"ஏங்க"
"ம்"
"செம்மயா இருக்கீங்க"
"யாரு?"
"நீங்கதாங்க"
"காமெடி பண்ணாதீங்க"
"ஏங்க ? "
"என் வயசு எவ்வளவு தெரியுமா?"
"எவ்வளவு?"
"முப்பத்தஞ்சு"
"அது ஒரு வயசா?"
"நான் ரெண்டு குழந்தைக்கு அம்மா"
"உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?"
"சொல்லுங்க"
"முப்பத்தஞ்சு வயசுக்கு மேல தான் லவ் வருமாம். அதுக்கு முன்னாடி வர்றதெல்லாம் லவ்னா என்னன்னே தெரியாம லவ் பண்ணிடறாங்க"
"நீங்க பேசறது காமெடியா இருக்கு"
"வெளிநாட்டு ஆராய்ச்சி முடிவுகள் அப்படித்தான் சொல்லுது"
"உங்க கிட்ட வந்து சொன்னாங்களா?"
"ஆமாங்க. கௌரி..."
"ம்"
"நான் சின்ன பையன் மாதிரி ஐ லவ் யூ எல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா உங்க கூட இருந்தா ஏதோ ஒரு சந்தோஷம் எனக்குள்ள இருந்துகிட்டுத்தான் இருக்கு"
"சந்தோசம் தானே? அதுல ஒன்னும் தப்பு இல்ல"
"அப்படிங்கிறீங்க?"
"ம்"
"நான் ரொம்ப நாள் யோசிச்சுட்டுத்தான் பேச வந்திருக்கேன்"
"ரொம்ப யோசிப்பீங்களோ?"
"ஆமாங்க. எந்த ஒரு விஷயமா இருந்தாலும் இது சரியா இது தப்பா இது சரியா வருமா ஒருவேளை தப்பா ஆயிட்டா என்ன பண்றது அதை எப்படி சரி பண்றது அப்படி நிறைய முறை யோசிச்சுப் பார்ப்பேன். எனக்கு திருப்தியா இருந்தா மட்டும் தான் பேசுவேன்"
"என்ன யோசிச்சீங்க? கொஞ்சம் சொல்ல முடியுமா?"
"எல்லாம் உங்களப் பத்தித்தான்"
"என்னப் பத்தியா?"
"ஆமா"
"என்னப் பத்தி என்ன யோசிச்சீங்க?"
"என்னை மாதிரியே நீங்களும் துணையை இழந்தவங்க. எனக்கு குழந்தை இல்ல. உங்களுக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. எனக்கு நாப்பது வயசு. உங்களுக்கு முப்பத்தஞ்சு வயசு. எனக்கு உங்களப் பார்த்தவுடனே பிடிக்கல. ஃபர்ஸ்ட் டைம் உங்கள பார்க்கறப்ப எனக்கு பெருசா எந்த ஒப்பினியனும் இல்ல. ஆனா அடுத்தடுத்து வந்த நாட்கள்ல உங்களை கவனிக்க ஆரம்பிச்சேன். பரவால்ல நல்லாத்தான் இருக்கீங்கன்னு தோணுச்சு. அப்புறம் கொஞ்ச நாள் போனதுக்கப்புறம் செமயா இருக்கீங்கன்னு தோணுச்சு. அப்புறம் அப்ரோச் பண்ணா என்ன தப்பு அப்படின்னு தோணிச்சு. ஒருவேளை தப்பாப் புரிஞ்சுக்கிட்டு அறைஞ்சிட்டா..? சீன் கிரியேட் பண்ணிட்டா..? நமக்கு மானம் போய்டும்னு உள்ள கொஞ்சம் பயமா இருந்துச்சு. அந்த மாதிரி தப்பா நடக்காது தைரியமா அப்ரோச் பண்ணுன்னு மனசு சொல்லுச்சு. அப்படியே அப்ரோச் பண்ணி அவங்க ஒத்துக்கிட்டாலும் குழந்தைங்க நம்மள ஏத்துக்குவாங்களா அப்படின்னு சஞ்சலமா இருந்துச்சு.
