ஆண்மனது(part-2)

ஆண் மனது 2

ஒரு அழகான இளம் பெண் நின்றிருந்தாள். மழைத்துளி அவள் முகத்தில் பட்டிருந்தது ரோஜாவின் மீது பனித்துளி விழுந்ததற்கு ஒப்பாக இருந்தது. மாநிறத்தில் திருத்தமான களையான முகம். அவளை சட்டென்று உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்க்க இருக்க வேண்டியது மிகவும் சிறப்பாக இருந்தது.

"ஹலோ" அவள் தான்.

"சொல்லுங்க"

"பால்" அவள் சொல்ல எனக்கு புரியவில்லை. என் கண்கள் அவள் கழுத்தின் கீழ் பட்டு மீண்டன.

"விளையாடற பால்" என்றவள் கைகாட்ட என் காலுக்குக் கீழே இருந்த பந்தை அப்போதுதான் கவனித்தேன். நான் எழுந்து கொள்ள அவள் பந்தை எடுக்கக் குனிந்தாள்.

'செம்ம்ம்ம்ம்ம' சில தருணங்களில் நம் விழிகள் மகிழும். விழிகள் மலர்ந்து மகிழ்ந்த தருணம் அது.

பந்தை எடுத்தவள் என்னை ஒரு மாதிரியாக கொஞ்சம் கேவலமாகத்தான் பார்த்துவிட்டு சென்றுவிட்டாள்.

எனக்கு ரசனை அதிகம். காலம் பலரின் ரசனையை காணாமல் போகச் செய்துவிடும். ஆனால் எனக்கு அப்படி அல்ல. ரசனை இல்லாமல் வாழ்வது இயந்திரத்தனம். காலையில் எழுவது முதல் மீண்டும் இரவில் படுப்பது வரை எனக்குப் பிடித்தது என்று ஏதாவது ஒன்றை நிச்சயம் நான் செய்துவிடுவேன். இரவின் அடர்த்தியில் கனமழை பெய்யும்போது கம்பளி போர்த்திக்கொண்டு சுகமாய் உறங்கும் சிந்துவை அமைதியாய் தொல்லைப்படுத்தாது ரசிப்பேன்.

'பாவம் இவள். எங்களுக்காக நிறையவே உழைக்கிறாள். ஏதாவது செய்து இவளை மகிழ்விக்க வேண்டும் '

உள்ளே பாசம் பொங்க போத்தீஸ்க்கு சென்று ஒரு நல்ல சேலை எடுத்து வந்து அவளிடம் ஒருநாள் சர்ப்ரைஸாகக் கொடுத்தேன். அவள் முகம் வியப்பில் மலரும் என்று. ஆனால் அவள் அதை வாங்கிப் பார்த்து

"என்ன விலை?" என்றாள்.

சொன்னேன்.

"உங்களுக்கு எதுக்கு இந்த வேலை?"

"சிந்து"

"இந்தக் கலர்ல என்கிட்ட நிறைய சேலை இருக்கு"

"எல்லாக்கலர்லயும் தான் நிறைய வச்சிருக்கே" நான் சொல்ல முறைத்தாள்.

நான் எதிர்பார்த்த மலர்ச்சியோ மகிழ்ச்சியோ அவள் முகத்தில் இல்லை.

இதை ஒரு நாள் அவள் தம்பியிடம் சொல்லும்போது சிரித்தான்.

"நான்லாம் என் பொண்டாட்டிக்கு எதுவும் எடுத்துத் தரமாட்டேன் மாமா. நீங்களும் என்னை ஃபாலோ பண்ணுங்க." அவன் சொன்னது.

மழை வலுக்கும் போல் தோன்றியது.

எழுந்தேன். நடந்து வரும்போது "பந்து" எங்காவது இருக்குமோ என்று என் விழிகள் அனைவர் மீதும் பட்டு விலகின.

எங்குமில்லை.

காஃபி சாப்பிட இண்டியன் காபி ஹவுஸ் சென்று அமர்ந்தேன்.

காஃபி சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்க்க 'வாவ்' என்று துள்ளியது என் மனம். அடுத்த டேபிளில் "பந்து " அமர்ந்திருந்தது. அருகில் ஒரு பொடியன். அவள் மகனாக இருக்கலாம்.

