ஒற்றை மேகம்(part-2)

ஒற்றை மேகம் 2

"டேய் பேசுடா பேசு" வரதன் கோபமாய் மொபைலில் கத்த காபி எடுத்துக்கொண்டு வந்த அவன் மனைவி அகிலா அவனைப் பார்த்து கேட்டாள்.

"என்னங்க ஆச்சு?"

"நம்ம செல்விக்கு போன் வந்துச்சு. போன் நான் எடுத்தேன் என்னோட குரலை கேட்டவன் எதுவுமே பேசாம அமைதியா இருக்கான். ராஸ்கல்"

"ஏதாவது சிக்னல் பிரபலமா இருக்கப் போகுது"

"இருக்கும்டி இருக்கும். நாமளும் இந்த வயசத் தாண்டி வந்தவங்க தான்" வரதன் சொல்ல அகிலா புன்னகைத்தாள்.

"சரி விடுங்க நீங்க டென்ஷனாகாதீங்க, காபி குடிங்க"

காஃபி குடிக்கும் வரதன் தமிழாசிரியர். ராமநாதனுடன் ஒரே பள்ளியில் பணியாற்றுகிறான். மனைவி அகிலா இல்லத்தரசி. இரு குழந்தைகள். மகன் அஸ்வின் கல்லூரியில் முதல் வருடம் படிக்கிறான். மகள் செல்வி பனிரெண்டாம் வகுப்பில் படிக்கிறாள்.

வரதனுக்கு எல்லாமே சரியாக இருக்க வேண்டும் இல்லை என்றால் சட்டென்று கோபம் எளிதில் வந்துவிடும்.

வரதன் எங்காவது வெளியில் சென்றால் அகிலா அஸ்வின் செல்வி மூவரும் நிம்மதியாக உணர்வர். வரதனுக்கு சிறுகுறை என்றால் கூட பிடிக்காது. எப்பொழுதும் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டிருப்பான்.

"கழுதை படிக்காம எப்ப பார்த்தாலும் டிவி பார்த்துட்டு இருந்தா எப்படி உருப்பட முடியும் போய் படி போ"

"ராஸ்கல் உன்னோட வயசுல நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா இப்ப நான் சம்பாதிச்சு வச்சிருக்கேன் அந்த திமிர்ல எங்கேயோ போய் ஊர் சுத்திட்டு இவ்வளவு லேட்டா வரியா?"

"என்ன அகிலா பிள்ளைங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறே? ஒருத்தர் கண்டிக்கும் போது இன்னொருத்தர் செல்லம் கொடுத்தா பசங்க எப்படி உருப்படுவாங்க?"

"சார் இப்பல்லாம் எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார் இந்த சொசைட்டில நம்ம குழந்தைங்க எப்படி வாழப் போறாங்கன்னு"

"மனுஷன் முன்னேறிட்டான் ராக்கெட் விடறான் டெக்னாலஜி முன்னேறிடிச்சுன்னு சொல்ற அதே சமூகத்தில் தான் பொண்ணுங்கள நரபலி கொடுத்து வெட்டி சாப்பிடறவங்களும் இருக்காங்க. நாமதான் சார் கவனமா இருக்கணும்"

வரதன் பேசுபவைகளில் சில.

"செல்வி" வரதன் அழைக்க செல்வி பதறிப் போய் முன்னால் வந்தாள்.

"அப்பா"

"யார் அவன்?"

"யாருப்பா?"

"உனக்கு போன் பண்ணவன்"

"எனக்கு தெரியாதுப்பா"

"ஓங்கி அறைஞ்சேன்னு வை எகிறிப் போய் விழுவ. கழுதை பொய்யா சொல்றே?"

"சத்தியமா இல்லப்பா" வரதனின் கோபத்தை பார்த்து செல்வி நடுங்கினாள்.

"ஏங்க எவனோ ஒரு பொறுக்கி முகம் தெரியாதவன் ஒருத்தன் போன் பண்ணா அதுக்கு இவ என்ன பண்ணுவா? இவள வந்து ஏங்க திட்டறீங்க?" அகிலா துணிந்து கேட்டு விட அவளை எரிப்பது போல் பார்த்தான் வரதன்.

"எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் தாண்டி அவ இப்படி இருக்கா"

அதற்குப்பின் அதிகம் பேசாத வரதன் பள்ளிக்கு நேரமாவதை உணர்ந்து புறப்பட்டுச் சென்றான்.

அவன் எப்போது வெளியில் செல்வான் என்பதற்காக காத்திருந்த செல்வி அகிலாவிடம் வர அகிலா செல்வியிடம் கேட்டாள்.

"யாருடி அவன்?"

"யாரும்மா?"

"போன் பண்ணிட்டு பேசாம இருந்தானே? அவன்"

"அது வந்து"

"சொல்லு"

"வினோத்"

"எதுக்கு இந்த திருட்டுத்தனம்? அப்பா போன் எடுத்தா நான் தான் வினோத் பேசறேன் உங்க பொண்ணோட ஃப்ரெண்ட் அப்படின்னு சொல்ல வேண்டியது தானே?"

"அவன் பாவம்மா. அப்படி மட்டும் அவன் அப்பாகிட்ட சொல்லி இருந்தா செத்தான். அப்பா என்ன தெரியுமா பேசியிருப்பாரு?"

"என்ன பேசி இருப்பார்?"

"உனக்கு ஆம்பள ஃப்ரெண்ட்ஸ் யாரும் இல்லையா? அதென்ன பொண்ணுங்க கிட்ட மட்டும் பிரண்ட்ஷிப் உனக்கு வேண்டிக்கிடக்கு? போன்ல பேசுற அளவுக்கு என்ன பிரண்ட்ஷிப்? இதெல்லாம் உருப்படறதுக்கான வழியாத் தெரியல. போப்பா போய் படி. போய் உங்க அப்பா எவ்வளவு கஷ்டப்படறான் தெரியுமா? அது முதல்ல தெரிஞ்சுக்கோ. நல்லா படி போன்னு சொல்லி இருப்பார்"

செல்வி வரதனின் குரலில் சொல்ல அகிலாவிற்கு சிரிப்பு வந்தது.

"அது எப்படி நீ அப்பா குரல்ல அப்படியே பேசற?"

"கேட்டுக்கேட்டு மனப்பாடம் ஆயிடுச்சு தூக்கத்துல எழுப்பி கேட்டாக் கூட அவர மாதிரியே பேசுவேன் "

"சரி வா உட்காரு சாப்பிட்டுட்டு ஸ்கூலுக்குக் கிளம்பு"

"ம்"

செல்வி வந்து உட்கார அகிலா ரெண்டு தோசையுடன் ஒரு ஆம்லெட் கொண்டு வந்து வைத்தாள்.

ஆம்லெட்டை பார்த்த செல்வி அகிலாவை பரிதாபமாய் பார்க்க அகிலா புன்னகைத்தாள்.

"உன்னோட அப்பாவோட ஆர்டர். என்னால் ஒண்ணும் பண்ண முடியாது. பெண் குழந்தைங்க நல்லா சாப்பிடணும். டெய்லி ஒரு முட்டை சாப்பிடணும். அப்பதான் எனர்ஜி கிடைக்கும்"

"போதும் தாயே. நான் சாப்பிடறேன் நீயும் அப்பாவோட டயலாக் ரிப்பீட் பண்ணாத"

சொன்ன செல்வி ஆம்லெட்டை அவசரமாய் அள்ளி விழுங்க அகிலா சிரித்தாள்.

***

வகுப்பறை.

வரதன்

"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்

இந்த திருக்குறளுக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

ஒரு நல்லது நடக்குதுன்னா அங்க பொய்கூட பேசலாம்."

"சார்" ஒரு மாணவன் எழுந்தான்.

"சொல்லுப்பா"

"அது எப்படி சார் சரியா வரும் ? எப்பவுமே உண்மை தான பேசணும்?"

"எப்பவுமே உண்மை பேசறது ரொம்ப நல்லது ஆனா சில நேரங்களில் உண்மை பேச முடியாத சந்தர்ப்பம் வரும். இன்னும் சொல்லப்போனா உண்மைய சொன்னா கெட்டது நடக்கும் பொய் சொன்னா நல்லது நடக்கும்னா அந்தப் பொய் சொல்றது தப்பில்ல "

***

"என்ன சொல்ற நீ?" வரதன் கேட்க ராமநாதன் சிரித்தான்.

