பிசாசு தேவதை(part-2)

பிசாசு தேவதை 2

"மாலினி சார்" அருண் சொல்ல வாசுதேவன் ஒரு நிமிடம் யோசித்தான். ஒருவேளை இவன் என் மனைவியைத்தான் காதலித்திருப்பானோ ? சேச்சே இருக்காது. அவளை யாராவது காதலிக்கக்கூட முடியுமா என்ன?

எப்பொழுதும் சிடுசிடுப்பாய் முகத்தை வைத்துக்கொண்டு கோபமாய் பேசும் ஒரு பெண்ணை எவருக்கு பிடிக்கும்? 

வாசுதேவனுக்கு அந்த சிந்தனை நகைப்பைத் தோற்றுவித்தது. இவனுடைய மாலினி வேறு யாராவதாக இருக்கும். 

மேற்கொண்டு அவனே சொல்லட்டும் என்று வாசுதேவன் அமைதியாக அவன் முகத்தைப் பார்த்தான்.

"அவ என்னோட உயிர் சார்."

"ம்"

"அவளுக்கு அதிர்ந்து பேசக்கூட தெரியாது சார் ரொம்ப மென்மையானவ " அருண் சொல்ல வாசுதேவன் புன்னகைத்தான்.

'அப்ப நூறு சதவீதம் இவன் என்னோட பொண்டாட்டிய லவ் பண்ணல. அந்த மாலினி வேற யாரோ. ' வாசுதேவனுக்குள் எண்ணம் ஓடியது.

"சார்"

"ம்"

"எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு சார்"

"எனக்கும்தான். நாம இதுக்கு முன்னாடி எங்கயும் பார்த்துக்கிட்டதில்ல. ஆனா என்னன்னு தெரியல. உனக்கும் எனக்கும் ஏதோ ஒரு பந்தம் இருக்கிற மாதிரி எனக்குத் தோணுது."

"அய்யோ சார் நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க" அருண் சொல்ல வாசு புன்னகைத்தான்.

"ம்"

"சார் என்னோட கதை நான் உங்ககிட்ட சொல்றேன்"

"ம்"

"இன்னொரு ஃபுல் வாங்கிக்கலாமா?"

"எனக்கு போதும் அருண்"

"சார் எனக்காக உங்க தம்பிக்காக"

"என்னது தம்பியா?"

"ஆமா சார்"

"சரி வாங்கு ஆனா நான் கொஞ்சமாத்தான் குடிப்பேன். சரியா?"

"அது போதும் சார்" சொன்ன அருண் சர்வரை அழைத்தான்.

"1848 ஒரு ஃபுல்" சொன்னபடி பர்ஸை அருண் எடுக்க பர்ஸில் இருந்த மாலினியின் போட்டோ வாசுதேவன் கண்ணில் பட்டது. வாசுதேவன் நம்ப முடியாமல் மீண்டும் பார்க்க போட்டோவில் அவன் மனைவி மாலினி புன்னகைத்தாள். 

அப்படி என்றால் இவன் என் மனைவியைத்தான் காதலித்திருக்கிறான். மாலினியும் இவனை காதலித்திருப்பாளோ? ஆம் என்றே வைத்துக் கொள்வோம். அதனால் என்ன?

நான் ஒன்றும் அதை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணுக்கு யாராவது ஒருவனை பிடிக்கக்கூடாது என்று இருக்கிறதா என்ன? உணர்வுகளுக்கு எந்தவித தடையும் இல்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவருக்கு வேறு யாராவது ஒருவர் பிடித்தமானவராகத் தான் இருப்பார். இது கல்யாணத்துக்கு முன்பாகவும் நடக்கலாம் கல்யாணத்திற்கு பின்பும் நடக்கலாம் ஆனால் நம் மதிப்பை தாழ்த்தும் நிலையில் சமூகத்தில் ஒரு நிலைக்கு வந்தவர்கள் போவதில்லை.