நான் அவளைப் பார்த்த அதே கணத்தில் அவளும் என்னைப் பார்த்துவிட்டாள். புன்னகைத்தேன். அவள் புன்னகைக்கவில்லை. எதிர்வினையை என்றும் பொருட்படுத்தாமல் இருப்பது என் நல்ல பழக்கங்களில் ஒன்று.

சர்வர் காஃபியைக் கொண்டு வந்து வைக்க காஃபியை கையில் எடுத்து அவளைப் பருகினேன். ஏதாவது பேசத் தோன்றியது.

என்ன பேச?

ஏதாவது.

வேண்டாம்.

ஏன்?

பாவம் அவள்.

நான் என்ன வில்லனா?

உனக்குத்தானே தெரியும் அது?

எனக்குள் புன்னகைத்துக்கொண்டேன்.

பேச முற்படுவதற்குள் தன் மகனை அழைத்துக்கொண்டு வெளியேறியிருந்தாள்.

***

இரவு.

மழை நீடிக்க வேடிக்கை பார்த்தேன்.

இன்று எனக்கு மனம் உற்சாகமாக இருந்தது. வேண்டும் போல் இருந்தது. ஷர்மி தூங்கியிருக்க சிந்து எப்போது வருவாள் என்று காத்திருந்தேன். எங்களுக்கு சில சமிக்ஞைகள் உண்டு. என் மனதை நான் தெரிவிக்க ரூம் ஃப்ரஷ்னர் எடுத்து அடித்தேன். சிந்து அறைக்கு வந்தாள். புன்னகைத்தேன்.

"என்ன?"

"இன்னிக்கு நீ ரொம்ப க்யூட்"

"மத்த நாள்ல ரொம்ப அசிங்கமா இருந்தேனா?" அவள் கேட்க அசடு வழிந்தேன்.

"எப்பவும் க்யூட். இன்னிக்கு ரொம்ப க்யூட்" சொன்னபடி அவளை நெருங்கி அமர்ந்தேன்.

"டயர்டாயிருக்கு" ஒற்றைச் சொல்லில் புரிந்தேன்.

படுத்தவள் தூங்கிவிட்டாள்.

பேய்மழை பெய்தது.

அன்று இரவு என் கனவில் ஓர் இளம்பெண் என் முன் வந்து நின்று "பால்" என்று சொல்ல அவளை அணைத்துக்கொள்கிறேன். தயங்கியவள் சற்றுநேரத்தில் என்னைத் தழுவிக் கொள்கிறாள்..

***

மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு என் அலுவலகம் இருக்கும் அண்ணாநகருக்கு விரைந்தேன்.

அலுவலகத்திற்குச் செல்லும்போது எதிரில் எனக்கு கீழ்ப்பணியாற்றுபவர்கள் காலை வணக்கம் சொல்ல தலையசைத்தபடி என் சேம்பருக்குள் சென்று அமரும்பொழுது மணி பத்து.

நான் என்ன வேலை செய்கிறேன் என்று உங்களுக்கு சொல்லவில்லை அல்லவா?

எஸ்பிஐ லைஃப் அண்ணாநகர் கிளையின் மேலாளர் நான். இங்கே மொத்தம் பதினெட்டு பேர் உண்டு. கொஞ்சம் பெண்களும். அதில் அழகானவர்களும். என் வால்தனத்தை நான் வேலை செய்யும் இடத்தில் காட்டுவதில்லை. அதற்குக் காரணம் எத்திக்ஸ் என்றெல்லாம் நான் பொய் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் என்னைப்பற்றி புரிந்து கொண்டால் என் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்கள் நான் சொல்வதை சரியாக செய்ய மாட்டார்கள் என்பதற்காக மட்டுமே வேலை செய்யும் இடத்தில் நான் கொஞ்சம் ஒழுங்காக இருக்கிறேன்.

"சார்"

நிமிர்ந்து பார்த்தேன். அட்டெண்டர் முகில்

"வா" என்று விழிகளில் சொல்ல உள்ளே வந்தார்.

"ஹெட் ஆபீஸ்ல இருந்து கொரியர் வந்திருக்கு உங்க டேபிள் மேல வச்சிருக்கேன் சார்"

"ம்"

என்ன கொரியர் அது? எடுத்துப் பிரித்தேன்.