"நான் சொல்லிட்டேன்"

"அவங்க என்ன சொன்னாங்க?"

"யோசிக்கணும்னு சொல்லியிருக்காங்க"

"ம்"

"வரதா"

"ம்"

"நான் தப்பா எதுவும் சொல்லலை தானே?"

"உன் மேகம் என்ன சொல்லுச்சு?" வரதன் கேட்க ராமநாதன் சிரித்தான்.

"தப்பில்லன்னு சொல்லுச்சு"

"அப்ப சரி " சொன்ன வரதன் தொடர்ந்தான்.

"நாம ஒருத்தர நேசிக்கிறோம் அவங்க கிட்ட போய் நம்மளோட நேசத்தை வெளிக்காட்டறோம். இது சரியா தப்பான்னு நமக்கு கேள்வியே வரக்கூடாது. ஆனா அதே நேரத்துல இது எல்லாராலும் பண்ண முடியுமான்னு கேட்டா முடியாது. உனக்கு சூழ்நிலை சரியா இருக்கு. சூழ்நிலை சரியா இருக்கறவங்க நேசத்தை வெளிக்காட்டறது எந்த காரணத்துக்காகவும் தப்பு கிடையாது. அதனால மனசப் போட்டு குழப்பிக்காத. நிம்மதியா இரு. எந்த முடிவு வந்தாலும் ஏத்துக்க"

"தேங்க்ஸ் வரதா"

"எனக்கு ஒரு டவுட் இருக்கு"

"என்ன?"

"ஒருவேளை அவங்க உனக்கு ஓகே சொல்லிட்டா அவங்களோட ரெண்டு குழந்தைங்க உன்னை முழு மனசா ஏத்துக்குவாங்களா? ஒருவேளை அவங்களோட குழந்தைகளுக்கு உன்னைப் பிடிக்கலன்னா அவங்க என்ன மாதிரி முடிவு எடுப்பாங்க? எல்லாமே டிஸ்கஸ் பண்ணி தெரிஞ்சுக்குங்க. அவசரப்பட்டு ஏதாவது முடிவெடுத்து அது எல்லாருக்கும் சங்கடம் தர்ற மாதிரி வேண்டாம்"

வரத்தான் சொல்ல ராமநாதன் பெருமூச்சு விட்டான்.

"எல்லாமே நல்லபடியா நடக்கும்னு நம்பிக்கை இருக்கு"

"நிச்சயம் அந்த நம்பிக்கை நமக்கு இருக்கணும். மிடில் கிளாஸ் மக்கள் வாழறதே நம்பிக்கைல தான். நாளைக்கு பொழுது சரியா விடியும்னு நம்பறவங்க பெரும்பாலும் மிடில் கிளாஸ் தான்.ஒருவேளை மறுநாள் அவங்க எதிர்பார்த்த மாதிரி வாழ்க்கை மாறலன்னு வை திரும்பவும் அடுத்த நாள் பொழுது சரியா விடியும்னு நம்புவாங்க. அது ஒரு தொடர்கதை"

வரதன் சொல்ல ராமநாதன் சிரித்தான்.

***

கௌரிக்கு அன்று வேலையில் கவனம் ஓடவில்லை.

கொஞ்ச நாட்களாக ராமநாதன் தன்னிடம் ஏதோ பேச முயன்று பேச முடியாமல் தவித்ததை அவளும் உணர்ந்திருந்தாள்.

திடீரென்று ஒரு நாள் வந்து இப்படி சொல்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

அவருக்கென்ன? அவர் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறார். நல்ல வேலையில் இருக்கிறார் அவர் நினைத்தால் அவருக்கு மிகவும் நன்றாகவே வாழ்க்கை அமையும் இருந்தாலும் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் என்னை விரும்புகிறார். அந்த விருப்பத்தையும் மிகவும் நாகரிகமாக தெரிவித்து விட்டார்.

