரும்ப அவ கண்ணுல பட்டா நான் தீர்ந்தேன்" பழனி சொல்ல அவன் நிலைமை சங்கருக்கு பரிதாபமாகத்தான் இருந்தது.

"உங்க நிலைமை புரியுதுங்க ஆனா சட்டுன்னு வந்து கொல்லச் சொன்னா ஒரு மாதிரியா இருக்குங்க"

"என்ன சொல்ற?"

"இது என்னோட முதல் கொலைங்க. அதான் கொஞ்சம் படபடப்பா இருக்கு:கொஞ்சம் பொறுத்துக்கங்க"

"டைம் எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்க ஆனா திரும்ப என்ன வீட்டுக்கு அனுப்பிடாத"

"சரிங்க" என்ற சங்கரின் பதட்டமான முகத்தைப் பார்த்த பழனி பாசமாய் கேட்டான்.

"சரக்கு போடலாமா?"

"ம்"

பழனி தன் புல்லட்டில் ஏறிக்கொள்ள சங்கர் பின்னால் அமர்ந்து கொண்டான்.

இருவரும் ஒரு பாருக்குள் சென்றனர்.

"என்ன சாப்பிடுவே?"

"எது வேணாலும்"

"எதுவேணாலும் சாப்பிடு நிதானமா இரு. கொலை பண்றவனுக்கு நிதானம் ரொம்ப முக்கியம்"

"புரியுதுங்க"

பழனி பேரரை அழைத்து "ரெண்டு லெமன் பகார்டி லார்ஜ் " என்றான்.

சங்கரைப் பார்த்த பழனி கேட்டான்.

"உன்னை எங்கயோ பார்த்த நினைவு"

"நான் காளையன் பையன்" சங்கர் சொல்ல பழனி மலர்ந்தான்.

"கமர்கட் காளையன் பையனா நீ?"

"ஆமா"

"ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. " பழனியின் மகிழ்ச்சி சங்கரைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

"எங்கப்பாவ நீங்கதானே உங்க ஃப்ரண்ட்ஸ் கூட சேர்ந்து கொலை செஞ்சீங்க?" சங்கர் கேட்க பழனியின் முகம் மாறியது.

"யாருப்பா அப்படி சொன்னாங்க?"

"என் அம்மா"

"வள்ளி எங்களுக்குத் தங்கச்சி மாதிரி. காளையன் எங்க எல்லாருக்கும் உயிர் மாதிரி. நாங்களே எங்க உயிர் எடுப்போமா சங்கர்? "

"என்ன சொல்றீங்க? அப்ப எங்கப்பாவக் கொன்னது நீங்க இல்லையா?"

"அங்கதான்பா அவங்களோட சாமர்த்தியம் இருக்கு"

"யாரு?" சங்கர் கேட்க பழனி பெருமூச்சு விட்டான்.

"அப்ப உனக்கு நாலு வயசு…" பழனி சொல்லப்போக சங்கர் குறுக்கிட்டான்.

"ஃப்ளாஷ்பேக்கா?"

"ம்"

"கொஞ்ச நேரம் கழிச்சு ஃப்ளாஷ்பேக் பார்க்கலாமா?"

"ஏன் சங்கர்?"

"ஃப்ளாஷ் பேக் சீனுக்கு கொசுவத்தி இல்ல"

"அது கண்டிப்பா வேணுமா என்ன?"

"ஆமா கண்டிப்பா வேணும். பெரிய ஃப்ளாஷ்பேக்கா இருந்தா ஜம்போ காயில் வாங்கணும்."

"ம்"

"அது மட்டுமில்ல. ரெண்டு லார்ஜ் லெமன் பகார்டி சொல்லி இருக்கோம். இப்ப போய் பெரிய ஃபிளாஷ் பேக்கான்னு" சங்கர் சொல்ல பழனி சிரித்தான்.

"அதுவும் சரிதான்"

***

எமன் அன்று மகிழ்ச்சியாய் இருந்தார். சித்ரகுப்தன் எமனிடம் சென்று கேட்டார்.

"ராஜா இன்று நீங்கள் மகிழ்வாக இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்"

"ஆம் சித்ரகுப்தா. நம்மை தணிக்கை செய்த இருவரும் மேலிடத்திற்கு அறிக்கை கொடுத்து விட்டார்கள் அந்த அறிக்கையின் முடிவுகள் வெளிவந்துள்ளன"

"மிக்க மகிழ்ச்சி எமதர்மராஜா. முடிவுகள் என்னவென்று அறிவித்தால் நாங்களும் மகிழ்வோம்"

"நம் எமலோகம் தகுதிச் சான்றிதழை பெற்றுள்ளது. "

"மிக்க மகிழ்ச்சி ராஜா"

"இன்று சிவபெருமான் என்னிடம் அறிக்கையின் முடிவுகளை பற்றித் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்"

"இது நம் அனைவருக்கும் உண்மையிலேயே நல்ல செய்தி"

"ஆனால் சித்ரகுப்தா…?"

