மாஸ்(part-1)

குறிப்பு: இந்த கதை சப்ஸ்கிரிப்ஷனில் போடப்படும். அதற்காக யாரும் எனக்கு சூப்பர் ஃபேன் ஆக வேண்டாம். எப்பொழுது எந்த கதை நான் எழுதுவேன் என்பது எனக்கும் தெரியாது. திடீரென்று ராஜநாகம் எழுதலாம் நான் பாவம் சார் எழுதலாம் வெள்ளச்சியின் வீடு எழுதலாம் I'm married எழுதலாம். Mass எழுதலாம். என் எழுத்து என் மனதைப் பொறுத்தது. இதற்கு மேலும் எனக்கு சூப்பர் ஃபேன் ஆக நீங்கள் விரும்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

எல்லா கதைகளும் நிச்சயம் முடிக்கப்படும் ஆனால் எப்பொழுது முடியும்?😊😊 அதை ஒவ்வொரு கதையும் தீர்மானித்துக் கொள்ளும். ராஜநாகம் மற்றும் மாஸ் இரண்டு கதைகளும் எனக்கு பிடித்தமான கதைகள் என்பதால் அவற்றை எழுதும் பொழுது நான் கூடுதல் மகிழ்ச்சி அடைவேன்.

சரி கதைக்குப் போலாமா?

1

கோவை மாநகரம். மழை மேகங்கள் திரண்டிருக்க மழை எப்போது வேண்டுமானாலும் வருவேன் என்று மிரட்டியது.

அஸ்வினி மருத்துவமனை.

இரவு நேரம் என்பதால் வழக்கமான கூட்டம் இல்லை.

செக்யூரிட்டி கனகராஜ் பீறிட்ட கொட்டாவியை அடக்கியபடி அமர்ந்திருக்க மற்ற செக்யூரிட்டி வரதன் புன்னகைத்தான்.

"என்ன கனகராஜ் தூக்கம் தள்ளுது?"

"நைட் கொஞ்சம் ஹெவியா சாப்பிட்டேன் போல. "

"என்ன சாப்பிட்டே?"

"பரோட்டா சிக்கன்"

"அப்ப தூக்கம் வரத்தான் செய்யும் " சொல்ல கனகராஜ் புன்னகைத்தான். கேட்டைப் பார்க்க ஒரு காரின் முகப்பு விளக்குகள் இருட்டைப் போக்கியபடி வந்தது.

"வரதா ஏதோ ஒரு கார் வருது." கனகராஜ் சொல்ல வரதன் பார்த்தான். சட்டென்று எழுந்து நின்றபடி சொன்னான்.

"ஏதோ ஒரு கார் இல்ல. டாக்டர் ராகேஷ் கார்."

"சார் எதுக்கு இப்ப வர்றார்?"

"ஏதாவது எமர்ஜென்சியா இருக்கும்."

அவர்கள் பேசிக்கொண்டிருக்க தன் காரில் இருந்து இறங்கிய டாக்டர் ராகேஷ் அவ்வளவு குளிரிலும் வியர்த்திருந்தார். காரிடாரில் அவசரமாக விரைந்தார்.

லிஃப்டை அடைந்து மூன்றாம் நிலையை அடைந்தவர் ஐசியுக்கு விரைந்தார்.

எதிரில் வந்த நர்ஸ் கங்கா அவரை வியப்புடன் பார்த்துக் கேட்டாள்.

"சார்"

"ம்"

"எதுவும் எமர்ஜென்சியா ?"

கங்கா கேட்க டாக்டர் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தார்.

"நீங்க எனக்கு போன் பண்ணிததானே நான் வந்துட்டிருக்கேன்?'

டாக்டர் சொல்ல கங்கா அதிர்ந்தாள்.

"என்ன சார் சொல்றீங்க? நான் உங்களுக்கு போன் பண்ணேனா? இல்லையே?"

கங்கா குழப்பமான முகத்துடன் சொல்ல டாக்டர் ராகேஷ் திகைத்தார்.

