ஆண்மனது(part-1)

வணக்கம் எல்லாரும் நல்லா இருக்கீங்களா? நான் உங்களுக்கு என்னோட கதைய சொல்லப் போறேன் அதுக்கு முன்னாடி நான் யாருன்னு சொல்றேன். ஏன்னா நீங்க என்னப் புரியாம பார்த்துட்டிருக்கீங்க.

சர்வர் வந்து என் அருகில் நின்றார். ஒரு நிமிஷம் சர்வர் கிட்ட ஆர்டர் கொடுத்துட்டு வந்துடறேன்.

"என்ன சார் சாப்பிடறீங்க?" கேட்ட சர்வரிடம் திரும்பினேன்.

"மேன்சன் ஹவுஸ் ஆஃப். ஒரு டபுள்

ஆம்லேட்"

"மிக்ஸிங் சோடாவா தண்ணியா சார்?"

"நமக்கு எப்பவும் தண்ணிதான்பா" புன்னகைத்தபடி சொல்ல சர்வரும் புன்னகைத்து சென்றார்.

என் பேர் பாலா. முழுப்பேர் பாலகிருஷ்ணன். என்னை எல்லாரும் பாலா பாலான்னு கூப்பிட்டு என் பேர் பாலான்னு மாறிடுச்சு.

வயசு முப்பத்தி நாலு. கல்யாணம் ஆயிடுச்சு. அதான் பார்ல உட்கார்ந்திருக்கிறதப் பார்த்தாவே தெரியுதேன்னு சொல்றீங்களா? நெஜமாவே நீங்க வேற லெவல்.

பொண்டாட்டி சிந்து. ஒரு பொண்ணு ஷர்மி. ஆறாவது படிக்கிது.

என்னோட வாழ்க்கையில நடக்கிற சில விஷயங்கள் உங்க கூட பகிர்ந்துக்கப் போறேன். இது கதையான்னு கேட்டீங்கன்னா அப்படியும் எடுத்துக்கலாம்னு தான் சொல்வேன். ஆனா இந்த ரைட்டர் வழக்கமா எழுதற கதையில இருக்கிற பரபரப்பு விறுவிறுப்பு இந்த கதையில இருக்காது. அவ்வளவு ஏன்? இந்த கதைக்கு கிளைமாக்ஸ் கிடையாது. இந்த கதை எனக்கு எப்ப தோணுதோ அப்ப நான் முடிச்சிடுவேன்.

என்ன குழப்பறேன்னு பார்க்கறீங்களா? உண்மையத்தான் சொல்றேன்.

இந்த கதையில நான் என்னோட உணர்வுகளை வெளிப்படையா சொல்வேன். அது சிலருக்கு ஏத்துக்க முடியாது. மத்தவங்களுக்காக நான் வெளியேதான் நாகரீகமா நடிப்பேன். உங்ககிட்ட உண்மையை மட்டும் தான் சொல்லப்போறேன். நீங்க ரெடியா?

***

ஒரு ஞாயிற்றுக்கிழமை பகல் பொழுது.

"இந்த வீட்ல நான் மட்டுமே வேலை செஞ்சிட்டு இருக்கணுமா? அப்பாவும் பொண்ணும் என்னதான் பண்றீங்க?" கேட்டபடி சிந்து என் முன்னால் வந்து நிற்க ஷர்மி புன்னகையுடன் என்னைப் பார்த்தாள்.

"நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்ல ஒரு பொட்டப்புள்ளைக்கு அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுக்கறீங்க" சிந்து என்னிடம் சொல்ல

"அதில்ல சிந்து…" ஏதோ சொல்ல முயன்ற என்னை சிந்து சொல்ல விடவில்லை.

"பேசாதீங்க. துணி துவைச்சிருக்கு மாடியில போய் ரெண்டு பேரும் காயப் போடுங்க"

உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. இனி ஒன்றும் பேசி பயனில்லை.

நானும் ஷர்மியும் பக்கட்டில் துவைக்கப்பட்டிருந்த துணிகளை எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றோம்.

இருவரும் துணிகளை காயப்போடும் பொழுது கண்மணியைப் பார்த்தேன்.

என் முகம் மலர்ந்தது. அவள் அறியாமல் அவள் எழிலை என் விழிகள் ரகசியமாய் பருகிப் பரவசப்பட மனம் எச்சரித்தது. ஷர்மி இருக்கிறாள். ரகசிய உளவாளி.