சரி எந்த விஷயத்திலும் ரொம்ப அதிகமா யோசிச்சா அந்த விஷயத்தை நாம பண்ண மாட்டோம்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன் .அதான் எதுவா இருந்தாலும் உங்க கிட்ட பேசிட்டு அதுக்கப்புறம் அத பத்தி யோசிப்போம்னு பேச வந்துட்டேன்"
ராமனாதன் புன்னகையுடன் சொல்லி முடிக்க கெளரி சிரித்தாள்.
கேட்டாள்.
"உங்க பாங்க் பாலன்ஸ் எவ்வளவு? "
" இருக்கு. எட்டு லட்சம் இருக்கும். மாசம் சம்பளம் நாப்பதாயிரம் வரும்."
"என்னடா எடுத்தவுடனே பேங்க் பேலன்ஸ் எவ்வளவுன்னு கேட்கிறான்னு பார்க்கறீங்களா?"
"இல்லைங்க. அதுல எந்த தப்பும் இல்லைங்க ஒருவேளை நாம சேர்ந்து வாழணும்னா என்கிட்ட என்ன இருக்குன்னு உங்களுக்குத் தெரியணும் உங்க கிட்ட என்ன இருக்குன்னு எனக்குத் தெரியணும். வெறும் கையில முழம் போட முடியாது இல்லைங்களா?"
"நல்லாதான் பேசறீங்க"
"உங்களை கரெக்ட் பண்ணனும்னா கொஞ்சம் பேச்சுத்திறமை வேணும் இல்லைங்களா? "
"செமங்க"
"எனக்கு சொல்லனும்னு தோணுனத உங்க கிட்ட சொல்லிட்டேன். எனக்கு இப்ப பதில் வேணும் அப்ப பதில் வேணும்னு சின்ன பசங்க மாதிரி நான் தொந்தரவு பண்ண மாட்டேன். உங்களுக்கு ஏதாவது சொல்லணும்னு தோணுச்சுன்னா தாராளமா சொல்லலாம். எதுவுமே சொல்ல வேண்டாம்னு தோணினா ஒண்ணும் சொல்லாதீங்க. இல்ல கொஞ்ச நாள் கழிச்சு சொல்லணும்னு தோணுச்சுன்னா அப்ப வந்து சொல்லுங்க எனக்கு எதுனாலும் ஓகே. "
"நான் ஒண்ணு சொல்லவா?"
"ஒண்ணு என்ன எவ்வளவு வேணாலும் சொல்லுங்க கௌரி"
"இன்னும் கொஞ்ச நேரம் உங்க கிட்ட பேசினா எத பத்தி யோசிக்காம நான் சரின்னு சொன்னாலும் சொல்லிடுவேன்." கௌரி சொல்ல ராமநாதன் சிரித்தான்.
"பேசினது போதும்னு சொல்றீங்களா?"
"இல்லைங்க. நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்னு சொல்றேன்"
"தாராளமா" சொன்ன ராமனாதன் மெல்ல எழுந்தான்.
"பசங்கள எங்கக் காணோம்?"
"விளையாடப் போயிருக்காங்க"
"சரிங்க நான் வர்றேன்"
"ம்"
கௌரிடம் விடை பெற்று வந்த ராமநாதன் தன் அறைக்கு வந்தான்.
எப்படியோ ஒரு வழியாக அவளிடம் சொல்லியாகிவிட்டது இனி அவள் தீர்மானிக்கட்டும் என் வாழ்க்கையில் அவள் இருக்கிறாளா இல்லையா என்பது அவள் சொல்லும் வார்த்தைகளில்தான். ஒருவேளை சம்மதம் தெரிவித்தால் மகிழ்வேன். இல்லையென்றாலும் பெரிதாக ஒன்றும் வருத்தம் இருக்காது.
யோசித்த ராமநாதன் வழக்கம்போல் ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த மேகத்தைப் பார்த்தான்.
