பிசாசு தேவதை(part-1)

பிசாசு தேவதை 1

"என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா என்ன?" கேட்டபடி தன் முன் ஆத்திரமாக வந்து நின்ற மனைவி மாலினியை பரிதாபமாய் பார்த்தான் வாசுதேவன். 

அப்பொழுதுதான் ஆபீஸில் பணிபுரிந்து விட்டு களைப்பாய் வீட்டிற்கு வந்திருந்தான். மாலினி வந்து தன்னை கோபமாக பார்ப்பது ஏன் என்று அவனுக்கு இன்னும் புரியவில்லை.

"என்ன விஷயம் மாலினி?"

"ஓ உங்களுக்கு மறந்து போச்சா? நான் எது சொன்னாலும் உங்களுக்கு ஞாபகம் இருக்காது அப்படித்தானே?"

"அப்படி எல்லாம் இல்ல ஆபீஸ் .."

"போதும் நிறுத்துங்க ஊர்ல இல்லாத மாப்பிள்ளையப் பார்த்து எனக்குன்னு கட்டி வச்சாங்க எங்க வீட்ல. அவங்கள சொல்லணும்"

வாசுதேவன் யோசித்தான். இவள் இவ்வளவு தூரம் எரிச்சல் அடைந்து என்னையும் குழப்புவதற்கு என்னவென்று சொன்னால் அதை செய்துவிடலாம் .

என்ன சொல்லி இருப்பாள்?

நன்றாக யோசித்தும் எதுவும் நினைவுக்கு வரவில்லை.

"மாலினி விஷயம் என்னன்னு சொல்லு?"

"மிக்ஸி ஜார் போயிடுச்சுன்னு எத்தனை முறை சொல்றது? "

"அட இது தான் விஷயமா நாளைக்கு வாங்கிட்டு வந்துடறேன் "

"ஐயா சாமி உங்களை என்னால நம்ப முடியாது எனக்கு இப்ப மிக்ஸி ஜார் வேணும் இப்ப போய் வாங்கிட்டு வாங்க." மாலினி சொல்ல வாசுதேவன் திகைத்தான்.

"இப்பவா?"

"ம் ஆமா"

"இப்ப மணி ஒன்பது ஆயிடுச்சு இப்ப கடையெல்லாம் பூட்டி இருப்பாங்க"

"எங்கேயாவது போய் வாங்கிட்டு வாங்க நீங்க திரும்ப வீட்டுக்கு வர்றப்ப மிக்ஸி ஜாரோடத்தான் வர்றீங்க"

மாலினி சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் போக வாசுதேவன் அமைதியாய் புத்தகத்தை படிப்பது போல் நடித்துக் கொண்டிருந்த மகள் ஹரிணியிடம் குனிந்தான்.

"குட்டிமா என்ன பண்றீங்க?" வாசுதேவன் மகளின் நெற்றியில் முத்தமிட்டு கேட்க உள்ளே இருந்த மாளிகை மீண்டும் வெளியே வந்தாள்.

"உங்க செல்லப் பொண்ண அப்புறம் கொஞ்சிக்கலாம். கிளம்புங்க"

மாலினி உத்தரவு பிறப்பிக்க வாசுதேவன் அதை மீற விரும்பவில்லை ஏனென்றால் அதை மீறினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பது அவன் அனுபவத்தில் அவன் ஏற்கனவே கற்ற பாடம்.

முதல் மாடியில் இருந்த தன் பிளாட்டில் இருந்து படியில் கீழே இறங்கினான். தன் ஹோண்டா ஆக்டிவாவை ஸ்டார்ட் செய்தான்.

கடைகள் அனைத்தும் அடைத்திருந்தன. எதற்கும் பஜார் வீதியில் போய் பார்த்தால்? எண்ணம் தோன்ற அதை செயலாக்கினான்.

அங்கும் கடைகள் ஒன்றும் இல்லை எல்லாம் பூட்டி இருக்க என்ன செய்வது என்று சிறிது நேரம் யோசித்தான்.

இப்போது திறந்திருக்கும் ஒரே கடை டாஸ்மாக் மட்டும்தான். எண்ணியவன் டாஸ்மாக் கடை நிறுத்தினான்.

இன்று குடிக்க வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன் ஆனால் எங்கே விடுகிறார்கள்? 