இன்று யாரோ புதிதாய் பணியில் சேர்வதற்கான கடிதத்தின் காப்பி.

இதுவரை யாரும் வரவில்லையே. யார் புதிதாய் வரப் போகிறார்கள்? யோசித்த நான் பேர் பார்த்தேன்.

நிஷா.

பேர் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் முதல் நாளிலேயே தாமதமாக வருவதென்றால் அந்தப் பெண்ணுக்கு வேலையின் மதிப்பு தெரியவில்லை. நான் எதற்கு இருக்கிறேன்? தெரியப்படுத்திவிடுகிறேன்.

வரட்டும்.

நான் அன்று செய்ய வேண்டிய வேலையில் மூழ்கினேன்.

அரை மணி நேரம் கடந்திருக்கும். யாரோ என் அறைக்கதவை வெளியில் இருந்து தட்ட "கம்மின்" என்றேன்.

உள்ளே வந்தது "பந்து" ஸாரி நிஷா. என் கண்கள் விரிந்தன. சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை. அவளும் தான்.

நான் சுதாரித்துக் கொண்டேன். பூங்காவில் பார்த்த பாலா என்று அவள் நினைக்கக் கூடாது என்பதற்காக என் முகத்தில் கடுமையைக் கூட்டினேன்.

"குட் மார்னிங் சார்" சொன்னவளுக்கு பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தேன்.

"ஜாயின் பண்ண வந்திருக்கேன்" சொன்னாள்.

"இப்ப டைம் என்ன?"

"ஸாரி சார் பையனுக்கு திடீர்னு உடம்பு சரியில்ல. டாக்டர்கிட்ட காட்டிட்டு டே கேர்ல விட்டுட்டு வர கொஞ்சம் லேட் ஆயிடுச்சு" அவள் கண்களில் தெரிந்த கவலை எனக்கும் கவலையைத் தர காட்டிக்கொள்ளவில்லை.

"ஜாயினிங் ரிப்போர்ட் கொடுங்க"

தந்தாள்.

கையெழுத்து அவளை மாதிரியே அழகாக இருந்தது.

என் முன் இருந்த பெல் அடித்தேன்.

முகில் ஓடிவந்தார்.

"சார்"

"வந்தனாவ வரச்சொல்லுங்க"

முகில் சென்ற அடுத்த இரண்டாவது நிமிடத்தில் வந்தனா என் முன் வந்து நின்றாள்.

"சார்"

"வந்தனா இவங்க நிஷா. இன்னிக்கு ஜாயின் பண்ணியிருக்காங்க."

"யெஸ் சார்"

இருவரும் வெளியேற எனக்குள் பல உணர்வுகள்.

நிஷாவுடன் இருந்தது அவள் மகன்தான். நிஷாவின் கண்களில் ஏதோ ஒரு கவலை. மகனை டே கேர் சென்டரில் விட்டுவிட்டு வந்திருக்கிறாள் என்றால் வீட்டில் மகனைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. கணவன் உடன் இல்லையோ?

என் மனம் நிஷாவைப் பற்றி நினைக்க என்னை நானே கடிந்து கொண்டேன்.

எதற்கு அவள் குறித்து யோசிக்கிறாய்?

சும்மாதான்

பூங்காவில் நீ பார்த்த பெண் உன் அலுவலகத்தில் இணைந்தது மிகவும் தற்செயலாக நடந்த நிகழ்வு. இதை வைத்து எதுவும் ஆதாயம் தேட முயலாதே.

சேச்சே நான் அப்படிப்பட்டவன் ஒன்றும் இல்லை.

நீ எப்படிப்பட்டவன் என்று எனக்குத் தெரியும்.

என் மனம் ஏளனமாய் சொல்ல எனக்குள் நான் அசடு வழிந்தேன்.

மாலை.

வேலை நேரம் முடிந்து வெளியே செல்லும் பொழுது பார்த்தேன்.

நிஷா இன்னும் தன் சேம்பரில் இருந்தாள்.

"நிஷா" அழைத்தேன்.

சட்டென்று பதறி எழுந்தாள்.