இன்றும் அந்த ஒற்றை மேகம் எங்காவது தட்டுப்படுமா? ராமநாதன் தனிமையில் இருக்கும் பொழுது அவனுக்கு இருக்கும் ஒரே துணை அந்த ஒற்றை மேகம் தான். சில நாட்களில் அந்த மேகம் திடீரென்று காணாமல் போயிருக்கும். அப்பொழுது ராமநாதன் நினைத்துக் கொள்வான். எங்காவது துணை தேடி போயிருக்கும் ஒருவேளை துணை கிடைத்து விட்டால் மீண்டும் வராது என்று. ஆனால் ஓரிரு நாட்களில் மீண்டும் ஒற்றை மேகம் தனியாக அவன் முன் வந்திருக்கும்.
அவனுக்கு தன்னை போல் மேகமும் தனியாக இருப்பதை காண்பதில் ஒரு சுகம்.
எதையாவது பகிர வேண்டும் என்றால் அந்த மேகத்திடம் சொல்வான். அது மிகவும் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருப்பதாய் அவனுக்குள் தோன்றும்.
கௌரியை பற்றிக் கூட மேகம் தான் அவனிடம் முதன் முதலாக சொன்னது.
இவள் உனக்கு ஏற்றவள்.
என்ன பேசுகிறாய்?
நன்றாக இருக்கிறாளா இல்லையா அதைச் சொல் முதலில்.
நன்றாகத்தான் இருக்கிறாள் ஆனால் என்னை எப்படி ஏற்பாள்?
ஏன் உனக்கு என்ன குறை?
என் நிறம்.
பின்?
முடி கொஞ்சம் கொட்டி விட்டது அதை தூக்கி சீவி சமாளிக்கிறேன்.
பின்?
கொஞ்சம் அதிகமாகப் பேசுவேன்
வேறு ஏதாவது இருக்கிறதா?
எனக்குத் தெரிந்த வரை இவை மட்டும்தான்.
ராமநாதா இவையெல்லாம் மிகவும் அற்பத்தனமான குறைகள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இவைகள் எல்லாம் குறைகள் இல்லை. குறை என்பது கேரக்டரில் குறை இருந்தால் அது குறை.
நீ யாரையாவது கொலை செய்து இருக்கிறாயா?
அய்யய்யோ
கற்பழிப்பு?
சீ இல்லை
கொள்ளை?
மற்றவர் பொருளுக்கு ஆசைப்படுவதில்லை
அப்படி என்றால் நீ ஓரளவிற்கு நல்லவன் தான்.
நிஜமாகவா?
ஆம்
அவளை உனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா?
நன்றாக இருக்கிறாள் அவளை யாருக்குத்தான் பிடிக்காது?
கேள்வி மற்றவர் பற்றியது அல்ல உன்னைப் பற்றி
புரிகிறது
உனக்கு அவளைப் பிடித்திருக்கிறதா இல்லையா?
இல்லை என்று சொல்ல முடியாது
மகிழ்ச்சி அப்படி என்றால் உன் மனதிற்கு நீ நேர்மையாக நடக்க வேண்டும் இல்லையா?
சரியாகப் புரியவில்லை
உன் மனம் ஒருவர் மீது ஆசைப் படுகிறது அந்த ஒருவருக்கு உன் மனதை நீ தெரிவிக்க வேண்டும். அதுதான் நீ உன் மனதிற்கு நேர்மையாக நடப்பது என்பது.
அப்படியே தெரிவிக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம் அதனால் விரும்பத்தகாத விளைவுகள் எதுவும் நடந்து விட்டால் என்ன செய்வது?
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்
ஒருவேளை மானம் போய்விட்டால்?
அப்படி எதிர்மறையாக யோசிப்பதை விட நேர்மறையாக யோசி.
எப்படி?
ஒருவேளை நீ அவளிடம் உன் மனதைத் தெரிவித்து அவள் சம்மதம் சொல்லிவிட்டால்...
சொல்லிவிட்டால்..?
உன் தூங்காத இரவுகளுக்கு பொருள் கிடைக்கும் இல்லையா?
அதற்காகத்தான் அவள் வேண்டும் என்று நான் எண்ணவில்லை.
நான் ஒன்றும் உன்னைப் பற்றி தவறாக சொல்லவில்லை. ஒரு துணை என்பது எல்லா வகைகளிலும் துணையாக இருக்க வேண்டும். அதில் நான் சொன்னதும் ஒரு வகை.