கவுண்டரில் ஒரு ஹாஃப் பாட்டில் 1848 பிராந்தியை வாங்கிக்கொண்டு போய் அமர்ந்தான். எதிரில் யாரோ ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் முகம் கவலையா இருந்தது. 

பரவால்ல உலகத்தில் எல்லாரும் நம்மள மாதிரி கவலையா இருக்காங்க. நாம மட்டும் கவலையா இல்ல. வாசுதேவன் உள்ளே நிம்மதி அடைந்தான். 

உள்ளே பாரில் ஏதோ ஒரு சோகப்பாடல் போட எதிரில் அமர்ந்தவன் அதை ரசித்தான்.

தன் முன் இருந்த பிராந்தியை தண்ணீர் கலக்காமல் அப்படியே குடித்தான்.

அவன் யாரோ யார் பெத்த பிள்ளையோ? ஆனாலும் அவன் மேல் வாசுதேவனுக்கு பரிதாபம் வந்தது.

ஒரு குடிகாரனுக்குத்தான் இன்னொரு குடிகாரனைப் பற்றி அக்கறை இருக்க முடியும். புரிந்து கொள்ள முடியும்.

இப்படி தண்ணீர் சேர்க்காமல் ராவாக அடித்தால் வயிறு என்னாவது குடல் என்னாவது? அவன் மேல் கவலை கொண்ட வாசுதேவன் அவனை அழைத்தான்.

"ப்ரோ"

வாசுதேவன் தன்னை அழைப்பது கூட தெரியாமல் அந்த இளைஞன் ஏதோ ஒரு உலகில் மூழ்கி இருந்தான்.

"ஹலோ ப்ரோ உங்களத்தான்" வாசுதேவன் மீண்டும் அழைத்தான். அந்த இளைஞன் வாசுதேவனை நம்ப முடியாத பார்வை பார்த்தான்.

"என்ன?"

"தண்ணி சேர்க்காம தண்ணியடிக்கிறது ரொம்பத் தப்பு"

"ஏன்?"

"குடல் வெந்து போகும்"

"போனா?"

"உயிர் போயிடும்"

"போனா மயிராச்சு"

"அது சரி" வாசுதேவன் எதிரில் இருப்பவன் உலகத்தை வெறுத்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான். இப்படி உலகத்தை வெறுத்திருக்கிறான் என்றால் நிச்சயமாக காதலித்து இருப்பான். காதலிக்கு வேறு எங்காவது நல்ல இடத்தில் கல்யாணம் ஆகி இருக்கும். அதை தாங்க முடியாமல் தண்ணி அடித்து தன் வாழ்வை முடித்துக் கொள்ள தீர்மானித்திருக்கிறான் போல். வேறு ஏதாவது பெண் வரும்வரை இவனுக்கு சரக்கு மட்டும் தான் துணை. அடிக்கட்டும் அடித்து நன்றாக இன்பம் அனுபவிக்கட்டும்.

வாசுதேவனுக்கு புன்னகை வந்தது.

ஒரு ஆணுக்கு பெண் என்ன அவ்வளவு முக்கியமா? தெரியாது. என்ன பதில் இது இப்படி? தெரியாததை தெரியாது என்று தானே சொல்ல முடியும்?

சரி உனக்கு மாலினி மிகவும் முக்கியமா இல்லையா?

கடினமான கேள்வி.

ஏன்?

பருவ வயதில் எல்லோர் போல் நானும் பெண்ணைக் குறித்து கனவு கண்டேன். வேலைக்கு சென்றபின் காதலித்துப் பார்த்தேன் ஆனால் ஒரு காதலும் கைகூடவில்லை. வீட்டில் மாலினியை நிச்சயம் செய்து விட்டார்கள். கல்யாணம் செய்து கொள் என்றார்கள் செய்து கொண்டேன். அடுத்த வருடமே குழந்தை உண்டானது. இப்போது நாங்கள் மூவரும் தான் உலகம் என்று நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம் அது உண்மைதானா இல்லையா என்று கேட்டால் அதற்கு எப்படி பதில் சொல்ல முடியும்?

அப்படி என்றால் மாலினி உனக்கு முக்கியமாக இல்லையா?

அப்படி நான் சொல்லவில்லை திருமணம் செய்து கொண்டோம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்.