"சொல்லுங்கள் ராஜா"

"நாம் அட்டானமஸ் அதாவது தன்னாட்சி பெற்ற எமலோகமாக மாற வேண்டும் என்ற சிவபெருமான் கூறியுள்ளார். அதற்கு நாம் இன்னும் நமது பணிகளை தொடர வேண்டி இருக்கிறது."

"புரிகிறது ராஜா. ஒரு சந்தேகம் கேட்டால் தாங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்"

"கேள் சித்ரகுப்தா"

"எப்பொழுதும் ஃபைல் வேலை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் போதுமா? வேலை செய்வதற்கு நேரம் வேண்டாமா? என் கேள்வியில் பிழை இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ராஜா"

"பிழை ஒன்றுமில்லை ஆனாலும் உலகத்தோடு ஒத்துததானே நாமும் இயங்க வேண்டி இருக்கிறது? இல்லையா?"

"ஆம் ராஜா"

"தன்னாட்சி பெறுவதற்கான திட்டங்கள் நாம் வகுக்க வேண்டும். இந்த வாரத்தில் ஒரு நாள் மீட்டிங் ஏற்பாடு செய்து விடு"

"அப்படியே ஆகட்டும் ராஜா"

"மற்றொரு காரியம் கூட உண்டு"

"சொல்லுங்கள் ராஜா"

"நாம் பூலோகம் சென்று நீண்ட நாட்கள் ஆகிவிட்டன ஒரு முறை இருவரும் பூலோகம் சென்று வருவோமா?"

"அப்படியே ஆகட்டும் எமதர்மராஜா"

***

"காளையன் என் உயிர் நண்பன்" சொன்ன பழனி நான்கு ரவுண்டுகள் முடிவில் இருந்தான். சங்கர் அவனை நெகிழ்வாய் பார்த்தான்.

"ஃப்ளாஷ் பேக் போலாமா?"

"எந்த காயில் பத்த வைக்கட்டும்? சாதாரண காயிலா? இல்லை ஜம்போ காயிலா?"

சங்கர் கேட்க பழனி ஒரு நிமிடம் யோசித்தான்.

"நீ ஜம்போ காயிலே பத்தவை" பழனி சொல்ல சங்கர் பெரிய சைஸ் கொசுவத்திச்சுருளை பற்ற வைத்தான்.

புகை வளையங்களாய் வெளிவர காளையன் நின்றிருந்தான். கமர்கட்டை ரஜினி ஸ்டைலில் வாயில் போட்டவன் "இது எப்படி இருக்கு ? " என்று கேட்க அருகில் இருந்த நான்கு நண்பர்களும் சூப்பர் என்றனர்.

"கண்ணு" யாரோ அழைக்க காலையில் திரும்பிப் பார்த்தான்.

ராசம்மா நின்றிருந்தாள்.

"என்னம்மா?"

"பேச்சிக்கிழவி ஒரு வாரமா இழுத்துட்டிருக்கு"

"அதுக்கு நான் என்ன பண்ண?"

"அப்படி எல்லாம் சொல்லக்கூடாதுபா. எல்லாரும் நீ எப்ப வருவேன்னு எதிர்பார்த்துட்டு இருக்காங்க"

"அம்மா பாட்டு நம்ம வம்சத்துக்கு கிடைச்சிருக்கிற வரம். அதை எப்படி பயன்படுத்தணும்னு ஒரு வரைமுறை இருக்கு"

"அதெல்லாம் இருக்கட்டும் கண்ணு நீ சித்த வந்துட்டுப் போனா இழுத்துட்டு இருக்குற உசுரு தன்னால போயிடும் அது உனக்கு புண்ணியம் கண்ணு"

ஏதோ சொல்ல வந்த காளையன் ராசம்மா தன்னை பரிதாபமாய் பார்ப்பதை உணர்ந்து சொல்ல வந்ததை சொல்லாமல் நிறுத்தினான்.

"உன்னால எல்லாருமே இப்ப இதுக்கு தான் கூப்பிடறீங்க"

"பரவால்ல கண்ணு இந்த ஒரு முறை வந்துட்டு போ"

"சரி வா போலாம்"

ராசம்மா முன்னால் நடக்க காளையன் பின் தொடர்ந்தான்.

கால் மணி நேரத்தில் பேச்சிக்கிழவியின் வீட்டை அடைந்தனர். கூடியிருந்த கூட்டம் காளையனை மரியாதையாகவும் பயத்துடனும் பார்த்தது. விலகி வழிவிட்டது.