புரிகிறது
நான் அதிக நாட்கள் வானத்தில் இருப்பேனா என்று எனக்குத் தெரியாது. பலத்த காற்று அடித்தால் நான் கலைந்து விடுவேன் ஆனாலும் உன் மேல் இருக்கும் அன்பு காரணமாக மீண்டும் உன்னைக் காண முயற்சிப்பேன். நான் தான் ஒற்றை மேகம் நீயும் என்னைப் போல் இராதே. கலைந்து செல்வதற்கு முன் என்றாவது ஒருநாள் உன்னை நான் துணையோடு காண்பேன் அதிலும் உனக்கு பிடித்த அவளோடு நான் உன்னைக் காண்பேன்.
மேகம் விடாப்பிடியாக அவனிடம் சொல்ல ராமநாதன் தடுமாறினான்.
வேறு ஏதாவது பணியில் இருந்து இப்படி சொன்னால் அது பெரிதாக பார்க்கப்படாது. நான் செய்யும் பணியும் என்னால் களங்கப்படும் ஒருவேளை எதுவும் தவறாக நடந்து விட்டால்.
ராமநாதன் தனியார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர். கணக்கு பாடம் எடுத்தால் மாணவர்கள் அனைவரும் புரியும் வரை விட மாட்டான் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கவனம் செலுத்துவான். அவன் அர்ப்பணிப்பு உணர்வைப் பார்த்து பள்ளியில் பலருக்கும் அவன் மீது மிகுந்த மரியாதை உண்டு.
நிகழ்தகவு என்றால் என்ன? ஒரு காயின் டாஸ் போடறோம். ஒண்ணு ஹெட் வரும் இல்லன்னா டெயில் வரும். இந்த ரெண்டுல ஒண்ணு நிச்சயமா வரும். அப்ப நிகழ்தகவுன்னா என்ன? இந்தக் கேஸ்ல ஒன் பை டூ.
பத்து வருடங்களுக்கு முன்பு சுகந்தியுடன் திருமணமானது. திருமண வாழ்க்கை மிகவும் இனிதாக போய்க் கொண்டிருந்த வேளையில் எவர் கண் பட்டதோ தெரியவில்லை. தன் அம்மாவைப் பார்த்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த சுகந்தி வந்த பேருந்தின் பின்புறம் ஒரு தனியார் டூரிஸ்ட் பஸ் மோதியதில் சுகந்தி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டாள். அவள் இறந்ததை ராமநாதன் ஏற்க முடியாமல் தவித்தான். கூட வாழ்ந்தது கொஞ்ச காலம் என்றாலும் அவள் அவன் மனதில் நிறைந்திருந்தாள். அவள் ஞாபகம் எங்கு சென்றாலும் துரத்த அந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு வர வேண்டும் என்று விருப்பமாற்றல் எழுதி வாங்கி கடந்த நான்கு வருடங்களாக இந்த பள்ளியில் பணிபுரிந்து வருகிறான். இடைப்பட்ட இந்த பத்து வருட காலத்தில் பலர் அவனிடம் பலவிதமாக பேசியும் மறுமணத்திற்கு துளியும் சம்மதிக்காமல் இருந்த ராமநாதன் மனதில் அவன் அறைக்கு அடுத்த தெருவில் இருக்கும் வீட்டில் குடியிருக்கும் ஒரு தனியார் வங்கியில் பணி புரியும் கௌரி எப்படியோ இடம் பிடித்து விட்டாள்.
அவளைப் பிடித்திருந்தாலும் உடனே சொல்லாமல் பலவிதமாக யோசித்து அவளிடம் தன் மனதை தெரியப்படுத்தி விட்டான்.
என்னவாயிற்று? மேகம் அவனிடம் கேட்க
"சொல்லிட்டேன்" என்றான்.
ஒற்றை மேகம் அவனைப் பார்த்து கட்டை விரல் உயர்த்திப் புன்னகைப்பது போல் அவனுக்குத் தோன்றியது
தொடரும்
copyrights@varnajalam.in
Comments