பிசாசு தேவதை(part-4)

பிசாசு தேவதை 4

"உன்னப் பிடிக்காமயா உன்கூட வந்திருக்கேன்?" மாலினி கேட்க அருண் பரவசமானான்.

"மாலினி" சந்தோஷத்தில் அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.

"ம்"

"தேங்க்ஸ்"

"எதுக்கு?"

"தெரியல. சொல்லத் தோணுச்சு"

"பைத்தியம்"

"ஆமா"

"ஆமாவா?"

"உன் மேல நான் எப்பவும் பைத்தியம் மாலினி"

"நானும்தான்"

***

"அன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் சார். மதுரை மொத்தமுமே எல்லாருமே சந்தோஷமா இருந்த மாதிரி தோணுச்சு. எங்கயாவது ஒரு பெரிய மலை மேல் ஏறி நின்னு மாலினி ஐ லவ் யூ அப்படின்னு கத்தணும்னு தோணுச்சு. "

அருண் சொல்ல வாசுதேவன் ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தான்.

'இவன் மிகவும் உண்மையாக அவளை விரும்பி இருக்கிறான் அதுதான் இத்தனை சந்தோசம் காதல் இத்தனை சந்தோசம் தருமா என்ன? எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் எனக்கு காதல் அனுபவம் இல்லை. 

பொய் சொல்லாதே. உனக்கு எவரையும் பிடிக்கவில்லையா என்ன?

நிச்சயமாக இல்லை ஏனென்றால் ஒருவரை பிடிப்பது என்பது வேறு ஒருவர் இல்லாமல் நாம் வாழ முடியாது என்ற நிலைதான் காதல். அப்படி காதலிப்பது என்பது வேறு.

சரிதான்

இந்த உலகத்தில் காதல் அனுபவம் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். பெறாதவர்கள் தங்களுக்கு கிடைத்த தத்தம் துணைகளை நேசித்து மகிழ்கின்றனர். எனக்கு அருணைப் பார்த்தால் சற்று பொறாமை தோன்றியது. என் மனைவி இவனை காதலித்திருக்கிறாள். என்னையும் அவளுக்கு பிடிக்குமா? எனக்கு வேண்டியது எல்லாம் செய்கிறாள் எனக்கான தேவைகளை கவனித்துக் கொள்கிறாள் ஆனாலும் ஏதோ தெரியவில்லை இவனை பிடித்த அளவிற்கு என்னைப் பிடித்திருக்காது என்று தோன்றியது.

என்மேல் ஒரு சுயவிரக்கம் தோன்றிய அதே வேளையில் அவள் மேல் பரிதாபமும் தோன்றியது. பாவம் காதலித்தவனை ஏதோ காரணத்திற்காக பிரிந்து விட்டாள். என்ன காரணமாக இருந்திருக்க முடியும்? இப்பொழுதும் இவன் இவ்வளவு உண்மையாக இருக்கிறான் என்றால் இவன் மேல் தவறு இருக்க வாய்ப்பில்லை. அதேநேரம் மழை நீயும் குறை சொல்ல முடியாது. இவர்கள் காதலில் நான் கணவன் என்ற நிலையிலிருந்து மாறி ஒரு பார்வையாளன் என்ற முறையில் பார்த்தால் எங்கே தவறு நடந்தது என்பதை என்னால் அனுமானிக்க முடியும். 

எனக்கு அருணைப் பார்க்க பாவமாக இருந்தது. உண்மையாக காதலிக்கும் யாரும் பிரிவொன்றை சந்தித்தால் அவர் மீது அனுதாபம் எவர்க்கும் ஏற்படும் அல்லவா? அந்த அனுதாபம் எனக்கு அவன் மீது தோன்றியது.

"சார்"

"ம்"

"நீங்க அப்படியே வச்சிருக்கீங்க இன்னும் குடிக்காம?"

"எனக்கு போதும் அருண். அதிகமா குடிக்க மாட்டேன். என்னிக்காவது கொஞ்சம் என்னை ரிலாக்ஸ் பண்ண கொஞ்சம் சாப்பிடுவேன். நம்மள நாம உணரணும். நம்மள நாம உணர முடியாமப் போற மது எனக்கு தேவையில்லை"

நான் சொல்ல அவன் சிரித்தான்.

