பிசாசு தேவதை(part-3)

பிசாசு தேவதை 3

"அவனப் பத்தி நினைக்கிறதுக்கு என்ன இருக்கு?" மாலினி மிகவும் சாதாரணமாக கேட்க ஜெனி திகைத்தாள்.

இவள் மனதில் அவனைப் பற்றி எந்த எண்ணமும் இல்லை போல். அவன் என்னடாவென்றால் ஒரு காவியமே மனதில் கட்டிக் கொண்டிருக்கிறான்.

"ஆமா எதுக்கு திடீர்னு அவனைப் பத்தி கேக்கறே?"

"இல்ல சும்மாத்தான் கேட்டேன்"

"நம்பிட்டேன்" சொன்ன மாலினியின் விழிகள் ஒளிர்ந்ததை ஜெனி பார்த்தாள். அவளுக்குப் புரிந்தது.

'அவன் மட்டும் இல்ல நீயும் மனசுக்குள்ள ஏதோ நினைப்புலதான் இருக்கே. ஆனா வெளிய காட்டிக்காம இருக்கே. பெரிய கேடி தாண்டி நீ. என்கிட்டயா நடிக்கிற?  இப்ப எப்படி அலறி அடிச்சுட்டு வெளிய வரப்போறே பாரு' யோசித்த ஜெனி மிக சர்வ சாதாரணமாக மாலினியிடம் சொன்னாள். 

"அவனுக்கும் கலைவாணிக்கும் ஏதோ சம்திங் சம்திங் இருக்கு"

ஜெனி சொன்ன அடுத்த நிமிடம் மாலினியின் முகம் மாறியது.

" என்னடி சொல்ற நெஜமாவா?"

"ம்"

"அப்படி எல்லாம் இருக்காது அவன் அப்படி இருக்க மாட்டான்"

"உனக்கு எப்படி தெரியும்?"

"தோணுச்சு"

"நீ தான் சொன்னே? அவனப் பத்தி நினைக்கிறதுக்கு ஒன்னும் இல்லன்னு. ஆனா அவனப் பத்தி எதுக்கு உனக்கு தோணனும்?" ஜெனி அவள் கண்களை பார்த்து கேட்க மாலினி தடுமாறினாள். அவள் தடுமாற்றம் ஜெனிக்கு சிரிப்பை வரவழைத்தது.

"மாலினி"

"ம்"

"நான் பொய் தான் சொன்னேன்"

"பொய்யா?"

"ஆமா"

"ஏன்?"

"அவன் மனசுல யாரோ இருக்காங்க ஆனா அது கலைவாணி இல்ல." ஜெனி சொல்லி முடிப்பதற்குள் மாலினி ஆர்வமாய் கேட்டாள்.

"அவன் யாரை லவ் பண்றான்?"

கேட்டவளை ஆழமாய் பார்த்த ஜெனி புன்னகைத்தாள்.

"தெரிஞ்சுக்கிறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கே போல இருக்கு"

"சேச்சே அப்படிலாம் ஒண்ணும் இல்ல சும்மா கேட்டேன்"

"அப்ப சரி. விடு. அவன் கதை நமக்கெதுக்கு?" ஜெனி சொல்ல மாலினி ஒன்றும் சொல்லாமல் ஜெனியைப் பார்த்தாள்.

"அப்புறம் பார்க்கலமா?" ஜெனி கேட்க மாலினி அழைத்தாள்.

"ஒரு நிமிஷம்"

"என்ன?"

"அவன் யாரை லவ் பண்றான்?"

"கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமா?"

"ஆமா சொல்லு"

"அவன்கிட்டயே கேட்டுத் தெரிஞ்சுக்க" ஜெனி சிரித்தபடியே சொல்ல மாலினி தனக்குள் தவிப்பது ஜெனிக்குப் புரிந்திருந்தது.

***

"அவளுக்கு உன்னப் பிடிச்சிருக்குடா" ஜெனி சொல்ல அருண் மகிழ்ச்சி தாங்க முடியாமல் கேட்டான்.

"நிஜமாவா?"

"ம்"

"ரொம்ப தேங்க்ஸ் ஜெனி"

"உன் தேங்க்ஸ் எல்லாம் எனக்கு வேண்டாம். ட்ரீட் கொடு."