'எங்கயோ தப்பு நடந்திருக்கு. எங்க? 'யோசித்தார்.

'யார் போன் செய்திருப்பார்கள்? அதுவும் கங்கா குரலில். எனக்கு அப்போதே மெலிதான ஒரு சந்தேகம் தோன்றியது. ஏன் கங்கா குரல் சற்று வித்யாசமாக இருக்கிறதென்று. அவசரம் என்றதால் அதிகம் யோசிக்காமல் வந்துவிட்டேன். '

தன் அறைக்கு வந்து அமர்ந்தார். வெளியே மழை இடியுடன் பெய்ய ஆரம்பித்தது.

நன்றாக நினைவிருக்கிறது கங்கா தான் போன் செய்தாள் ஆனால் இப்போது இல்லை என்கிறாள். ஒருவேளை கங்காவின் குரலில் வேறு யாராவது செய்திருப்பார்களோ? அது உண்மையில் கங்காவின் குரல் தானோ?

யார் இப்படி செய்திருப்பார்கள்? யோசித்தவர் கவனத்தைக் கலைத்தது அலைபேசி. எடுத்துப் பார்த்தார். புதிய நம்பர்.

"ஹலோ டாக்டர் ராகேஷ்"

"குட் ஈவினிங் டாக்டர் ராகேஷ்"

"குட் ஈவினிங் நீங்க?"

"என் பேர் முக்கியமில்ல டாக்டர். நான் சொல்லப்போற விஷயம்தான் முக்கியம்."

மறுமுனையில் அவன் புன்னகைத்தபடி சொல்ல ராகேஷ் கோபமானார்.

"யார் நீ?"

"டாக்டர் என்ன சூடாயிட்டீங்களா?"

"யார் நீ?"

"உங்க ஸ்டாஃப் நர்ஸ் கங்கா மாதிரி பேசி உங்கள இங்கு வரவழைச்சவன் நான்தான்"

"ராஸ்கல் எதுக்கு அப்படி பண்ணே?"

"இன்னிக்கு உங்கள கொலை பண்றதா திட்டம் போட்டாச்சு. ஆனா உங்க வீட்ல நிறைய பேர் இருக்காங்க. அதான் ஹாஸ்பிடலுக்கு வரவழைச்சோம்."

"என்ன உளர்றே?"

"அய்யோ உளறல் இல்ல சார் உண்மை"

"இடியட் " ராகேஷ் அழைப்பைத் துண்டித்தார்.

வீட்டுக்குச் செல்ல எழுந்தார். மின்சாரம் தடைபட்டு மருத்துவமனை மொத்தமும் இருளானது.

ராகேஷ் திகைத்தார்.

ஏதோ சரியில்லை. உடனே இங்கிருந்து போய்விடவேண்டும்.

நினைத்தவர் தன் அலைபேசியில் ஜெனரேட்டர் ரூமுக்கு அழைத்தார்.

"ஹலோ"

"யாரு முருகனா?"

"ஆமாங்க சார்" பவர் செக்சன் இன்சார்ஜ் முருகன் பவ்யமாய் பதில் சொன்னான்.

"பவர் கட் ஆச்சே. ஏன் இன்னும் ஜெனரேட்டர் ஆன் பண்ணல?"

"சார் ஜெனரேட்டர் என்னாச்சுன்னு தெரியல. வர்க் ஆகமாட்டேங்குது."

"சை" சொன்னவர் தன் அலைபேசியின் டார்ச் ஆன் செய்தபடி படிக்கட்டுகளை நோக்கி நடந்தார்.

அவர் பார்வைக்கு அவன் கிடைத்தான். ரெயின்கோட் அணிந்திருந்தான். மழை நீர் ரெயின்கோட்டில் இருந்து வழிந்தபடி நின்றான். சட்டென்று அவன் முகத்திற்கு டாக்டர் டார்ச்சை அடிக்க அவன் தீர்க்கமாய் டாக்டரைப் பார்த்தான். முகத்தில் நட்பில்லை.

யாரவன்? அவர் எண்ணும்போதே அவன் அவரை நோக்கி நடந்தான்.

