பிசாசு தேவதை(part-5)

பிசாசு தேவதை 5

மாலினிக்கு உறக்கம் வரவில்லை. இத்தனை நாட்கள் அருணைப் பார்க்காமல் இருப்பது அவளுக்கு இதுதான் முதல் முறை. தன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தனக்குள்ளே தவித்தாள்.

எப்பொழுது விடியும்? அருண் சீக்கிரம் வா. 

அருணை எப்பொழுது முதன் முதலில் பார்த்தது? யோசித்தாள்.

கல்லூரியில் பேஸ்கட்பால் கோர்ட் லேடிஸ் ஹாஸ்டலுக்கு செல்லும் வழியில் இருக்கிறது. ஒரு நாள் வகுப்பு முடித்துவிட்டு தன் தோழியைப் பார்க்க ஹாஸ்டலுக்கு செல்லும்பொழுது தனியே பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தான். 

'யாரிவன்? தனியா விளையாடிட்டு இருக்கான்' யோசனை ஓட மாலினி எதார்த்தமாக அவனைப் பார்த்தாள். முதல் முதலில் அவனைப் பார்க்கும் போது உள்ளே ஏதோ ஒரு உணர்வு. அவளுக்கு அது புதிதாக இருந்தது. தன்னைத் திட்டிக் கொண்டாள். 

என்ன இது? ஏன் நான் இப்படி இருக்கேன். 

அடுத்து வந்த சில நாட்களில் மீண்டும் அவனைப் பார்க்க நேர்ந்தது.  அவள் வகுப்பிற்கு அவன் வந்திருந்தான்.

"இன்னிக்கு ஸ்ட்ரைக் யாரும் கிளாஸ்ல இருக்க வேண்டாம். எல்லாரும் கிளம்பிப் போங்க"

அருண் சொல்ல மாலினி அருகில் இருந்தவளிடம் கேட்டாள்.

"அவன் யாரு?"

"அவன் நம்ம இயர்தான். அருண்"

"ஓ என்ன டிபார்ட்மெண்ட்?"

"எலக்ட்ரானிக்ஸ்"

அவன் என்ன டிபார்ட்மெண்ட் என்பதைத் தெரிந்து கொண்ட மாலினி எலக்ட்ரானிக்ஸ் டிபார்ட்மெண்டில் தனக்கு தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்று யோசித்தாள். இல்லை. தன் வகுப்புத் தோழி ஒருத்தியின் தோழி எலக்ட்ரானிக்ஸ் டிபார்ட்மெண்ட் என்பதை அறிந்து அவளுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டாள்.

"ஹாய்"

"ஜெனி"

"மாலினி"

"நைஸ்"

அதன் பின் அருணைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் உடனே கிளம்பி ஜெனியைப் பார்க்க போய் விடுவாள். சில நாட்களில் அவன் வகுப்பிற்கு வந்திருக்க மாட்டான். மாலினிக்கு உள்ளே கடுப்பாக இருக்கும்.

எங்க ஊர் சுத்திட்டு இருக்கானோ? கிளாஸ்ல இல்லாம.

அவனைப் பார்க்க முடியாத நாட்களில் அவள் யாருடனும் எதுவும் பேச மாட்டாள். அவள் வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் அம்மா அப்பா இருவருக்கும் செல்லம்.

மாலினி அப்பா ராமநாதன் தன் மகள் வாசலில் செருப்பைக் கழற்றிப்போடுவதில் அவள் மனம் அறிவார்.

செருப்பு இங்கொன்றும் அங்கொன்றும் இருந்தால் மாலினியின் மனதில் ஏதோ ஒரு தேவை இருக்கிறது அது நிறைவேறவில்லை என்பதை அறிந்து கொள்வார். அவருக்கு தன் மகள் மீது அளவற்ற பாசம். அவள் எது கேட்டாலும் இல்லை என்று சொல்வதில்லை.

"மாலினி" அழைத்தார். அறைக்குள் இருந்த மாலை நீ வெளியே வந்தாள்.

"என்னப்பா?"

"என்னம்மா ஆச்சு?"

"ஒண்ணுமில்லப்பா" சொன்ன மாலினியை ஒன்றும் பேசாமல் வாஞ்சையாய் பார்த்தார். தன் மகள் மனதில் ஏதோ ஒரு மனப்போராட்டம். ஆனால் தன்னுடன் பகிர்ந்து கொள்ள அவளுக்கு முடியவில்லை.பரவாயில்லை எப்பொழுது பகிரத் தோன்றுகிறதோ அப்போது பகிரட்டும்.  