"நீங்க ரொம்ப கரெக்டா இருக்கீங்க சார்"

"ம்"

"சார்"

"சொல்லு"

***

"அருண்" மாலினியின் கண்கள் கலங்கியிருந்தன.

இடம்: அழகர் கோவில். இருவரும் பழமுதிர்ச்சோலைக்கு நடந்தனர்.

"சொல்லு மாலினி"

"உன்னை ஏன் பார்த்தேன்னு இருக்கு"

"என்னாச்சு?"

"நாளைக்கு நம்ம காலேஜ் ஃபேர்வெல்"

"ம்"

"அதுக்கப்புறம் நீ உன்னோட ஊருக்குப் போயிடுவ. நான் என்னோட வீட்ல இருப்பேன். டெய்லி எனக்கு உன்னை ஒரு முறையாவது பார்க்கணும். இல்லன்னா அந்த நாள் எனக்கு நாளா இருக்காது"

"எனக்கும்தான்"

"அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்கே?"

"ஜாப்தான் மாலினி"

"சீக்கிரம் எதாவது ஒரு வேலையில சேரு. எங்க வீட்ல வந்து என்னைப் பொண்ணு கேளு"

"கொடுப்பாங்களா?"

"நிச்சயம் மாட்டாங்க"

மாலினி சொல்ல அருண் முகம் மாறியது. அவன் கண்கள் கலங்கின. அதைப் பார்த்தவள் சட்டென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

"டேய் லூசு உன்னை இப்படி பார்க்கிறதுக்கா உன்ன இங்க வரச்சொன்னேன்?"

"மாலினி"

"ம்"

"என்னால நீ இல்லாம இருக்க முடியாது"

"தெரியும்"

"அதான் சட்டுனு ஒரு மாதிரி ஆயிட்டேன்"

"அருண்"

"ம்"

"நான் என்னிக்கும் உன்னோட மாலினிதான். நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைச்சுக் கூட பார்க்க முடியாது"

அவள் சொல்ல சுற்றுமுற்றும் பார்த்த அருண் எவரும் இல்லை என்று உறுதி செய்து அவளை சட்டென்று தன்னோடு அணைத்துக் கொண்டான். மாலினி விடுபட விரும்பவில்லை.

***

வாசுதேவன் தன் கிளாசில் இன்னும் கொஞ்சம் பிராந்தியை ஊற்றி எடுத்துக் குடிக்க அருண் ஆச்சரியமானான்.

"சார்"

"ம்"

"இப்பதான் குடியைப் பத்தி பெரிய லெக்சர் கொடுத்தீங்க. திரும்ப ஊத்திக் குடிச்சிட்டீங்க"

"நானா குடிக்கலப்பா. உன்னோட கதை என்னைக் குடிக்க வைக்குது"

"புரியல சார்"

"புரியும்" சொன்ன வாசுதேவன் அருணை நேர்பார்வை பார்த்தபடி கேட்டான்.

"நீ அவ கல்யாணத்துக்கு போயிருப்பியே?"

"போனேன் சார்…ஆனா "

"ஆனா…?"

"முடியல சார்.. கெட்டிமேள சத்தத்தை வெளியில இருந்து கேட்டுட்டு வந்துட்டேன் சார்"

"அப்ப அவளோட புருஷன் யாருன்னு உனக்கு தெரியாது?"

"இல்ல சார். அவன் யாரா இருந்தாலும் சரி சார் இந்த உலகத்திலேயே அவன் தான் சார் ரொம்ப அதிர்ஷ்டசாலி."

"அப்படியா?  ஏன்?"

"என்னோட மாலினிய கல்யாணம் பண்ணியிருக்கான் சார். அப்ப  அதிர்ஷ்டசாலிதானே சார் அவன்?"

' கிழிஞ்சது போ' மனதிற்குள் நினைத்துக் கொண்ட வாசுதேவன் அருணைப் பார்த்தான்.

"சரி உன்னோட கதையை சொல்லு"

"சரி சார்"

"அப்புறம் ஒரு விஷயம்"

"சொல்லுங்க சார்"

"கட்டிப்பிடிக்கிறது முத்தம் கொடுக்கறது இந்த மாதிரி மத்த மத்த விஷயங்கள் வரும் போது சட்டுன்னு சொல்லாம இந்த மாதிரி சொல்லப்போறேன்னு சொல்லிட்டு சொல்லு"

"ஏன் சார்?"