"என்ன சார் ஃப்ரீயா?" கண்மணி கேட்டதன் பொருள் வேலை ஒண்ணும் இல்லையா இந்த வேலையெல்லாம் நீ செய்ற? என்பதாகும்.

"சும்மா. இன்னைக்கு ஞாயித்துக்கிழமை அதான் வீட்ல கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்னு."

நான் சொல்ல அவள் என்னை வாரினாள்.

"அப்ப மத்த நாள் ஹெல்ப் பண்ண மாட்டீங்களா?" கேட்டவள் நான் அசடு வழிய புன்னகைத்தாள்.

"அப்படி இல்ல" சொன்னவன் மெதுவான குரலில் சொன்னேன்.

"இந்த டாப்ஸ் ரொம்ப நல்லா இருக்கு" அவள் முகம் சட்டென்று சிவந்தது.

"தேங்க்யூ"

கண்மணி இறங்கிச் சென்றுவிட பெருமூச்சு விட்டேன்.

'நம்ம வீட்டத்தவிர எல்லா வீட்டிலயும் பொண்ணுங்க அழகாத்தான் இருக்காங்க'

"அப்பா" ஷர்மி அழைக்க திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

"என்னம்மா?"

"அந்த ஆன்ட்டி எதுக்கு உங்களுக்கு தேங்க்ஸ் சொன்னாங்க?"

"இல்லையே சொல்லலையேம்மா"

"இல்லப்பா நான் பார்த்தேன் உங்களுக்கு அந்த ஆன்டி தேங்க்ஸ் சொன்னாங்க"

மகள் என்னையே பார்க்க மகள் மனதை மாற்ற

"நேத்து உன்னோட கிளாஸ் டீச்சர் பார்த்தேன் " என்று சொல்ல மகள் முகம் மலர்ந்தது.

"மிஸ் என்னப்பா சொன்னாங்க?"

"ஷர்மி இஸ் எ வெரி குட் கேர்ள் அப்படின்னு சொன்னாங்க"

"ஹை நிஜமா அப்படியா சொன்னாங்க?"

"ஆமா"

"நான் இத அம்மாகிட்ட சொல்றேன்" என்றபடி என் பதிலை எதிர்பார்க்காமல் ஷர்மி படிக்கட்டில் இறங்க என் சாமர்த்தியத்தை நானே பாராட்டிக் கொண்டேன்.

வீட்டிற்குள் சென்றதும் டிவி போட்டேன். சிந்து அருகில் வந்து அமர்ந்தாள். அவள் தினசரி பார்க்கும் மகாகாவியமான சீரியல் ஒன்றைப் போடச் சொல்ல எதற்கு மீண்டும் அவளுடன் விவாதித்துக் கொண்டு என்ற உயர்ந்த எண்ணத்தில் அந்த மகாகாவியத்தைப் போட வளர்ந்த குழந்தைகள் இருக்கும் வீட்டின் குடும்பத் தலைவன் ஒருவன் தன் காதலியை திருமணம் செய்யக் கெஞ்சுவதும் அந்தக் காதலி மறுப்பதும் அந்தக் காதலியின் தாயார் மகளை திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள சமாதானப்படுத்துவதும் பார்த்து …

ஷ்ஷ் என்னால முடியல. இதுக்கே ஒரு ஆஃப் சாப்பிட்டாத்தான் எரிச்சல் போகும் போல.

என் மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தேன். சீரியலில் லயித்திருந்தாள். மணிசித்திரத்தாழ் படத்தில் ஷோபனா நினைவிற்கு வர புன்னகைத்துக்கொண்டேன். ஒருவேளை நீங்கள் மணிசித்திரத்தாழ் மலையாளத் திரைப்படம் பார்க்கவில்லை என்றால் அதை நேரமிருக்கும்போது பாருங்கள். அதுதான் தமிழில் சந்திரமுகியாக வந்தது. மணிசித்திரத்தாழ் பார்த்தால் அதன் மகத்துவம் புரியும்.

மெல்ல எழுந்த நான் என்ன செய்வது என்று யோசித்தேன். வெளியே செல்லலாமா? வானத்தைப் பார்த்தேன். மேகமூட்டமாயிருக்க பரவாயில்லை என்றெண்ணியபடி உடை மாற்றி வெளி வந்தேன்.

