ஆண்மனது(part-3)

ஆண் மனது 3

வீட்டிற்கு விரைந்தேன். மனம் மகிழ்ச்சியில் எதை எதையோ யோசித்தது. ஷர்மியை குழந்தையாய் கையில் வாங்கிய அந்த தருணம் மீண்டும் நினைவிற்கு வந்தது.

"மாமா"

"குழந்தை பொறந்திருச்சா?"

"பொறந்திருச்சு மாமா. பெண் குழந்தை"

என் மைத்துனன் சொல்லும் பொழுதே என் மாமியார் குழந்தையை துணியில் சுற்றிக் கொண்டு வந்து கையில் கொடுத்தார். மிக கவனமாய் பரவசத்துடன் வாங்கினேன். ஷர்மிக்கு என்ன புரிந்ததோ என்னை பார்த்து புன்னகைத்துக் கண்கள் மூடிக்கொள்ள சுற்றி இருந்த அனைவரும் மகிழ்ந்தனர்.

"அப்பான்னு தெரிஞ்சிருக்கு" உறவுக்கார பெண் ஒருத்தி சொல்ல அனைவரும் ஆமோதிப்பாய் சிரித்தனர்.

ஒவ்வொரு ஆணுக்கும் மனைவி என்பவள் எப்படியோ தெரியாது ஆனால் அவன் மகள் அவனுக்கு இளவரசிதான் என்று எங்கோ படித்திருக்கிறேன். அது உண்மைதான். ஷர்மி அழுதால் எனக்கு ஆகாது. அவள் அழுகையை போக்காமல் வேறு எதிலும் கவனம் போகாது.

குழந்தை என்னையும் சிந்துவையும் படாதபாடுபடுத்தினாலும் அதை நாங்கள் பரவசமாக ஏற்கவே செய்தோம்.

ஷர்மிக்கு ஆறு மாதமாக இருக்கும் பொழுது சிந்து குழந்தையுடன் வீட்டிற்கு வந்து விட்டாள். என் மாமியார் எங்கள் வீட்டில் இரண்டு மாதம் தங்கி இருந்து சிந்துவையும் குழந்தையையும் நன்றாக கவனித்துக் கொண்டார்.எங்கள் வீட்டில் ஓரிரு முறை வந்து பார்த்துச் சென்றனர்.

எனக்கு அதில் வருத்தம்தான். என் அம்மாவிடம் ஒருமுறை கேட்டேன்.

''கொஞ்ச நாள் இங்க வந்து எங்களோட இருந்தா குழந்தைய பார்த்துக்க உதவியா இருக்கும்"

"என்னால வர முடியாதுப்பா. எனக்கே நாலு பேர் செய்யணுங்கற நிலையிலதான் என் உடம்பு இருக்கு.." சொன்ன என் அம்மாதான் என் தங்கையின் பேறுகாலத்திற்கு ஓடி ஓடி உதவி செய்தவர். என்ன இருந்தாலும் மகள்களுக்குச் செய்வதைப்போல் மருமகள்களுக்குச் செய்ய அவர்களும் விரும்புவதில்லை. மருமகள்களும் மாமியார்களை அம்மா ஸ்தானத்தில் வைத்துப் பார்ப்பதில்லை. எங்காவது சில விதிவிலக்குகள் இருக்கலாம். அப்படி இருப்பின் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். என்னைச் சேர்ந்தவர்கள் தூரமாக செல்லும் பொழுது நான் என்ன செய்ய முடியும்? என் அருகில் இருப்பவர்களுக்குத்தானே என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய முடியும்? அப்படி இருந்தாலும் அவன் மாறி விட்டான். அவன் மனைவி வழி சொந்தங்களுக்குத்தான் எல்லாம் செய்கிறான் என்று பேச்சு வேறு.

எனக்கு என் வீட்டாரிடம் இருந்து விலகவேண்டும் என்ற உத்தேசம் இல்லையென்றாலும் அவர்கள் அப்படி என்னை மாற்றி விட்டனர். சிந்து மீது மிகவும் நேசமாகத்தான் இருந்தேன். சிந்து எப்பொழுது பார்த்தாலும் என் வீட்டை குறை சொல்வதால் என் உடன்பிறப்புகளை தவறாக பேசியதால் சிந்துவின் மீதிருந்த ஈர்ப்பும் காலப்போக்கில் எனக்கு குறைந்து விட்டது.