"ரொம்ப அதிர்ச்சியா இருக்கு"

"உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு சார்"

"எப்படி?"

"இப்படி லவ் பண்ணவங்க பிரிஞ்சிட்டாங்களேன்னு நீங்க கூட அதிர்ச்சியாகறீங்க பாருங்க. அங்க நிக்கறீங்க சார்" சொன்ன அருணை ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் பார்த்த வாசுதேவன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.

'சுத்தம்'

***

ஜென் ரோபோடிக்ஸ் கம்பெனி சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் விஸ்தீரமாய் அமைந்திருந்தது.

அருண் உள்ளே நுழைய செக்யூரிட்டி தடுத்தான். 

வேலையில் சேரப் போகும் உத்தரவைக் காட்ட வழிவிட்டான்.

உள்ளே நுழைந்த அருண் ஹெச் ஆர் டிபார்ட்மெண்ட் அடைந்தான்.

"யெஸ்"

"ஐம் அருண் ஃப்ரம் மதுரை"

"ப்ளீஸ் வெயிட்"

சிறிது நேரம் கழித்து உள்ளே அழைக்கப்பட்டான்.

ஃபார்மாலிட்டி முடித்து வெளியே வந்து தன் இருக்கையில் அமரும்போது மணி பதினொன்றை நெருங்கியது.

எதார்த்தமாக தன் மொபைல் எடுத்து பார்த்தவன் அதிர்ந்தான். மாலினி அழைத்திருந்தாள்.

திரும்ப அழைத்தான்.

"மாலினி"

"ம்"

"சொல்லுமா"

"ஜாயின் பண்ணிட்டியா?"

"ம் இப்பத்தான்"

"வேளா வேளைக்கு சாப்பிடு. கண்ட தண்ணி குடிச்சு உடம்பக் கெடுத்துக்காத. "

"ம்"

"உன்னோட வொர்கிங் டைம்ல டிஸ்டர்ப் பண்றேனா?"

"இல்ல பரவாயில்ல"

"அருண்"

"ம்"

"இன்னிக்கு வீட்டுக்குத் தரகர் வந்திருந்தார். "

"ம்"

"அப்பா ரொம்ப மும்முரமா இருக்காரு. வைகாசியில எப்படியும் கல்யாணம் நடத்திடணும்னு"

"மாலினி"

"அருண் டென்ஷனாகாத தப்பா எதுவும் நடக்காது. உனக்கு விஷயத்தை சொல்லணும்னு சொன்னேன்."

"ம்"

"அருண்"

"சொல்லுமா"

"உன்ன பார்க்கணும் போல இருக்கு" சொன்ன மாலினி சட்டென்று உடைந்து அழ அருணின் கண்கள் கலங்கின.

"மாலினி ப்ளீஸ்"

"ஸாரிப்பா நான் வெச்சிடறேன்"

***

"அன்னிக்கு அவ திடீர்னு அழுதுட்டா சார். நாம ரொம்ப நேசிக்கிறவங்கள விட்டு எங்கயாவது போய் தனியா இருக்கறப்ப அவங்க போன்ல நம்மகிட்ட அழுதா எப்படி சார் இருக்கும் நமக்கு? அப்படியே ஒரு மாதிரி ஆகிப்போச்சு சார். என்ன வாழ்க்கை இது? அப்படி ஒரு ஃபீலிங்"

"புரியுது."

"வேலையை விட்டுட்டு என்னோட மாலினிதான் எனக்கு எல்லாமேன்னு வந்திடலாம் போல இருந்துச்சு. ஆனா காசு வேணுமே சார்?  நம்மள நேசிக்கிறவங்கள நல்லாப் பார்த்துக்க காசு முக்கியம் சார். அந்த மாசம் முடிஞ்சு சம்பளம் வாங்கிட்டு எப்ப மதுரைக்குப் போலாம்னு காத்துட்டிருந்தேன். "

"ம்"

*** 

சென்னை சென்ட்ரல்.