அப்படி என்றால் அவளை நீ காதலிக்கவில்லையா? நிச்சயமாக இல்லை. அவள் மீது நேசம் கொண்டிருக்கிறாயா?

ஆம். 

எவ்விதம்?

ஒரு கணவன் மனைவி மீது கொண்டிருக்கும் நேசம் அது.

அந்த நேசத்தை காதலில் இருந்து எப்படி வேறுபடுத்திப் பார்க்கிறாய்?

காதல் மிகவும் உணர்வுபூர்வமானது காதல் மனதை படபடக்கச் செய்யும். நேசம் நிதானமாக இருக்கும். நேசத்திற்கு எந்தவித பரபரப்பும் இருக்காது மேல் பூச்சு எதுவும் தேவைப்படாது.

அப்படி என்றால் நேசம் உயர்ந்தது என்று சொல்லலாமா?

இரண்டையும் ஒப்பிடத் தேவையில்லை இரண்டுமே உயர்ந்ததுதான் நேசம் காதல் இரண்டுமே ஒரு மனிதனுக்கு தேவைப்படுவதுதான். சிலருக்கு நேசம் காதல் இரண்டும் ஒருவரிடத்தில் உண்டாகும். சிலருக்கு நேசம் ஒருவர் இடத்திலும் காதல் ஒருவரிடத்திலும் தோன்றும். எல்லாம் மனதைப் பொறுத்தது.

அப்படி என்றால் நீ மாலினியைக் காதலிக்கவில்லையா?

இல்லை

வேறு எவரிடமாவது உனக்கு காதல் தோன்றுமா?

இல்லை தோன்றாது அப்படி தோன்றினாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டேன்.

ஏன்?

எனக்கு சமூகத்தில் என் நிலை மிகவும் முக்கியமானது. என் நிலை தாழும்படியான எந்த ஒரு காரியத்திலும் நான் ஈடுபடுவதாக எனக்கு எண்ணம் இல்லை. அதுமட்டுமல்ல வேறொரு காரணமும் இருக்கிறது.

என்ன காரணம்?

ஒன்றும் தெரியாத வரைக்கும் தான் ஒரு மயக்கம் இருக்கும். எல்லாம் தெரிந்தவனுக்கு அப்படி ஒன்றும் மயக்கம் இருக்காது. என் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. என்னதான் என் மனைவியை காதலிக்கவில்லை என்றாலும் எனக்கான கடமையை அவளும் அவளுக்கான கடமையை நானும் நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். 

என்னதான் அவள் என்னை திட்டினாலும் சண்டை போட்டாலும் என் பொறுப்பில்லாத்தனத்தை சுட்டிக்காட்டிப் பேசினாலும் எனக்கு தேவைப்படும் போதெல்லாம் தன்னைக் கொடுத்து என் நிறைவில் அவள் மகிழ்வாள்.

ஆனால் பாவம் எதிரில் அமர்ந்திருப்பவனுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை போல்.

வாசு

ம்

அவன் யார் என்ன என்று எதுவும் தெரியாது அவனுக்கு திருமணம் நடைபெற்றிருந்தால் என்ன நடைபெறவில்லை என்றால் என்ன? இப்பொழுது அரை மணி நேரம் போய்விட்டது இன்னும் அரை மணி நேரத்திற்குள் நீ வீட்டிற்கு செல்ல வேண்டும் சீக்கிரமாக குடித்துவிட்டு செல்.

வாசுதேவன் தற்காலிகமாக அந்த இளைஞன் மேல் இருந்த கவனத்தை விட்டுவிட்டு தன் கிளாத்தில் இருந்த பிராந்தியை எடுத்துக் குடித்தான்.

எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்

ஏசுதாஸ் பாடல் பாரில் பட எதிரில் இருந்த இளைஞன் தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டான்.

அது வாசுதேவனை பாதித்தது.

ஓர் ஆண் இப்பொழுதும் கண்ணீர் வடிக்கிறான் என்றால் அவன் கொண்ட நேசம் உண்மையானது. காதல் தூய்மையானது. அவனுக்கு ஒரு கதை இருக்கும் அது என்னவென்று தெரிந்து கொள்ள வாசுதேவனுக்கு ஆவல் உண்டானது.