"கண்டிப்பா"

"அருண்"

"ம்"

"அவளுக்கு உன்னப் பிடிச்சிருந்தாலும் உன் மனசுல இருக்கறது அவதான்னு சொல்லாம வந்துட்டேன். அதுக்கு காரணம் என்ன தெரியுமா? நீ போய் உன்னுடைய விருப்பத்தை அவ கிட்ட நேரா சொல்லு. பொண்ணுங்களுக்கு அவங்கள லவ் பண்றவங்க நேரா வந்து லவ் சொல்றப்ப வர்ற சந்தோஷம் தனி."

"என்ன ஜெனி சொந்த அனுபவமா? செமயா கலக்கற?"

"இல்ல அருண். "

"ம்"

"நேராப் போய் மாலினிகிட்ட பேசு. எல்லாம் சரியா வரும்"

"ம்"

*** 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.

கிழக்கு கோபுரத்தின் வழியாக அருண் மாலினி இருவரும் உள்ளே நுழைந்தனர். 

மீனாட்சியைத் தரிசித்தவர்கள் சுந்தரேஸ்வரரை வழிபட்டனர். விபூதி விநாயகரை வணங்கிவிட்டு தெப்பக்குளத்தில் படிகளில் வந்து அமர்ந்தனர்.

"சொல்லு அருண்"

மாலினி அவனையே பார்க்க அவனுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. தன்னையே பார்க்கும் மாலினியின் முகத்தை இமைக்காமல் பார்த்தான்.

என்ன அழகு இவ. எல்லாரும் பொண்ணுங்கள நிலா கூட ஒப்பிடுவாங்க. ஆனா நிலாக்குக் கூட கோடு மாதிரி ஏதாவது இருக்கும். இவ முகம் அப்படியே குழந்தை மாதிரி. ரெண்டு கண்ணு திறந்து இவ என்னைப் பார்க்கறதுல என்னோட உச்சந்தலையில அருவித் தண்ணிய யாரோ தெளிக்கிற மாதிரி ஜில்லுன்னு இருக்கு.

***

"எப்படி இருந்துச்சுன்னு சொன்ன?" வாசுதேவன் கேட்க அருண் மீண்டும் கண்கள் மூடி சிலாகித்தபடி சொன்னான்.

"மீனாட்சி அம்மன் கோவிலில் முதல்முறையா அவ என்ன பார்க்கறப்ப  அப்படியே அருவித்தண்ணி கொட்டுன மாதிரி இருந்தது சார்" 

சொன்னவனை பார்த்த வாசுதேவன் தனக்குள் நினைத்துக்கொண்டான்.

'மவனே உனக்கு அவ கூட கல்யாணம் ஆயிருந்தா இப்ப சுடுதண்ணிய மேல கொட்டின மாதிரி இருந்திருக்கும். தப்பிச்சிட்டே. இந்த காதல்ல தோக்கறவங்களாலத்தான் காதல் இன்னும் இந்த பூமியில இருக்கு. எல்லா காதலர்களும் ஜெயிச்சிருந்தா யாருமே காதலப் பத்தி பேசிக்கூட இருக்க மாட்டாங்க' 

வாசுதேவனுக்கு சிரிப்பு வந்தது. 

தன்னை அவள் முதல்முறையாக பார்த்தது எப்பொழுது? யோசித்தான்.

பெண் பார்க்க சென்ற போது குனிந்த தலை நிமிரவில்லை. 

ஏன் இவள் என்னைப் பார்க்காமல் பழைய தமிழ் பட ஹீரோயின் போல் குனிந்த தலை நிமிராமல் இருக்கிறாள்?  எனக்குள் கேள்வி எழுந்தது ஒரு வேளை பிடிக்காமல் பெரியவர்கள் சொல்கிறார்கள் என்று தலையாட்டுகிறாளோ? அப்படி என்றால் அதைக் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பிடிக்காத ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு வந்து மௌனராகம் மோகன் போல் அவள் மனதை மாற்றிக் கொண்டிருப்பதற்கு எனக்கு நேரமில்லை.