எனக்கு இந்த உலகத்தில் ஒரு பற்றுதல் என்றால் அது என் மகள் ஷர்மிதான். ஷர்மி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நானும் சிந்துவும் ஒன்றாக இருந்திருப்போமா என்பதே சந்தேகம்தான்.

ஷர்மி முதன் முதலில் பள்ளிக்குச் சென்றது முதன் முதலில் பரிசு வாங்கிக்கொண்டு ஓடிவந்தது வீட்டில் நிறைய குறும்பு செய்து சிரிப்பது என்று ஷர்மியின் நினைவுகளில் வீடு வந்து சேர்ந்ததும் தெரியவில்லை.

இறங்கி உள்ளே சென்றேன்.

சிந்து என்னை புன்னகையுடன் பார்த்தாள்.

"நான் சொல்ற சாமான்லாம் கடைக்கு போய் வாங்கிட்டு வந்துருங்க "

"ம்"

அக்கம்பக்கத்து பெண்கள் வீட்டில் இருந்தனர்.

ஷர்மி என்னைப் பார்த்த பார்வையில் குழந்தைத்தனம் காணாமல் போயிருப்பதாகத் தோன்றியது.

எனக்கு கொஞ்சம் திக்கென்றது. நான் வீட்டிற்குள் வந்ததும் புன்னகையுடன் குறும்பு செய்யும் ஷர்மியை நான் இழந்துவிட்டேனோ?

சட்டென்று உள்ளே ஏதோ ஒரு சுமை அழுத்தினாற்போல் உணர்ந்தேன்.

செலுத்தப்பட்ட இயந்திரம் போல் கடைக்குப் போய் வந்தேன்.

என் இரு மைத்துனர்களும் போனில் அழைத்தனர். கோவையிலிருந்து கிளம்பி விட்டதைத் தெரிவித்தனர்.

எனக்கு மலைப்பாக இருந்தது.

பாவம் ஷர்மி. இப்படி கொண்டாடப்படுவதை அவள் எப்படி எடுத்துக் கொள்வாள்? அவள் மனநிலையை எவரும் புரிந்து பேசுவது போல் தெரியவில்லை. ஒருவேளை அவள் இன்னும் குழந்தையாக இருந்தால் நடப்பது எதுவும் அவளுக்கு புரியாமல் போகக் கூடும். உடலில் ஏற்படும் மாற்றம் சட்டென்று மனதையும் மாற்றிவிடும் என்று எப்படி எதிர்பார்க்க இயலும்?

இது அனைத்து மகளிர்க்கும் பொதுவானது தானே? ஒவ்வொருவரும் இதை கடந்து தானே வந்திருக்க வேண்டும்? இதை கண்டும் காணாமல் மௌனமாய் கடந்து செல்ல பழகு.

என் மனம் எனக்கு அறிவுறுத்தியது.

வீட்டிற்கு சென்று நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தேன்.

"அப்பா" எதிரில் ஷர்மி நிற்க

"என்னம்மா?" என்றேன்.

"இந்தாங்கப்பா ஸ்வீட்" கொடுத்த ஷர்மியின் முகத்தில் தெரிந்த குழந்தைத்தனம் என்னை நெகிழ வைத்தது.

சிந்து என் அருகில் வந்தாள்.

"என்னங்க"

"ம்"

"உங்க வீட்டுக்கு சொல்லிட்டீங்களா?"

அவள் கேட்கவும்தான் எனக்கு நினைவிற்கு வந்தது நான் எங்கள் வீட்டிற்கு ஒன்றும் சொல்லவில்லை.

இல்லை என்ற தலையாட்டினேன்.

"போன் பண்ணுங்க"

மொபைல் எடுத்து என் அம்மாவின் எண்ணிற்கு அழைத்தேன்.

"பாலா எப்படிடா இருக்க?"

"நல்லா இருக்கேன்மா"

"ரெண்டு நாளா எனக்கு உன்னோட ஞாபகம் தான். நானே உனக்கு போன் பண்ணலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்"

"அம்மா"

"சொல்லு பாலா"

" ஷர்மி பெரியவ ஆயிட்டா"

"எப்ப பாலா?"