ராகேஷ் மனதில் குளிர் அடித்தது.

***

அசோக் டிடெக்டிவ் ஏஜன்சி .

"இந்த சம்மருக்கு கொடைக்கானல் போலாமா? "

டேவிட் கேட்க கார்த்தி புன்னகைத்தான்.

"கேஸ் எதுவும் வராம இருந்தா நிச்சயமா எங்கயாவது போயிட்டு வருவோம். " குரல் வந்த திசையை இருவரும் பார்த்தனர். திவ்யா புன்னகைத்தபடி நின்றிருந்தாள்.

"நாம எதையும் திட்டம் போடக்கூடாது திட்டம் போடாமக் கிளம்பணும். திட்டம் போட்டது எதுவும் இதுவரை நடக்கல " டேவிட் சிரித்தபடி சொல்ல கார்த்தி தலையாட்டினான்.

"ஆமா டேவிட் நீ சொல்றதுதான் சரி. "

"என்ன இன்னிக்கு ஒரே டூர் பிளான்? " திவ்யா கேட்க டேவிட் சிரித்தபடி சொன்னான்.

"எங்கயாவது போய் மைண்ட் ரிலாக்ஸ் பண்ணனும்னு தோணுது "

"தலைவர் எங்க? அவர் ஓகே சொல்லிட்டாரா?" திவ்யா கேட்டாள்.

"டாமி வந்ததில இருந்து அவனுக்கு டாமி தான் ரொம்ப முக்கியம் ஆயிட்டான்" கார்த்தி புன்னகைத்தபடி சொல்ல டேவிட்டும் திவ்யாவும் சிரித்தனர்.

பேசியபடியே திவ்யா ஜன்னல் வழியே வெளியே பார்க்கத் துணுக்குற்றாள்.

யார் அவன்? அவன் பார்வை இங்கேதான் இருக்கிறது. நீண்ட நேரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறான். சற்றுமுன் பார்க்கும்போதும் இருந்தான். அருகில் வேறு யாரும் இருக்கிறார்களா என்று பார்த்தாள். யாரும் இல்லை. உன்னிப்பாய் சுற்றுமுற்றும் பார்த்த திவ்யாவின் பார்வைக்குச் சற்றுத் தள்ளி ஒரு ஹோண்டா சிட்டி கார் நிறுத்தப்பட்டிருந்தது தெரிந்தது.

"கார்த்தி" சன்னக்குரலில் அழைத்தாள் திவ்யா.

"என்னாச்சு திவ்யா?" கார்த்தி சட்டென்று எழுந்து வந்தான்.

"யாரோ ஒருத்தன் ரொம்ப நேரமா நம்மள கண்காணிச்சிட்டிருக்கான் யாருன்னு தெரியல."

திவ்யா பதட்டத்துடன் சொல்ல அவள் பதட்டம் கார்த்தியையும் டேவிட்டையும் தொற்றிக்கொண்டது.

"கார்த்தி" டேவிட் அழைத்தான்.

"ம்"

"நான் கீழே போய் பார்க்கிறேன்"

"நானும் வர்றேன் டேவிட்"

"சரி வா"

இருவரும் அவசரமாய் கீழே இறங்கினர்.

நின்று கொண்டிருந்தவன் முன் சென்றனர்.

"யார் நீ? " கார்த்தி அவனிடம் கேட்க அவன் கார்த்தியை ஏளனப் புன்னகையுடன் ஏறிட்டான். பதில் சொல்லவில்லை.

டேவிட் கோபமானான். அவன் தோள் மீது கை வைக்க முயல அவன் செயல்பட்டான். டேவிட்டின் அடிவயிற்றில் மிக வலிமையாகக் குத்த டேவிட் சுருண்டான். கார்த்தி அவனை எட்டி உதைக்க முயல சட்டென்று விலகிக் கொண்டு கார்த்தியின் கால்களைப் பற்றிக் கீழே தள்ளினான். இருவரும் தரையில் உருண்டனர். அவன் மீண்டும் அவர்களைத் தாக்கத் தயார் நிலையில் இருந்தான்.