ஆனால் மாலினியைப பார்த்தால் அப்படி ஒன்றும் யாரையும் காதலித்திருப்பாள் என்று நம்புவது மிகக் கடினம். அப்படியும் சொல்ல முடியாது முழுமையாக நேசிக்கத் தெரிந்தவர்கள் அதை எவரும் அறியாமல் முழுமையாய் மறைக்கவும் அறிவார்கள்.

நான் தான் இவள் காதலியின் கணவன் என்று தெரியாமல் இவன் என்னிடம் அவளை காதலித்தது பற்றி சொல்ல ஆரம்பிக்கிறான். நான் அவள் கணவன் என்று அறிந்தால் இவனுக்கு இந்த தைரியம் இருக்காது சட்டென்று ஒரு பயம் எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொள்ளும் அந்த பயம் இவனை உண்மை பேச விடாமல் தடுக்கும்.

இவனைப் பேச விட்டு இவன் கதை என்னவென்று தெரிந்து கொள்வோம் ஏனென்றால் இவன் கதையில் என் மனைவியும் சம்பந்தப்பட்டிருக்கிறாள் அது எதற்கு உனக்கு? இந்த கதை உனக்கு அவசியம் தெரிய வேண்டுமா? ஒருவேளை இவன் காதல் கதையில் உன் மனைவிக்கும் இவனுக்கும் இடையே நெருக்கமாக ஒரு புரிதல் இருந்திருந்தால் உன் நிலை என்னவாக இருக்கும்?

இல்லை நான் அதை ஒன்றும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.

என்ன சொல்கிறாய்? எனக்கு புரியவில்லை.

நீ என்னை கேட்கும் கேள்விக்கு பதில் சொல்கிறேன்.

நான் உன்னை என்ன கேட்டேன்?

ஒருவேளை நெருக்கமான புரிதல் இருந்திருந்தால் அது எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்று.

அதற்கு உன் பதில்?

நெருக்கமான புரிதல் என்று கேட்பதற்கு பதில் நேரடியாகக் கேள் நான் சொல்கிறேன்.

வேண்டாம் விடு

பரவாயில்லை கேள் சொல்கிறேன்

உன் மனைவியும் இவனும் ஏற்கனவே ஒருவருக்கு ஒருவர் தங்களைக்  கொடுத்திருந்தால்?

ம்

உன் நிலைப்பாடு என்ன?

இதில் என் நிலைப்பாடு ஒன்றும் இல்லை ஏனென்றால் நான் அவள் வாழ்க்கையில் வருவதற்கு முன் அவள் வாழ்க்கையில் எவர் எவர் இருந்தார்கள் எவருடன் எப்படி பழக வேண்டும் என்பதெல்லாம் அவள் தீர்மானித்தது அதை நான் மதிக்கிறேன் அவ்வளவுதான்

நான் என்ன கேட்கிறேன் என்று தெரியாமலே நீ பதில் சொல்கிறாய்.

இல்லை தெரிந்து விட்டது வெளிப்படையாக கேள். உடலுறவு தானே?

ஆம், 

நான் மாலினியை பற்றி அவள் அப்படி இருந்திருப்பாளோ இப்படி இருந்திருப்பாளோ என்றெல்லாம் யோசிக்க மாட்டேன். அவள் எப்படி இருந்திருந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. இப்பொழுது அவள் என் மனைவி அவள் எனக்கு உண்மையாக இருக்கிறாள் நான் அவளுக்கு உண்மையாக இருக்கிறேன். எங்களுக்குள் பெரிதாக ஈடுபாடு இல்லை என்றாலும் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது ஓடும். கடைசி வரை ஓடும் என்ற நம்பிக்கை இருக்கிறது அது போதும். அப்படி ஏதாவது ஒரு காரணத்திற்காக வண்டி ஓடாது குடை சாய்ந்தாலும் அதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத தன்மை எனக்குண்டு.ஏனென்றால் நான் செல்வக் குடும்பத்தில் பிறந்து ஒரு கஷ்டமும் புரியாமல் வளர்ந்த குழந்தை அல்ல. நான் என் வாழ்க்கையில் நிறையவே கஷ்டப்பட்டதால் வாழ்க்கை பற்றிய புரிதல் எனக்கு மிகவும் தெளிவானது.