"இன்னிக்குத்தான்"

"சரி நான் கிளம்பி வர்றேன். அருணாக்கும் ஜானகிக்கும் சொல்லிடு"

அம்மா சொல்லிவிட்டு வைக்க என் உடன்பிறப்புக்களுக்கும் தகவல் சொல்லிவிட்டு எழ என் மொபைல் மீண்டும் அடித்தது.

யார் என்று பார்த்தேன். மலர்ந்தேன்.

நிஷா.

"சொல்லுங்க நிஷா"

"இல்ல. சார் சட்டுன்னு போன் வந்த உடனே கிளம்பிப் போயிட்டீங்க. அதான் ஏதாவது பிரச்னையான்னு"

"இல்ல நிஷா. ஷர்மி பெரியவ ஆய்ட்டா"

"ரொம்ப சந்தோஷம் சார்"

அவள் மகிழ்ச்சி அவள் வார்த்தைகளில் வெளிப்பட்டது. அவள் வருவாளா என்ற எதிர்பார்ப்பு சட்டென்று மனதில் ஏற்பட்டது. வரவேண்டும் என்று உள்ளூர மனம் ரகசியமாய் விரும்பியது.

இது என்ன இப்படி ஒரு எதிர்பார்ப்பு? என்னை என் மனம் கடிந்தது. இன்னும் நீ பொறுப்பில்லாமல் இருக்கக் கூடாது.

ம்

நீ ஒரு பொறுப்பான அப்பா.

இப்பொழுது எதற்கு தேவையில்லாமல் இதைச் சொல்கிறாய்?

இதுவரை எப்படியோ. இனிமேல் நீ சரியாக நடக்கவேண்டும். நீ நடந்து கொள்ளும் முறையில் தான் உன் குடும்பத்திற்கு மரியாதை கிடைக்கும். உன் குடும்பத்திற்கு மரியாதை கிடைத்தால் தான் உனக்கு நிம்மதியான வாழ்வும் கிடைக்கும்.

நிம்மதி? அது என்றும் எனக்கு கிடைத்ததில்லை.

பைத்தியம் மாதிரி பேசாதே. தேவையற்ற எதிர்பார்ப்புகளை மனதில் வைத்துக் கொண்டு அவை நிறைவேறவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் நிம்மதி எப்படி கிடைக்கும்? மனம் ஒன்றும் குப்பைக்கூடமல்ல. மனதிலும் குப்பைகள் சேரத்தான் செய்யும். அவ்வப்போது குப்பைகளை வெளியேற்றிக் கொண்டே இருந்தால்தான் மனம் எது குறித்தும் அச்சப்படாது கவலைப்படாது வேதனை கொள்ளாது.

குப்பைகள் என்று எதை சொல்கிறாய்?

தேவையற்ற சிந்தனை எதுவாக இருந்தாலும் அது குப்பைதான். அப்படி சிந்திக்காமல் இருக்க முடியாது:ஆனால் அந்த சிந்தனை உன் இயல்பு நிலையில் இருந்து உன்னை மாற்றிவிடாமல் நீ தான் காத்துக் கொள்ள வேண்டும். தற்காத்துக்கொள். நல்ல நிலையில் நீ இருந்தால் மட்டுமே நான்கு பேர் உன்னை பெருமையாக பேசுவர் நான்கு பேர் உன்னை பெருமையாக பேசினால் மட்டுமே உன் மகளுக்கு நாளை நல்லதொரு வாழ்க்கை அமையும். நாம் இறக்கும் பொழுது நமது பிள்ளைகள் நல்ல நிலைமையில் இல்லாவிட்டால் யோசித்துப் பார். நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் எதுவும் இருக்க முடியுமா?

நான் ஒன்றும் என் கடமையை செய்யாமல் இல்லையே?

கடமையை அனைவரும் தான் செய்கிறார்கள். கடமையை செய்துவிடுவது பெரிய சாதனை அல்ல.