சிந்து என்னைக் கேள்வியாகப் பார்த்தாள்.

"பக்கத்துலதான்" சொன்ன நான் என் ஹோன்டா ஆக்டிவாவில் கிளம்பினேன். எங்கு செல்வது என்று யோசித்து ஒரு பூங்காவிற்கு சென்று மரத்தின் அடியில் இருந்த பெஞ்சில் அமர்ந்தேன்.

இந்த மாதிரியான காலநிலையில் இப்படி ஒரு பூங்காவில் அமர்ந்திருப்பது ரம்யமாகத்தான் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை என்றாலும் பூங்காவில் ஆள் நடமாட்டம் குறைவாகத்தான் இருந்தது. இப்பொழுதெல்லாம் எல்லோருக்கும் அவரவர் மொபைல் தான் உலகம். ஒரு தனி அறையில் ஒரு மொபைல் இருந்தால் அவர் வெளியில் எங்கும் செல்ல விரும்புவதில்லை. ஒரே இடத்தில் இருந்து நேரத்தைப் போக்குவதால் உடல் பருமன் அதிகமாகிறது. செய்ய வேண்டியவற்றை செய்ய வேண்டிய நேரங்களில் செய்ய முடியாமல் போகிறது. செய்யக்கூடாதவற்றை செய்ய வேண்டியதாகிறது. எதுவும் ஓரளவுதான் என்பது எவருக்கு புரிகிறதோ அவர் மட்டும்தான் அவரைக் காப்பாற்றிக் கொள்கிறார்.

என் மனம் இலக்கின்றி கண்டபடி அலைந்தது. நான் இப்படித்தான். தனியாக இருக்கும் நேரங்களில் என் மனதை எங்கு வேண்டுமானாலும் சுற்று என்று ஃப்ரீயாக விட்டு விடுவேன். எல்லா இடங்களிலும் சுற்றித்திரிந்த பின் களைத்து மீண்டும் என்னிடம் வரும். அப்போது ஆழ் மனதில் ஓர் அமைதி உண்டாகும். சில நேரம்தான் அது நீடிக்கும். சொந்தம் நட்பு என்று தெரிந்தவர் எவரேனும் வந்தால் அந்த தனிமையும் அதனால் விளைந்த நிம்மதியும் உடனடியாக மாறிவிடும்.

இன்று என்னவோ தெரியவில்லை எவரும் என்னை தொந்தரவு செய்யவில்லை. என் மகிழ்ச்சி நீடிக்க வில்லை. நினைத்து முடிப்பதற்குள் என் மொபைல் அடித்தது.

எடுத்துப் பார்த்தேன். என் அக்கா.

பேசலாமா வேண்டாமா என்று மனதில் யோசனை பிறக்க சரி போகட்டும் என்று கால் அட்டென்ட் செய்தேன்.

"பாலா"

"சொல்லுக்கா"

"எப்படிடா இருக்கே?"

"ம் இருக்கேன் நீ ?"

"எனக்கென்ன? நான் நல்லா இருக்கேன்"

"சந்தோஷம்"

"ஆனா அம்மா சந்தோஷமா இல்லையே?"

"என்னக்கா சொல்ற?"

"நீ ஊருக்கு வந்து ஒரு வருஷம் ஆகுதுன்னு ஒரே புலம்பல்."

அக்கா சொல்ல நான் பதில் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தேன்.

"பாலா"

"ம்"

"என்ன பதில் காணோம்?"

"என்ன சொல்ல சொல்ற?"

"ஊருக்கு போய் அம்மாவை ஒரு எட்டு பார்த்துட்டு வா"

"பார்க்கலாம்"

"என்னடா இவ்வளவு விட்டேத்தியா சொல்ற?"

"இல்லக்கா நான் இப்ப கொஞ்சம் நிம்மதியா இருக்கேன் அது திரும்ப என்ன விட்டுப் போகணுமா?"

"என்னடா சொல்ற?"