டேவிட் கார்த்தி இருவரும் சுதாரித்து எழுவதற்குள் கார் கதவுகள் திறந்து மேலும் இரண்டு பேர் அவர்களை நோக்கி வந்தனர். அவர்கள் கைகளில் கத்தி

***

'ஆபத்து' ராகேஷ் காரிடாரில் தன் அறையை நோக்கி தபதபவென்று ஓடினார். அவன் அதை எதிர்பார்க்கவில்லை. விடாமல் துரத்தினான்.

ராகேஷ் தன் அறைக்குள் அவசரமாக நுழைந்தார். கதவைப் பூட்டிக் கொள்ள முனைய முடியவில்லை. அவனும். உள்ளே நுழைந்திருந்தான்.

அவன்மீது ராகேஷ் அலைபேசியின் வெளிச்சத்தைப் பாய்ச்சினார். முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தான்.

"என்ன டாக்டர் போலாமா?"

"ராஸ்கல் உன்ன சும்மா விடமாட்டேன்" சொன்ன ராகேஷ் டேபிள் மீது இருந்த பெல்லை அழுத்தப் போக அவன் அவரை எட்டி உதைத்தான். ராகேஷ் தாறுமாறாகக் கீழே விழுந்தார்.

"டாக்டர் இப்ப நாம ரெண்டு பேரும் வெளில போயாகணும். என் கூட பேசாம வர்றீங்க. சத்தம் போட்டாலோ என்னக் காட்டிக் கொடுக்க முயற்சி பண்ணாலோ உங்க சாவு ரொம்ப கொடூரமா இருக்கும். ஐ ஸ்வேர்"

சொன்னவனை டாக்டர் ராகேஷ் பயமாய் பார்த்தார்.

அவன் தன் ரெயின்கோட் பாக்கெட்டில் இருந்த அதை வெளியில் எடுத்தான். அது ஒரு மாத்திரை.

"என்ன டாக்டர் அப்படி பார்க்கறீங்க? உங்கள எங்க இடத்துக்கு கொண்டு போறதுக்கு இந்த மாத்திரையை நீங்க விழுங்கறீங்க"

"நோ…"

"அடம் பிடிச்சா இப்பயே செத்துப் போலாம். எப்படி வசதி?" கோணலாய் புன்னகைத்தபடி அவன் கத்தியை வெளியில் எடுக்க அவர் உறைந்தார்.

"அது என்ன மாத்திரை?" தயக்கமாய் கேட்டார்.

"விஷம் கிடையாது பயப்படாம சாப்பிடுங்க" சொன்னவன் டாக்டரின் வாயை வலுக்கட்டாயமாக திறந்து மாத்திரையை உள்ளே போட்டான். ராகேஷ் வேறு வழியின்றி மாத்திரையை விழுங்கினார். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் தலை சுற்றியது.

அவன் அவரை கைத்தாங்கலாய் பிடித்துக் கொண்டான்.

இருவரும் லிப்டில் நுழைந்து வெளியே வந்தனர்.

செக்யூரிட்டி டாக்டருக்கு வணக்கம் தெரிவிக்க டாக்டர் ராகேஷ் ஏதோ பேச முயன்றும் அவரால் பேச முடியவில்லை. அவர் காரில் ஏற்றப்பட்டார்.

சற்று நேரம் கழித்து டாக்டருக்கு மயக்கம் தெளிந்திருந்தாலும் இன்னும் அந்த மாத்திரையின் வீரியம் தலைக்குள் இருந்ததால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை.

தன்னை எங்கோ கொண்டு வந்திருக்கிறார்கள். இது எந்த இடம்? பார்த்தவர் திகைத்தார் அது ஒரு ஹைடெக் லேபரட்டரி. இங்கே இவர்கள் என்ன ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்? எதற்காக இங்கே என்னை கொண்டு வந்திருக்கிறார்கள்? அவர் மனதில் கேள்விகள் எழுந்தன. அப்போது அவர் முன் அவன் வந்து நின்றான்.