ம்

பாலா

ம்

நல்ல குடும்பத் தலைவனாக இருப்பது மிகவும் எளிதல்ல. அதற்கு உள்ளே தவம் செய்ய வேண்டும். என்னால் என்னைச் சேர்ந்தவர்கள் எப்பொழுதும் பாதிக்கப்படாமல் இருக்க நான் எந்த தவறையும் செய்யாமல் என்னைக் காத்தருள்வாய் இறைவா என்று உள்ளே இடைவிடாமல் தவம் செய்ய வேண்டும். அந்த தவத்தின் பயனாய் நீ தவறு செய்யாமல் இருக்க ஒரு நிம்மதி உள்ளே நிச்சயம் கிடைக்கும். அந்த நிம்மதியை உணர்ந்து பார். வாழ்க்கை என்றும் சலிக்காது.

எனக்குள் விழுந்த யோசனை என்னை சிந்திக்க வைத்தது. அதிகமாக சிந்திக்கிறோமோ என்று என்னை நானே யோசிக்க காபி தேவைப்பட்டது.

சிந்து எங்கிருக்கிறாள் இன்று விழிகளால் தேடினேன். தூரமாய் நின்றபடி உறவுக்காரப் பெண்களிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

நானே போட்டுக் கொள்ளலாம் என்று எழுந்த எனக்கு இன்ப அதிர்ச்சி.

நிஷா வந்து கொண்டிருந்தாள்.

எனக்குள் சட்டென்று ஒரு பரவசம். என்னை நெறிப்படுத்த என் மனம் சொன்னது எல்லாம் காற்றில் பறந்தது. இந்த தருணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வயதிற்கு வந்த பெண் குழந்தையின் அப்பா என்ற நிலையில் இருந்து மாறி ஒரு கல்லூரி மாணவன் போல் எனக்குள் உற்சாகம் கொப்பளித்தது. எதற்காக இவளைப் பார்த்தால் இவ்வளவு மகிழ்வு என்று எனக்கு சத்தியமாக தெரிந்திருக்கவில்லை.

"வாங்க நிஷா."

அருகில் வந்தவள் புன்னகைத்தாள். கையில் ஸ்வீட் பாக்ஸ் வைத்த படி

"பொண்ணு எங்க?" கேட்டாள். அதற்குள் அங்கே வந்த சிந்து என்னை கேள்வியாய் பார்க்க

"இவங்க நிஷா.என் கொலீக்" அறிமுகப்படுத்தினேன். சிந்து நிஷாவை அழைத்துக் கொண்டு ஷர்மியிடம் சென்றாள். என் பார்வை நிஷாவின் மீதே இருந்தது. ஷர்மிக்கு விரல்களால் திருஷ்டி கழித்தவள் தான் வாங்கி வந்திருந்த இனிப்பை அவளிடம் கொடுத்தாள்.

எதிரில் வந்தவளைப் பார்த்து புன்னகைத்தேன்.

"காஃபி சாப்பிடுங்க நிஷா"

எடுத்துக்கொண்டு என் எதிரில் அமர்ந்தாள். எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. மௌனமாய் அவனை ரசித்தேன். சட்டென்று அவள் நிமிர்ந்து பார்க்கத் தடுமாறினேன். அவள் புன்னகைத்தபடி கேட்டாள்.

"என்னாச்சு சார்?"

" நத்திங்" சொன்ன நான் தொடர்ந்தேன். "உங்கள இங்க நான் எதிர்பார்க்கல. இட்ஸ் எ பிளஸன்ட் சர்ப்ரைஸ்"

ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தாள்.

"அபி எங்க?"

"டே கேர் சென்டர்ல இருக்கான்"

"கூட்டிட்டு வந்திருக்கலாமே?"

"இன்னொரு நாள் நிச்சயமா கூட்டிட்டு வரேன்"

"கண்டிப்பா வரணும்"

"ம்" எழுந்தாள்.

"சார்.."

"ம்"

"அப்ப நான் போயிட்டு வரேன்"

"தேங்க்ஸ் நிஷா"

"எதுக்கு சார்?"

"வந்ததுக்கு" சொன்ன என் விழிகளைப் பார்த்து புன்னகைத்தாள்.

"உங்க ஸ்மைல் ரொம்ப க்யூட்" மெதுவான குரலில் நான் சொல்ல சிரித்தாள்.

"சிரிப்பும்" என்ற என் சொல்லில் நிஷாவின் விழிகள் மலர்ந்தன.

தொடரும்


Comments