"உனக்கே தெரியும் அம்மாவுக்கும் இவளுக்கும் ஒத்துப்போகாது. எப்ப ரெண்டு பேரும் ஒண்ணு கூடினாலும் ஏதாவது பிரச்னை வந்திடும். ரெண்டு பேரும் மாறி மாறி என்கிட்ட வந்து எகிறுவாங்க. அம்மா பேச்சு கேக்கறேன்னு அவளும் பொண்டாட்டி பேச்சை கேட்கிறேன்னு அம்மாவும் மாறி மாறி டார்ச்சர் பண்ணுவாங்க. சத்தியமா சொன்னா நான் யார் பேச்சையும் கேட்கறது இல்ல. ஆனா அது யாருக்கும் தெரிய மாட்டேங்குது."

நான் சொல்ல அக்கா மறுமுனையில் ஒன்றும் பேசாமல் மௌனமாய் இருந்தாள். அவள் பெருமூச்சு விடும் சத்தம் மட்டும் கேட்டது.

"சரி விடுறா. குடும்பம்னா அப்படித்தான் இருக்கும். நெறந்து கலந்துதான் போகணும்"

"போதும்கா"

"இப்ப என்னதான்டா சொல்ற?"

"நான் ஒண்ணும் சொல்லல."

"ஊருக்கு எப்ப போற?"

"நேரம் வரும்போது"

அக்கா மேற்கொண்டு ஒன்றும் பேசவில்லை. வைத்துவிட்டாள். நான் இப்பொழுதெல்லாம் என் வீட்டிற்கு செல்வதில்லை. வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் என் மனைவிக்கும் என் அம்மாவிற்கும் ஒத்துப் போவதில்லை. எப்படியாவது சண்டை ஆரம்பித்து விடும். இருவரும் மாறி மாறி என்னை குற்றம் சாட்டுவார்கள். திருமண வாழ்க்கை இப்படி இருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கக் கூட இல்லை. வானத்தைப்போல படம் பார்த்துவிட்டு அதில் வரும் மீனா போன்றுதான் என் மனதில் எதிர்பார்ப்பிருந்தது. நீங்கள் சிரிப்பது புரிகிறது. நான் மீனா போன்று தோற்றம் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மீனா குடும்பத்தை கட்டிக்காப்பது மிகவும் பிடித்திருந்தது. எனக்கு வருபவளும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று உள்ளே ஆசைப்பட்டேன். என் வீட்டாரை பாசமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று. என் வீட்டார் அப்படி ஒன்றும் சிறப்பானவர்கள் அல்லதான். எனக்கும் தெரியும். ஆனாலும் எனக்கு வரப் போகிறவள் எல்லோரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன்.

சிந்துவை பார்த்ததும் எனக்கு மிகவும் பிடித்தது. அவளை பார்ப்பதற்கு என்று அவள் ஊருக்கு ஏதாவது ஒரு வேலையாக சில நேரங்களில் எந்த வேலையும் இல்லை என்றாலும் போவதை வழக்கமாய் வைத்திருந்தேன்.

அவளைத்தான் பார்க்க வந்திருந்தேன் என்பது அவளுக்கும் நன்றாகப் புரிந்திருந்தது. திருமணம் முடிந்தது.

"அம்மா அண்ணன் இனிமே நாம சொல்றத கேட்க மாட்டான் அதனால கவனமா இரு" என் தங்கை ரகசிய குரலில் என் அம்மாவிடம் சொன்னது எனக்கு கேட்டு விட்டது. ஏன் இப்படி சொல்கிறார்கள் என்னைப் பற்றி? திருமணமானால் ஒரு ஆண் மாறி விடுவானா என்ன? அவன் அவனாகவே இருந்தாலும் அப்படி இப்படி என்று பேசி அவனை மாற்றுவது பெரும்பாலும் அவனைச் சேர்ந்தவர்கள்தான்.

எதார்த்தமாக வெளியே வந்த நான் என் மாமியார் என் மனைவியின் காதில் ஏதோ ஓதியபடி இருக்கும் காட்சியைக் கண்டேன். சம்பந்தம் முடிகிற வரை சம்பந்திகள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். சம்பந்தம் முடிந்து விட்டால் சம்பந்திகள் ஒருவரை ஒருவர் மறைமுகமாய் விமர்சிக்கத் தொடங்க அது அப்படியே வேர்விட்டு வளர்ந்துவிடுகிறது.

பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்த நான்

"எக்ஸ்கியூஸ்மீ" என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

தொடரும்


Comments