"ஏதாவது சாப்பிடறியாமா? அப்பா ஏதாவது போய் வாங்கிட்டு வரட்டுமா?"

"வேண்டாம் பா" சொன்னவள் மனம் கஷ்டமானது. அவனைப் பார்க்க முடியாத எரிச்சலை பாவம் வீட்டில் காட்டி இவர்கள் என்ன செய்வார்கள்?

புன்னகைத்தாள். அப்பா சமாதானமானார். அவள் தலையை மென்மையாய் கோதி விட்டவர் சொன்னார்.

"எதுக்கும் கவலைப்படாதம்மா எல்லாம் சரியாயிடும்"

அந்த நேரத்தில் அவளுக்கு அப்பாவின் வார்த்தைகள் ஆறுதலாய் இருந்தன.

"இப்படியே செல்லம் கொடுங்க. நாளைக்குப் போற இடத்துல என்ன பாடுபடப் போறான்னு தெரியல" அம்மா சிவகாமி சொல்ல புன்னகைத்தார்.

"அதெல்லாம் எந்த கஷ்டமும் என் பொண்ணு பட மாட்டா"

"எப்படி சொல்றீங்க?"

"நம்ம மாலினிய உள்ளங்கையில வச்சுத் தாங்கற ஒருத்தனுக்குத் தான் நான் கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன்"

"அப்படி யார் இருக்காங்க?"

"என்னோட பொண்ணு ஜாதகம் அப்படி. அவளை கல்யாணம் பண்ணிக்க போறவன் அவளை அப்படித்தான் வச்சிருப்பான்"

அப்பா சொல்ல மாலினிக்கு அருண் ஞாபகம் வந்தது.

எனக்கு ஏன் அவன் பற்றி இப்பொழுது நினைவிற்கு வர வேண்டும்? எனக்கு அவனைப் பிடித்திருக்கிறதா? ஒருவேளை இது தான் காதலா? 

ஒருவனை பார்த்தாய் அவனை என்ன காரணம் என்று தெரியாமலே உனக்கு பிடித்திருக்கிறது. அவ்வளவுதான். இது எப்படி காதலில் சேர்த்தியாகும்?

காதல் என்றால் என்ன? அதற்கு ஏதாவது வரையறை இருக்கிறதா என்ன? இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த அல்லது தாங்கள் அனுபவித்த உணர்வில் காதல் இப்படித்தான் என்று வரையறை செய்து கொள்கின்றனர்.

எனக்கு அருண் மீது இருப்பது காதலா? என் உணர்வு என்னவென்று எனக்கே புரியாமல் நான் என்ன செய்ய? இதுதான் காதல் என்று என்னை நானே நம்ப வைத்து என் உணர்வை அருணுக்கு தெரியப்படுத்த வேண்டுமா? அது என்னால் முடியுமா? 

அருளிடம் பேச வேண்டும் என்று தோன்றிய உடன் அவளுக்கு மனம் பரபரத்தது. வேண்டாம். என்னவென்று பேசுவது? இதுவரை அவனிடம் எதுவும் பேசியதில்லை.

மாலினி

ம்

என்றாவது ஒருநாள் நீ அவனிடம் பேசித்தானே ஆக வேண்டும்?

ஆம்

எதற்கு வீணாகக் காலத்தை கடத்துகிறாய்?

நான் என்ன செய்யட்டும்?

எவ்வளவு விரைவில் அவனுடன் பேச முடியுமோ உடனே பேசி விடு. ஏனென்றால் நீ தாமதிக்கத் தாமதிக்க உன் மனம் அவன் நினைவிலேயே உழலும். என்றாவது ஒரு நாள் அவன் இல்லை என்று ஆகிவிட்டால் அதிலிருந்து வெளியே வருவதற்கு நீ மிகவும் சிரமப்பட நேரிடும்.

ம்

மறுநாள் கல்லூரிக்குச் செல்லும் பொழுது அவனிடம் எதார்த்தமாக பேசுவது போல் ஏதாவது பேச வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள்.

"ஹாய் மாலினி" யாரோ தன்னை அழைக்க திரும்பிப் பார்த்த மாலினி மலர்ந்தாள்.

ஜெனி நின்றிருந்தாள். 