ஒருவேளை நீ உன் மனைவி மாலினியை காதலித்திருந்தால் இப்படி நான் கேட்டதற்கு உனக்கு கோபம் வந்திருக்குமோ?

நிச்சயம் எனக்கு அவள் மேல் கோபம் வராது.

ஏன்?

மாலினி என்பவள் உடம்பு அல்ல. 

அப்படி என்றால்? உடம்பு குடும்பம் நடத்துவதற்கு தேவை இல்லையா?

தேவைதான் அது ஒரு வழி அவ்வளவே. அதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதற்கு ஒன்றுமில்லை. உடம்பை நேசிக்க முடியாது உடம்பை நேசிக்கவும் கூடாது. உடம்பை நேசித்தால் தான் இவள் என் உடைமை என்ற எண்ணம் தீர்க்கமாக மனதில் பதிகிறது. இவள் என் உடைமை என்ற எண்ணம் அவளை நேசிக்க வைக்காது. அதற்குப் பதிலாக அவள் உடம்பின் மீது ஆதிக்கம் செலுத்த வைக்கும். எப்பொழுது எதன் மீது ஆதிக்கம் செலுத்துகிறோமோ அப்பொழுது நேசம் அங்கே சொல்லாமல் விடைபெற்றுச் செல்கிறது.

நீ சொல்வது யோசிக்கப்பட வேண்டியதுதான்.

எனக்குள் நான் எல்லாவற்றையும் அலசுவேன். இது சரியா அது சரியா என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் நானும் சில சமயங்களில் தவறு செய்வேன். தவறு செய்தால் நடந்த தவறு குறித்து வருத்தப்பட்டு கொண்டு மனதை போட்டு உழட்டிக் கொண்டிருக்க மாட்டேன். அதில் இருந்து சட்டென்று வெளியில் வரத் தெரியும் எனக்கு. அது என்னால் எப்படி முடிகிறது என்றால் அது என் எண்ணத்தின் விளைவுதான்.

சிறப்பு

"சார் என்ன சார் ரொம்ப நேரமா என்னமோ யோசிக்கிறீங்க?" அருண் கேட்க வாசுதேவன் கலைந்தான்.

"ஸாரி ஏதோ ஞாபகம். நீங்க உங்க கதைய ஆரம்பிங்க"

வாசுதேவன் சொல்ல அருண்முகம் மலர்ந்தது.

***

"ஹாய் மாலினி நான் இதை சொல்லியே ஆகணும் நீ அவ்வளவு அழகு இல்ல. ஆனாலும் எனக்கு உன்ன ரொம்பப் பிடிச்சிருக்கு. இப்படி சொன்னா ஓகே ஆகுமா?" அருண் கேட்க அவனைப் பார்த்து புன்னகைத்த ஜெனி சொன்னாள்.

"நீ ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகப் போறே"

"ஏன் ஜெனி?"

"சுமாரா இருக்கிற பொண்ணுங்களையே எல்லாரும் ஏஞ்சல்னுதான் சொல்றாங்க. நீ என்னடான்னா ரொம்ப அழகா இருக்கிற ஒருத்திக்கிட்ட போய் நீ அழகு இல்ல எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்னு டயலாக் ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருக்க"

"சரியா இல்லையா? அப்ப எனக்கு ஒரு ஐடியா கொடு ஜெனி" அருண் பாவமாய் பார்க்க ஜெனி சிரித்தாள்.

"அருண்"

"ம்"

"லவ்ல ஒத்திகை பார்க்கத் தேவையில்லை இயல்பா இரு உண்மையா இரு அன்பா இரு போதும்."

"இருந்தா?"