"பொண்ணு கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" 

நான் சொல்ல

"அது எங்களுக்குப் பழக்கமில்ல எதப் பேசினாலும் கல்யாணத்துக்கு அப்புறம்தான் பேச முடியும். நாங்க எங்க பொண்ண அப்படித்தான் வளர்த்து வெச்சிருக்கோம்" 

சொன்ன வழுக்கை மண்டையன் மட்டும் இப்போது இருந்திருந்தால் அவன் தலையில் இந்த பாட்டிலை அடித்து உடைத்திருப்பேன்.

"சார்"

"ம் சொல்லு அருண்"

"என்ன அடிக்கடி ட்ரீம்க்குப் போயிடறீங்க?"

"அது வேற ஒண்ணும் இல்ல. இந்த கதையில நாம ரெண்டு பேரும் ஹீரோவாம்.  ரைட்டர் சொல்லி இருக்காரு. அதான்"

"சார் நீங்க ஹீரோ சார் நான் ஹீரோ இல்ல சார்"

"என்ன சொல்ற?"

"லவ் பண்ண பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாத ஜீரோ சார் நான்" சொன்ன அருண் பிராந்தியை எடுத்துக் குடிக்க 

"ஷ்ஷ் முடியல" என்றான் வாசுதேவன்.

"சார்"

"ம்"

"நீங்க யாரு என்னன்னு எனக்கு தெரியாது சார். ஆனா என்னோட கதையை நான் உங்ககிட்ட சொல்லும் போது எனக்கு மனசுல இருக்குற பாரம் இறங்குது சார்"

'உனக்கு இறங்குது. ஆனா எனக்கு.?'

"சார் என்னோட கதையை சொல்லவா? உங்களுக்கு ஒண்ணும் அப்ஜெக்ஷன் இல்லையே? உங்க வைஃப் உங்களை தேட மாட்டாங்களா?"

"மிக்ஸி ஜார் இல்லாம வீட்டுக்குள்ள என்ன ஏத்த மாட்டா இன்னிக்கு. பார் மூடறதுக்குள்ள உன்னோட கதை முடிஞ்சுருமா?"

"கஷ்டம்தான் சார்"

"பரவால்ல சொல்லு. ஒருவேளை நம்மள பாரிலிருந்து வெளியே தள்ளி விட்டாங்கன்னா பக்கத்துல தான் பார்க் இருக்கு அங்க போய் உட்கார்ந்துக்கலாம்."

"சூப்பர் ஐடியா சார்"

"சரி உன்னோட கதையை சொல்லு அப்புறம் என்ன நடந்துச்சு?"

"எங்க விட்டேன் சார்?"

"உன்னோட தலையில அருவி கொட்டுச்சுன்னு சொன்னே"

"உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி சார்"

"அப்புறம் என்னப் பாராட்டலாம் முதல்ல கதைய சொல்லு"

***

"அருண்"

"ம்"

"என்ன அருண் ஒன்னும் சொல்லாம என்னையே பார்த்துட்டிருக்கே?" மாலினி கேட்க அருண் புன்னகைத்தான்.

"என்னோட மனசுல இருக்கிறத உன் கிட்ட வெளிப்படையா சொல்லணும்னு இந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உன்னை கூப்பிட்டு வந்திருக்கேன்"

"சொல்லு"