"சொல்லு ஜெனி"

"இன்னும் ரெண்டு மாசத்துல நம்ம கோர்ஸ் முடிஞ்சுடும். அதுக்கப்புறம் என்ன பண்றதா உத்தேசம்? "

"ஒண்ணும் பிளான் பண்ணல"

"ம் நீ? "

"கல்யாணம்தான்" சொன்ன ஜெனியைப் பார்த்து மாலினி சிரித்தாள்.

"மாலினி"

"ம்"

"நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போற?"

"ஐடியா இல்ல"

"யாரையாவது ஓட்டிட்டிருக்கியா?"

"சீ இல்ல"

"ஆமா உன்கிட்ட ஒண்ணு கேட்கலாமா?"

"கேளு ஜெனி"

"என்னோட கிளாஸ்மேட் அருண் தெரியும்ல?" ஜெனி அருண் பேரைச் சொல்ல மாலினிக்கு பரவசம் தாக்கியது. எங்கே ஜெனி எதுவும் கண்டுபிடித்து விடுவாளோ என்று மிகவும் சிரமப்பட்டு தன் உணர்வுகளை மறைத்தபடி சொன்னாள்.

"தெரியுமே"

"அவனப் பத்தி என்ன நினைக்கிற?" 

ஜெனி கேட்க மாலினிக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக இப்படி ஒரு கேள்வி? இதற்கு என்ன பதில் சொல்வது? யாரைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேனோ யாருடன் பேச வேண்டும் என்ற ஆசைப்பட்டு முயற்சி செய்து கொண்டிருக்கிறேனோ அவனைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்ற கேள்வி என்னை நோக்கி வீசப்படுகிறது. 

சமாளித்தாள். ஜெனி அருண் மனதில் வேறு யாரோ இருக்கிறார்கள் என்று முதலில் விளையாட்டாய் சொன்னபோது உள்ளே நொறுங்கினாள். 

இல்லை இதற்கு வாய்ப்பில்லை இவள் ஏதோ பொய் சொல்கிறாள்.உள்ளே மனம் இடைவிடாமல் கதறியது.

மாலினியின் முகத்தைப் பார்த்த ஜெனி அவள் தவிப்பைப் பார்த்து அவளை மேலும் சோதிக்க விரும்பாமல் "நான் பொய் சொன்னேன்" என்று சொன்னதும் அவளுக்கு நிம்மதி.

முதன் முதலில் அவனிடம் பேசுவதற்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்ல போகிறோம் என்ற உணர்வு அவளை மலரச் செய்திருந்தது.

"மாலினி"

"அப்பா"

"இன்னிக்கு என்னம்மா விஷயம்? ரொம்ப சந்தோஷமா இருக்கே."

"ஒண்ணும் இல்லப்பா கோயிலுக்கு போயிட்டு வரேன்"

"சரிமா " சொன்னவர் அழைத்தார்.

"மாலினி"

"அப்பா"

"எப்பவும் இப்படியே இரும்மா" அவர் நெகிழ்ந்து சொல்ல புன்னகைத்தாள்.

அருணிடம் பேசி விட்டு வந்த அன்று அவள் அன்றிரவு முழுவதும் உறங்காமல் அவனுடன் பேசிய நினைவுகளிலேயே ஆழ்ந்திருந்தாள்.

எங்கிருந்தோ ஏதோ ஒரு பறவையின் சத்தம் கேட்க ஏதேதோ நினைவுகளில் ஆழ்ந்திருந்த மாலினி கலைந்தாள்.

'ரயில் நேரம் எங்கே வந்திருக்கும்?'

மணி பார்த்தாள். இரவு ஒரு மணி. 

காலை எட்டு மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் அருண் சந்திப்பதாகச் சொல்லியிருந்தான்.

நான் அருணைப் பற்றி வீட்டில் சொல்லி விட வேண்டும். அப்பா என்ன சொல்வார்? 

அப்பா கம்யூனிஸ்ட் ஜாதி மதம் பார்க்க மாட்டார். ஆனால் அம்மா அருண் வேற ஜாதி என்பதால் முதலில் முகம் காட்டுவார் பிறகு அப்பாவை எதிர்க்கத் துணியாமல் எடுக்கப்படும் முடிவை ஏற்றுக்கொள்வார். இப்படித்தான் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒருவேளை இதற்கு மாறாக நடக்குமா? தெரியவில்லை. என் அப்பாவைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவரால் என் மனதிற்கு மாறாக நடக்க முடியாது. என் கண்களில் கண்ணீர் வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். என் முகமாற்றம் பார்த்து என் தேவைகளை நான் சொல்லாமலே அறிந்து நான் மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதை நிறைவேற்ற முனைவார்.