"என்ன டாக்டர் ஒரே குழப்பமா இருக்கா? இப்ப தீர்ந்துடும்" சொன்னவன் தன் அருகில் நின்றிருந்த இன்னொருவனை அறிமுகப்படுத்தினான்.

"எங்க பாஸ் ஆதிகேசவன்"

ராகேஷ் பார்க்க ஆறடி உயரத்தில் கோட் அணிந்திருந்த ஆதிகேசவன் புன்னகைத்தான்.

"ரொம்ப நன்றி டாக்டர்"

"எதுக்கு?"

"எனக்காக நீங்க உயிர் கொடுக்கப் போறீங்க" ஆதிகேசவன் சொல்ல ராகேஷ் அதிர்ந்தார்.

ஆதிகேசவன் ரெயின் கோட் அணிந்தவனிடம் சொன்னான்.

"தர்மா முடிச்சிடு"

தர்மா ராகேஷிடம் வந்தான்.

"யார் நீ எதுக்காக..?" டாக்டர் ராகேஷ் கேள்வியை முடிக்கவில்லை. நிமிட நேரத்திற்குள் அவன் தன் கிளவுஸ் அணிந்த கைகளால் அவர் மார்பில் கத்தியைப் பாய்ச்சினான். ரத்தம் வெளியேறத் துவங்க அலற முற்பட்ட ராகேஷின் வாயை அழுத்திப் பிடித்துக் கொண்டான்.

ராகேஷ் தாறுமாறாகத் தன் கை கால்களை உதைத்தபடி தரையில் விழுந்து துடித்தார். அவர் கண்கள் மட்டும் அவன் மீது நிலைத்திருக்க அவன் குரூரமாய் புன்னகைத்தான்.

டாக்டர் ராகேஷ் இறந்துவிட்டதை உறுதி செய்தவன் கத்தியை எடுத்துக்கொண்டான்.

***

கத்தியுடன் வந்த இருவரும் டேவிட் கார்த்தி இருவரையும் சூழ்ந்து கொள்ள இருவரும் திகைத்தனர்.

அவன் புன்னகைத்தான்.

"என்ன பார்க்கறீங்க? இன்னிக்கு உங்க விதி முடிஞ்சிடுச்சு. " சொன்னவன் கத்தியுடன் நின்றிருந்த இருவருக்கும் உத்தரவு பிறப்பித்தான்.

"முடிச்சுடுங்க சீக்கிரம் வேலை முடியட்டும்."

ஒருவன் டேவிட்டை நோக்கி கத்தியை இறக்கினான். விலகிக்கொண்ட டேவிட் அவன் முகத்தை நொறுக்கினான். அவன் கத்திக்கொண்டே விழ டேவிட் அவனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கவில்லை. தன் வலது காலால் அவன் வயிற்றில் உதைக்க அவன் தள்ளிப்போய் விழுந்தான்.

மற்றவனை கார்த்தி வாகாய் பிடித்துக் கொள்ள அவன் அசைய முடியாமல் தவித்தான். அவன் தோளில் தன் வலது கையால் கார்த்தி வெட்ட அவன் மரம்போல் சரிந்தான்.

காத்திருந்தவன் உச்சகட்ட கோபமானான்.

"டேய்ய்ய்" என்று உச்சமாய் கத்தியவன் தன் பாக்கெட்டில் இருந்த ரிவால்வரை எடுத்தான்.

இருவரையும் மாறி மாறி குறிபார்த்தான். இருவரும் பதட்டமாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள அவன் ரிவால்வரின் சேஃப்டி லாக்கரை விடுவித்தான். ட்ரிக்கரை அழுத்தப்போகும் கடைசி நொடியில் அவன் மீது பாய்ந்த டாமி ரிவால்வரைக் கவ்வியது. ரிவால்வரைப் பறிகொடுத்துவிட்டுத் தடுமாறி விழுந்தவன் நம்பமுடியாமல் பார்க்க புன்னகையுடன் நின்றிருந்தான் அசோக்.

தொடரும்.


Comments