என் விருப்பத்திற்காக காத்திருப்பதாக சொல்லி இருக்கிறார். நான் எப்பொழுது வேண்டுமானாலும் பதில் சொல்லலாம் என்ற சுதந்திரத்தையும் அளித்திருக்கிறார்.

எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

நான் ஒன்றும் சிறு பெண் அல்ல. இரண்டு குழந்தைகளின் தாய். இளையவனுக்கு நான்கு வயது மூத்தவனுக்கு ஏழு வயது. அவர்கள் இருவரும் என்ன நினைக்கிறார்கள் அவர்களின் மனநிலை என்ன எல்லாம் யோசித்து தான் முடிவெடுக்க வேண்டும். பிள்ளைகளுடன் பேசுவதற்கு முன் என்னைப் பற்றி நான் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு இன்னொரு வாழ்க்கை வேண்டுமா?

என் கிருஷ்ணன் இறந்ததிலிருந்து எதிலும் பற்றில்லாமல் தான் இருக்கிறேன். அவ்வப்போது எனக்கும் தோன்றும். என் வாழ்க்கை மீண்டும் துளிர்க்காதா என்று. இருந்தாலும் என்னை நான் சமாளித்துக் கொள்வேன். இனி என் வாழ்க்கையில் என்ன இருக்கிறது? என் இரண்டு மகன்கள் அவர்களுக்காகத்தான் என் வாழ்க்கை என்று. எனக்கு நான் உண்மையாக இருக்கிறேனா என்றால் இல்லை என்பது தான் பதில். எனக்கு வேறொரு வாழ்க்கை அமைந்தால் நன்றாகத் தான் இருக்கும் என்ற உணர்வை வெளிப்படையாக என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. என் சமூகம் அப்படி என்னை பழக்கிவிட்டது. எவர் ஒருவருக்கு வாழ்க்கை தங்கள் விருப்பப்படி அமையவில்லையோ அல்லது அமைத்துக் கொள்ளும் வழிவகை அறியவில்லையோ அவர்கள் மற்றவர்களுக்காகத்தான் தங்கள் வாழ்க்கை என்று நம்புகிறார்கள் அல்லது நம்ப வைக்கப்படுகிறார்கள். என்னை நானே நம்ப வைத்திருக்கிறேன்.

ஒருவழியாக எல்லாம் அமைதியாக போய்க்கொண்டிருக்கும் பொழுது மீண்டும் ஏதோ ஒரு புதிய உணர்வு.

ஆனால் இந்த உணர்வு எதற்காக? எனக்கு தெரியாது.

ராமநாதன் உனக்கு வேண்டுமா?

தெரியாது.

அவர் உன் வாழ்க்கையில் இணைந்தால் நீ மகிழ்வாயா?

தெரியாது

எதுவுமே தெரியாது என்றால் தெரியாத ஒரு பந்தத்தில் ஈடுபட உன்னை நீ தயார் படுத்திக் கொள்வாயா? அது உன்னால் முடியுமா?

நான் ராமநாதனுடன் இன்னும் பழக வேண்டும். நிறையப் பேச வேண்டும். அவருடன் பேசிப் பழகி அவரைப் பற்றி புரிந்தால் அவர் என்னை ஈர்த்தால் அவர் சொன்னதைப் பற்றி பிறகு யோசிப்போம். ஒருவேளை வேண்டாம் என்று தோன்றினாலும் அவரிடம் நேரடியாக சொல்லிவிடலாம் அவர் ஒன்றும் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டார்.

வாய்ப்பு கிடைக்கும் பொழுது குழந்தைகளிடம் கேட்க வேண்டும் அங்கிள் எப்படி? அவரைப் பற்றி என்ன நினைக்கறீங்க? அவர் நம்முடன் இருந்தால் உங்களுக்கு ஓகேவா இல்லையான்னு. குழந்தைகள் பதில் சொல்றதை வச்சு ஒரு ஐடியா கிடைக்கும்.அவங்களுக்கு பிடிச்சாத்தான் மேற்கொண்டு இதப்பத்தி யோசிக்கணும்

ஏதோ ஞாபகத்தில் மூழ்கியிருந்த கௌரியை அந்தக் குரல் அழைத்தது.

"கௌரி"

தொடரும்


Comments