காளையன் பேச்சிக்கிழவியின் அருகில் சென்றான். அவளை வணங்கினான். ஒரு ஸ்பூனில் கொஞ்சம் பால் எடுத்து அவள் வாயில் வைத்தான். பால் இறங்கியது. சுற்றுமுற்றும் ஒரு பார்வை பார்த்தான். அதற்குப் பொருள் அனைவரும் வந்து விட்டார்களா? பார்க்க வேண்டியவர்கள் பார்த்துவிட்டார்களா? வேலையை ஆரம்பிக்கலாமா என்பதே அது. அனைவரும் மௌனமாய் இருக்க காளையன் பார்வை ராசம்மா மீது விழுந்தது. அவள் கண்களால் சம்மதித்தாள்.

காளையன் குனிந்தான். பேச்சிக்கிழவியின் காதில் கவிதை சொல்ல ஆரம்பிக்க…

நவீனமாகாமல் இருந்த எமனுலகில் இருந்த எமன் பதறினார்.

"சித்ரகுப்தா"

"சொல்லுங்கள் ராஜா"

"என்னை யாரோ அழைக்கிறார்கள் உடனடியாக நான் பூலோகம் செல்ல வேண்டும்"

"என்ன சொல்கிறீர்கள் ராஜா?"

"பாணர் வம்சத்தைச் சேர்ந்த ஒருவனின் பாடல் என் காதில் கேட்கிறது. யார் காதில் அவன் அந்தப் பாடலை சொன்னானோ அவர்களை உடனடியாக இங்கே கொண்டு வர வேண்டும்."

"புரிகிறது ராஜா. தாங்கள் செல்ல வேண்டிய வாகனத்தை இப்பொழுதே ஏற்பாடு செய்கிறேன்."

அவசரமாய் செல்லும் எமனைப் பார்த்த சித்ரகுப்தன் தனக்குள் யோசித்தார்.

"ஏன் பாணர் பாட்டு யாராவது பாடினா மட்டும் ராஜா கீழே போய் யார்கிட்ட பாடறாங்களோ அவங்களக் கொண்டு வந்திடறார்? பல தடவை கேட்டும் சரியா காரணம் சொல்லல. இந்த தடவை அவர்கிட்ட என்ன காரணம்னு கேட்டுத் தெரிஞ்சுக்கணும் '

***

காளையன் பேச்சிக்கிழவியின் காதில் கவிதை சொன்ன பத்து நிமிடங்களில் அவள் தலை சாய்ந்தது. கூடியிருந்த கூட்டம் அவனை பெருமையாகப் பார்த்தது.

காளையன் மெல்ல வெளியே வந்தான்.

கொஞ்சம் படபடப்பாக உணர்ந்தவன் கமர்கட்டை வாயில் போட்டான்.

***

வள்ளியை பெண் பார்க்க வந்திருந்தனர். அலங்காரம் செய்யப்பட்டிருந்தவளை. காளையன் ஓரக்கண்ணால் பார்க்க வள்ளிக்கு வெட்கம். மெல்லப் புன்னகைத்தாள்.

"என்னப்பா மேற்கொண்டு பேசலாமா?"

அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் கேட்க காளையன் புன்னகையில் சம்மதத்தைத் தெரிவித்த அடுத்த மாதத்தில் ஒரு சுபயோக சுபதினத்தில் காளையன் வள்ளியை கைப்பிடித்தான்.

"மாப்பிள்ள இன்னிக்கு எல்லா பொடுசுங்களயும் கூட்டிட்டு நைட் ரெண்டாவது ஆட்டத்துக்கு நம்ம டென்ட் கொட்டாய்க்குப் போகப்போறோம்." என்ற வள்ளியின் அண்ணன் காதில் வந்து ரகசியமாய் கேட்டான்.

"வேற எதுவும் வேணுங்களா?"

"இல்ல வேண்டாம்"

சற்று நேரத்தில் காளையனும் வள்ளியும் தனித்து விடப்பட வள்ளி புன்னகைத்தாள். காளையன் படபடப்பாய் உணர்ந்தான்.

"கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?"

சொம்பில் நீர் தரப்பட ஒரே மூச்சில் குடித்தான்.

"என்னாச்சுங்க?" வள்ளி கேட்க

"தெரியல. உள்ள படபடன்னு அடிச்சுக்குது. டென்ஷனா இருக்குது"

"கவலப்படாதீங்க நான் சரி பண்ணிடறேன்" சொன்ன வள்ளியை கேள்வியாய் பார்த்தான்.

"எப்படி?"

கேட்டவனைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள்.

"இப்படி"

வள்ளி சொல்ல காளையன் முகம் அவள் இளநெஞ்சில் சுகமாய் மலர்ந்தது.

தொடரும்


Comments