அருணை சந்தித்து பேசி விட்டு வந்தபின் அருண் குறித்து அப்பாவிடம் இன்றே சொல்லிவிட வேண்டியதுதான்.

மாலினி மெல்ல எழுந்தாள். தன் அறையில் இருந்து வெளியே வந்தவள் திகைத்தாள். அப்பாவின் அறையில் விளக்கு எரிந்தது. 

அப்பா தூங்கவில்லையா என்ன? உள்ளே நுழைந்தவள் அழைத்தாள்.

"அப்பா"

"வாம்மா"

"என்னப்பா தூங்காம இருக்கீங்க?"

"தெரியலம்மா. ஏதோ ஒரு வலி. எந்திரிச்சிட்டேன்"

அவர் சொல்ல பதறினாள்.

"என்னப்பா சொல்றீங்க? வாங்கப்பா டாக்டர்கிட்டப் போலாம்"

"வேண்டாம்மா சரியாயிடுச்சு. இந்நேரத்துக்கு எந்த டாக்டர் இருப்பாங்க? " புன்னகைத்தவர் கேட்டார். 

"நீ தூங்கலயாமா?"

"இல்லப்பா இப்பத்தான் எழுந்தேன்"

"ம்"

"ஏதாவது குடிக்கிறீங்களாப்பா? போட்டுத்தரவா?"

"வேண்டாம்மா" சொன்னவர் புன்னகைத்தார்.

"ஏன்பா சிரிக்கறீங்க?"

"பழைய ஞாபகம்"

"என்னப்பா?"

"நீ மூணு வயசு குழந்தையா இருக்கிறப்ப ஒரு நாள் மிட்நைட் இப்படித்தான் எந்திரிச்சுப் பசிக்குதுன்னு கேட்டே. அப்பா உனக்கு இட்லி வாங்கறதுக்கு மதுரை ஃபுல்லா நைட்ல சுத்துனது ஞாபகம் வந்துச்சு" அவர் சிரித்தபடி சொல்ல நெகிழ்ந்தாள்.

"அப்பா"

"சொல்லுமா"

"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் சொல்லலாமாப்பா?"

"என்னம்மா நீ? அப்பா கிட்ட போய் சொல்லலாமான்னு கேட்டுட்டு? என்ன விஷயம்னு சொல்லுமா?" சொன்னவர் தன்னையே பார்க்க மாலினி தயங்கினாள்.

"பரவால்ல சொல்லுமா"

"என்கூடப் படிக்கிற அருண் நீங்க பார்த்திருப்பீங்க"

"யாரு? "

"அதான்பா அரசரடியில இருக்கானே?"

"ஆமா சொல்லும்மா"

"எனக்கு அவன ரொம்பப் பிடிச்சிருக்குப்பா" ஒரு வழியாக தைரியமாய் சொல்லி விட்டாள்.

அப்பாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அப்பாவையே பார்த்தாள். ஒரு நிமிடம் அமைதியாக யோசித்தவர் அவளை தன் அருகில் அழைத்தார். புன்னகைத்தார்.

"அவன் வீட்ல யாருமா இருக்காங்க?"

"அவனும் அவனோட அம்மாவும் பா"

"அவனை வீட்டில் வந்து பேச சொல்லுமா" அப்பா சொல்ல மாலினி பரவசமானாள். சட்டென்று அவர் கால்களைத் தொட்டு வணங்கினாள்.

"நல்லாயிருமா எப்பவுமே நல்லா இரு"

***

காலை எட்டு மணிக்குப் பதிலாக அரை மணி நேரம் முன்னதாகவே போய் மீனாட்சி அம்மன் கோவிலில் காத்திருந்தாள் மாலினி.

மனதில் பரவசம் தவிப்பு இரண்டும் இணைந்திருந்தது.

அருண் வருகிறானா என்று பார்த்துக் கொண்டே இருந்தாள்.

நேரம் கடந்தது. எட்டு மணி. அருண் வரவில்லை.

தவிப்பாய் காத்திருந்தாள். மணி எட்டரை.

அருண் வரவில்லை.

என்னாச்சு? தனக்குள் பரிதவித்தவள் அவன் மொபைலை தொடர்பு கொண்டாள்.

'நீங்கள் அழைக்கும் இந்த சந்தாதாரர் எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது'

தொடரும்


Comments