பாண்டியன் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் பிளாட்பாரம் நம்பர் ஒன்றில் வந்து சேரும்.

அறிவிப்பு தமிழ் ஆங்கிலம் ஹிந்தி என்று மூன்று மொழிகளில் மாறி மாறி கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்க அருண் பிளாட்பார்மில் வேகமாக நடந்தான்.

தன் கோச் பொசிசன் பார்த்து நின்றான்.

மொபைல் அடித்தது.

"மாலினி"

"எங்க இருக்கே?"

"சென்ட்ரல்ல"

"ட்ரெயின் வந்திடுச்சா?"

"வரப்போகுது அனௌன்ஸ்மென்ட் கொடுத்துட்டாங்க."

"ஓகே பா பத்திரம்"

"ம்"

"அருண்"

"ம்"

"சீக்கிரம் வா. "

"ம்*

"உன்னை இத்தனை நாள் பார்க்காம எனக்கு ஒரு மாதிரியா இருக்கு"

"ம்"

பாண்டியன் எக்ஸ்பிரஸ் பிளாட்ஃபார்மில் தன் நீளமான உடம்போடு மெதுவாய் வந்து  மூச்சை நிறுத்திக் கொண்டது.

அருண் ஏறிக்கொண்டான். அவன் மனம் முழுவதும் மாலினியைக் காணப்போகும் பரவசம் நிறைந்திருந்தது. 

அவன் மொபைல் மீண்டும் அடிக்க எடுத்துப் பார்த்தான்.

அம்மா.

"சொல்லும்மா"

"கண்ணு ரயில் ஏறிட்டியா?"

"ஏறிட்டேன்மா"

"பத்திரம் சாமி"

"சரிம்மா"

"சாப்பிட்டியா கண்ணு?"

"சாப்பிட்டேன்மா"

"சரி கண்ணு வச்சிடறேன்"

அம்மா வைத்துவிட  அருண் அம்மாவை நினைத்து பெருமூச்சு விட்டான்.

பாவம்.

அருண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் இருந்தபோது அவன் அப்பா சண்முகம் இறந்துவிட அவன் அம்மா வள்ளி சற்றும் மனம் தளராமல் வேலைக்குச் சென்று அருணின் படிப்பைத் தொடர வைத்தாள்.

படிக்காத பெண்ணாக இருந்தாலும் மசாலா கம்பெனியில் பாக்கெட் செய்யும் வேலையில் சேர்ந்து அம்மா பணம் கொடுக்கும்போதெல்லாம் அவன் மனம் நெகிழும். வெயில் காலத்தில் மிளகாய் பொடி பாக்கெட் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஒருமுறை அம்மா படும் கஷ்டத்தை நேரில் பார்த்த அருண் பதறித் துடித்தான்.

"அம்மா ரொம்ப கஷ்டமா இருந்தா வேலைக்கு போகாதமா நான் பார்த்துக்கறேன் "

"எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல கண்ணு. நீ இதெல்லாம் மனசுல ஏத்திக்காத. நீ நல்லாப் படி. எனக்கு அது போதும்"

"சரிம்மா"

ரயில் நாளை காலை மதுரை சென்றடைந்து விடும். மாலினியைப் பார்த்து பேசி விட்டு அம்மாவிடம் மாலினியைப் பற்றி சொல்லிவிட வேண்டும். அம்மா நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார். என் விருப்பம் தான் அவருக்கு முக்கியம். அம்மா இதுவரை கஷ்டப்பட்டது போதும். எல்லாம் நல்லபடியாக அமைந்தால் நான் மாலினி அம்மா மூவரும் சென்னையில் எங்கள் வாழ்வைத் தொடங்குவோம். கடவுள் மனம் வைத்தால் நிச்சயம் நடக்கும்.

தனக்குள் பல்வேறு யோசனைகளில் ஆழ்ந்த அருண் வெளியே பார்த்தான்.

***

"அன்னிக்கி நைட் எனக்கு ஏதேதோ கற்பனைகள் சார். ஃபுல்லா தூங்கல. எப்ப விடியும்னு ஜன்னல் வழியா இருட்டையே பார்த்திட்டிருந்தேன் சார். விடிஞ்சது. ஆனா…?"

தொடரும்


Comments