"சார்"

"வீட்டுக்குப் போகலையா?"

"கொஞ்சம் வொர்க் சார்"

"ம் வீடு எங்க?"

"அரசரடி சார்"

"அங்க எங்க?"

"மதி தியேட்டர் பக்கத்துல"

"ஓகே " சொன்ன நான் விழிகளால் விடைபெற்று கீழே இறங்கினேன்.

நாம் தினசரி காண்பவர்கள் நிறைய பேராக இருந்தாலும் சில முகங்கள் நம் மனதில் சட்டென்று ஒட்டிக் கொள்ளும். நிஷா என்னை இன்னது என்று சொல்ல முடியாது ஏதோ ஒரு விதத்தில் ஈர்த்தாள்.

தொடர்ந்து வந்த நாட்களில் அவள் என்னைப் பார்த்த பார்வையில் இயல்புத் தன்மை நிறைந்திருந்தது. ஆரம்பத்தில் அவள் என்னை சற்று மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"நிஷா"

"சார்"

"உங்க பையன் எப்படி இருக்கான்?"

"நல்லா இருக்கான் சார்"

"ம் " நான் கொஞ்சம் தயங்கி விட்டு கேட்டேன்.

"ஹஸ்பண்ட் என்ன பண்றார்?"

நிஷா அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் சற்று நேரம் மௌனமாக இருந்தாள்.

"ஐ'ம் டிவோர்ஸி"

எனக்கு அதிர்ச்சியானது. பாவம். இவளுக்கு வயசு இருபத்தேழு அல்லது இருபத்தெட்டுதான் இருக்கும். அதற்குள் இப்படி ஒரு நிலைமையா?

"பேரண்ட்ஸ் கூட இருக்கீங்களா?"

கேட்ட என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.

ஒரு பெருமூச்சு விட்டவள் சொன்னாள்

"எனக்கு அம்மா அப்பா யாரும் இல்ல. ஒரே ஒரு தம்பி அவன் பெங்களூர்ல இருக்கான். இங்க நானும் என்னோட அபி மட்டும் தான்"

"ஸாரி"

"இட்ஸ் ஓகே"

"உங்க நிலைமை மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு"

"சூழ்நிலை எப்படி இருந்தாலும் வாழ்ந்து தானே ஆகணும்?"

"அது கரெக்ட் "

"உங்க பேமிலி பத்தி ஒன்னுமே சொல்லல" அவள் கேட்கப் புன்னகைத்தேன்.

"ஒரே ஒரு பொண்டாட்டி ஒரே ஒரு பெண் குழந்தை" நான் சொன்ன விதம் அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது.

"ஏன் சாருக்கு எத்தனை வேணும்?"

"அய்யோ போதுங்க ஒண்ண சமாளிக்கவே முடியல"

"உங்க மிஸஸ்கிட்ட போட்டுக் கொடுக்கிறேன் இருங்க"

"இல்லங்க நீங்க அந்த மாதிரி பண்ண மாட்டீங்க"

"ஏன்?"

"நீங்க ரொம்ப நல்லவங்க" நான் சொல்ல சிரித்தாள். அவள் சிரித்தது எனக்கு இதமாய் இருந்தது.

சட்டென்று யோசிக்காமல் சொன்னேன்.

"நீங்க சிரிச்சா செம க்யூட்டா இருக்கீங்க"

அவள் சிரிப்பு சட்டென்று நிற்க

"அய்யோ நான் எதார்த்தமா சொன்னேன். " புரிந்து கொண்டவள் மீண்டும் சிரித்தாள்.

தொடர்ந்து வந்த நாட்களில் ஒரு மெல்லிய நட்பு எங்களுக்கும் அறியாமல் எங்கள் இருவருக்குள்ளும் இழையோட ஆரம்பித்தது.

இப்போதெல்லாம் எனக்கு அலுவலகத்திற்கு செல்ல மிகவும் பிடித்திருக்கிறது.

அன்று அலுவலகத்திற்கு வந்து அரை மணி நேரம் கூட ஆகியிருக்காது.

என் மொபைல் அடித்தது.

சிந்துதான்.

"சொல்லு சிந்து"

"ஷர்மி பெரியவ ஆயிட்டா"

தொடரும்


Comments