"ப்ரோ ப்ளீஸ் அழாதீங்க" வாசுதேவன் சொல்ல அவன் கண்களை துடைத்துக் கொண்டான். வாசுதேவனை நன்றியுடன் பார்த்தான்.

"தேங்க்ஸ் ப்ரோ"

"உங்க நேம் என்ன ப்ரோ?"

"அருண்"

"எந்த ஏரியா?"

"அரசரடி"

அருண் சொல்ல வாசுதேவன் ஆச்சரியமானான்.

"அரசரடியா?"

"ஆமா"

"அங்க எங்கே?"

"மதி தியேட்டர் பக்கத்துல"

"ம்"

"நீங்க சார்?"

"ஒத்தக்கடை"

"ஒத்தக்கடையில் இருந்து இங்க வந்திருக்கீங்களா?"

"ஆமா ஒரு சின்ன காம்பொனன்ட் அங்க கிடைக்கல. அதான் இங்க வந்து பார்த்தேன். இங்கயும் கடை பூட்டிட்டாங்க. சரி வந்தது வந்துட்டோம் அப்படியே உள்ள வரலாம்னு வந்தேன் "

சொன்ன வாசுதேவனை புன்னகையுடன் பார்த்தான் அருண்.

வாசுதேவன் கேட்டான்.

"என்ன பிராப்ளம்? லவ் ஃபெயிலியரா?"

அருண் ஒன்றும் சொல்லாமல் தலைகுனிந்து கொண்டான். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

"அது ஒரு பெரிய கதை சார்"

"என்ன யாரையாவது ஒரு பொண்ண லவ் பண்ணியிருப்பீங்க. அந்த பொண்ணுக்கு வேற இடத்தில கல்யாணம் ஆயிருக்கும். அதான் டாஸ்மாக்கில் உட்கார்ந்து இருக்கீங்க. கரெக்டா ?"

"எப்படி சார்?"

"காலம் காலமா இப்படித்தானே நடக்குது அதான் சொன்னேன்"

"ஆனா சார் நான் அவளை உயிருக்குயிரா காதலிச்சேன்"

"சும்மா கேனத்தனமா பேசாத"

"சார் என்னை என்ன வேணாலும் சொல்லுங்க ஆனா என்னோட காதலத் தப்பா பேசாதீங்க"

"அப்படியா? ரொம்ப தூய்மையான காதலா உன்னோடது?"

"ஆமா சார்"

"அப்ப ஏன் இன்னும் உயிரோட இருக்கே? சாக வேண்டியதுதானே?"

"சார் அவ என்னைக்கு என்ன விட்டுட்டுப் போனாளோ அப்பவே நான் செத்துட்டேன் சார் இப்ப இருக்கிறது வெறும் கூடு சார்"

"அது சரி" 

இருவரும் தங்கள் கிளாஸில் இருந்த பிராந்தியை எடுத்துக் குடித்தனர். சற்று நேரம் ஒரு மௌனம் நிலவியது. 

வாசுதேவன் மொபைல் அடித்தது.

எடுத்தான்.

"எங்க இருக்கீங்க?" மாலினியின் குரலில் கோபம் தென்பட்டது.

"இங்கதான் கடைவீதியில"

"மிக்ஸி ஜார் வாங்கினீங்களா இல்லையா?"

"அது வந்து.."

"இன்னைக்கு நைட் நீங்க வீட்டுக்கு வர வேண்டாம்" மாலினி கட் செய்துவிட மொபைலை பாக்கெட்டில் போட்ட வாசுதேவன் அருணைப் பார்த்து புன்னகைத்தான்.

"என்ன சார் முகத்தில் அசடு வழியுது? வீட்டில் திட்டறாங்களா?" அருண் கேட்க வாசுதேவன் தலைசைத்தான்.

"ஆமா அருண். உன்னோட கதை என்ன? அப்ஜக்சன் இல்லனா என்கிட்ட சொல்லலாம்."

"சொல்றேன் சார்" சொன்ன அருண் கண்களை ஒரு நிமிடம் மூடித்திறந்தான்.

"அவ எனக்குத் தேவதை சார்"

"யார்?"

"மாலினி சார்"

அருண் கண்களை மூடி ரசித்துச் சொல்ல வாசுதேவன் அதிர்ந்தான்.

"என்ன பேர் சொன்னே?"

"மாலினி சார்…"

தொடரும்


Comments