"ஒரு பௌர்ணமி நாள் நைட் நம்ம காலேஜ் ஆடிட்டோரியத்துல ஃப்ரெஷர்ஸ் டே செலிபரேஷன் நடந்துட்டு இருந்துச்சு. எதார்த்தமா ஒரு பொண்ணப் பார்த்தேன். சட்டுன்னு அந்த முகம் மனசுக்குள்ள ஒட்டிக்கிச்சு. எத்தனையோ முகங்களை எத்தனையோ நாள் கடந்து வர்றோம். ஆனா இந்த முகம் ஏன்னு தெரியல என்னை உள்ள படாத பாடு படுத்துச்சு. இந்த மாதிரி எனக்கு எப்பவுமே நடந்தது இல்ல இதுக்கு என்ன காரணம்? எனக்குத் தெரியல. யாரு கிட்ட கேக்கறதுன்னு புரியல. நான் யோசிச்சேன். எனக்கு என்ன காரணம்னு சொல்லத் தெரியல. செகண்ட் இயர் தேர்ட் இயர் இப்படி வருஷங்கள் ஓடுச்சேத் தவிர எனக்கு வேற யாரையும் பார்க்கக்கூட தோணலை. எனக்குள்ள தோணுன எல்லா ஃபீலிங்க்ஸையும் எனக்குள்ளேயே வச்சுக்கிட்டேன். ஆனா எத்தனை நாள்? ஒரு நாளாவது என்னோட உணர்வை நான் தெரியப்படுத்தணும். இல்லையா? இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம கோர்ஸ் முடிஞ்சிடும். அந்த முகத்தை இனிமே என்னால பார்க்க முடியாம போயிருமோன்னு பயம் என்னை உள்ள அரிக்க ஆரம்பிச்சுடுச்சு. எனக்கு வேற ஒண்ணும் வேண்டாம். அந்த முகத்தை இந்த வாழ்க்கையில நான் சாகற வரைக்கும் பார்த்துட்டே இருக்கணும். எனக்கு அந்த வரம் வேணும். அந்த வரம் கொடுக்கிற தேவதை வேற யாரும் இல்ல நீ தான்."

அருண் பேசி முடித்திருக்க அங்கே சற்று நேரம் மௌனம் நிலவியது.

மாலினி ஒன்றும் சொல்லாமல் தெப்பக்குளத்தை வேடிக்கை பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள். 

உள்ளே மனம் அவள் கட்டுப்பாட்டையும் மீறி பூரிப்படைந்தது. 

'நீ ஃபீல் பண்ணத சொல்லிட்டே அருண். நான் சொல்லல அவ்வளவுதான். உனக்கும் எனக்கும் வித்தியாசம் ஒண்ணுமே இல்ல. எப்ப நான் உன்னை முதன் முதல்ல பார்த்தேனோ அப்ப எனக்குள்ள ஒரு இனம் புரியாத உணர்வு. நீ எங்கயாவது இருந்தா எனக்கு மனசு சந்தோசப்படும். பல நாள் நீ எங்கயாவது கண்ணுக்கு தட்டுப்படுவியான்னு தேடியிருக்கேன். உன்னை பார்க்க முடியாத நாளில் உன்னோட டிபார்ட்மெண்டுக்கு வருவேன். ஜெனிகிட்ட பேசற மாதிரி அப்படியே உன்னைப் பார்த்துட்டு போயிருவேன். ஏன் நான் இப்படி எல்லாம் பண்றேன்? எனக்கு என்ன வேணும்? எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனா ஒரு சந்தோசம். உன்ன ஒரு நாள்ல ஒரு முறையாவது பார்த்தா அந்த நாள் எனக்கு ரொம்ப நல்ல நாள். காலையில குளிச்சு டிரஸ் பண்றப்ப உனக்கு எந்த கலர்ல பிடிக்கும்னு யோசிச்சிட்டு இருப்பேன். உன்ன பார்க்க முடியாத நாள்ல நான் போட்ட டிரஸ் திரும்ப நான் போடறதே கிடையாது. தெரியுமா உனக்கு? அந்த டிரஸ் போட்டுட்டு வந்தா உன்னப் பாக்க முடியாதுன்னு சென்டிமென்ட். இதெல்லாம் நான் வெளில  சொன்னா என்னை லூசுன்னு தானே சொல்லுவ நீ? ஆனா பரவால்ல நான் இப்படித்தான். எனக்கு உன்ன ரொம்பப் பிடிக்கும் அருண்'

தனக்குள் எண்ணிக்கொண்டவள் தன்னையும் மீறி புன்னகைத்தாள். 

அவளையே பார்த்த அருண் மெதுவாய் கேட்டான்.

"மாலினி"

"ம்"

"ஒண்ணுமே சொல்லல நீ"

"என்ன சொல்லணும்?"

"ஏதாவது"

"அருண்"

"ம்"

"உன் கூட கோவிலுக்கு வந்து இப்படி உட்கார்ந்து இருக்கேனே? உன்னப் பிடிக்காமயா உன் கூட வந்திருக்கேன்?"

தொடரும்


Comments