"நீ லவ் பண்றவ உனக்கு நிச்சயம் கிடைப்பா"

"நிஜமாவா?"

"ம்"

சற்று நேரம் அருண் ஒன்றும் பேசவில்லை. அது ஒரு பொறியியல் கல்லூரி. மாநகருக்கு சற்று தள்ளி வெளியே இருக்கிறது. அருண் ஜெனி மாலினி மூவரும் இறுதியாண்டு மாணவ மாணவிகள். அருண் ஜெனி இருவரும் மின்னணுவியல் படிக்க மாலினி கணிப்பொறியியல் படித்துக் கொண்டிருந்தாள்.

அருணுக்கு மாலினியை கண்ட முதல் நாளே ஆழ்மனதில் அவள் தனக்குத்தான் என்ற நம்பிக்கை உதயமானது. ஆனால் அந்த உணர்விற்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் தனக்குள் கேட்டுக் கொண்டான். அது காதல் தான் என்று அவனே தீர்மானித்துக் கொண்டான். காதல் இல்லையோ என்றும் சந்தேகப்பட்டான். பிறகு காதல்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டான். எவ்விதம் இது காதல் ஆகும் என்று அவனுக்குள்ளே எழுந்த கேள்வியை அவன் பதில் தெரியாது புறக்கணித்தான்.

எங்கே அவளிடம் போய் தன் மனதைத் தெரிவித்தால் அவள் படிப்பு பாழாகிவிடும் அல்லது தன் படிப்பு பாழாகிவிடும் என்ற ஏதோ ஒரு எண்ணம் அவனை அவன் மனதை அவளிடம் தெரிவிக்காமல் செய்தது. எப்பொழுதும் அவன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்ப்பது ஜெனிக்குத் தெரிந்தது. சந்தேகம் கொண்ட ஜெனி ஒரு நாள் அவனிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்க அவன் அதில் மாட்டிக் கொண்டான். ஜெனிக்கு அவன் மேல் அனுதாபமாக இருந்தது. 

ஒரு பெண்ணை இவனுக்குப் பிடித்திருக்கிறது ஆனால் அதைப் போய் அவளிடம் சொன்னால் தானே ஏதாவது ஒரு முடிவு தெரியும்? அவளுக்கு இவனைப் பிடிக்கலாம் அல்லது பிடிக்காமல் போகலாம். பிடித்திருந்தால் இருவரும் இணைந்து கொஞ்ச நாட்கள் பூங்காக்களிலும் ஹோட்டல்களிலும் தியேட்டர்களிலும் காதல் வளர்க்கலாம் அல்லது பிடிக்காமல் போனால் இவன் அரசாங்கத்திற்கு மது அருந்துவதன் மூலம் கொஞ்சம் வருமானத்தைக் கொடுக்கலாம். 

யோசித்த ஜெனி அவனை பலவிதமாய் பேசி மாலினியிடம் அவன் காதலைத்  தெரிவிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாள்.

"மாலினி"

"சொல்லு ஜெனி"

"இன்னும் ரெண்டு மாசத்துல நம்ம கோர்ஸ் முடிஞ்சுடும். அதுக்கப்புறம் என்ன பண்றதா உத்தேசம்? "

"ஒண்ணும் பிளான் பண்ணல"

"ம் நீ? "

"கல்யாணம்தான்" சொன்ன ஜெனியை பார்த்து மாலினி சிரித்தாள்.

"மாலினி"

"ம்"

"நீ எப்ப கல்யாணம் பண்ணிக்க போற?"

"ஐடியா இல்ல"

"யாரையாவது ஓட்டிட்டிருக்கியா?"

"சீ இல்ல"

"ஆமா உன்கிட்ட ஒண்ணு கேட்கலாமா?"

"கேளு ஜெனி"

"என்னோட கிளாஸ்மேட் அருண் தெரியும்ல?"

"தெரியுமே"

"அவனப் பத்தி என்ன நினைக்கிற?"

தொடரும்


Comments