கொஞ்சம் ரத்தம்
கவுதம் கருணாநிதி
பொழுது இன்னும் விடியாமல் இருக்க டேவிட் தன் உடற்பயிற்சியைத் தொடங்கியிருந்தான்.
எதார்த்தமாக ரோட்டை பார்த்தவன் கவனத்தைக் கவர்ந்தது அந்த கார்.
இந்நேரத்தில் யார் இந்தப் பக்கம் வருகிறார்கள்? என்று அந்த காரையே கவனித்தான் டேவிட்.
கார் அவர்களின் டிடெக்டிவ் ஏஜென்சிக்கு அருகில் வந்து தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது டேவிட்டை ஆர்வமடையச் செய்தது.
ஏதோ ஒரு கேஸ்
தனக்குள் நினைத்தவன் மாடியிலிருந்து கீழே இறங்கினான்.
காரைப் பார்க் செய்துவிட்டு ஒருவர் இறங்கினார். சுற்றுமுற்றும் பயத்துடன் பார்த்துக் கொண்டார்.
அவர் உள்ளே நுழைய டாமி பயங்கரமாய் குரைத்தது.
"டாமி கீப் கொயட்" டாமியை அடக்கிய டேவிட் வந்தவரை ஏறிட்டான்.
"யார் நீங்க?"
"என்னை டிவில பார்த்திருப்பீங்க. நான் சயின்டிஸ்ட் வர்மா."
அவர் அறிமுகப்படுத்திக்கொள்ள டேவிட்டிற்கு அவர் பேட்டியை புதிய தலைமுறையில் கண்டது நினைவிற்கு வந்தது.
"சொல்லுங்க."
"அசோக்கைப் பார்க்கணும்"
"என்ன விஷயம்?"
"மன்னிக்கணும் நான் அவர்கிட்ட தான் சொல்ல முடியும்."
"இட்ஸ் ஓகே. அசோக் ஜாகிங் போயிருக்கார். டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க வந்திடுவார்."
"ஓகே சார்." சொன்ன வர்மா அங்கிருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தார். டாமி அவரையே பார்த்தது. டேவிட்டின் பார்வைக்குப் பணிந்து அமைதியானது.
டேவிட் உள்ளே சென்றான் கார்த்தியின் அறையில் எட்டிப்பார்க்க கார்த்தி இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான்.
திவ்யா எதிரில் தேனீர் கோப்பைகளுடன் வர தனக்கொன்றை எடுத்துக்கொண்டான்.
"தேங்க்ஸ் திவ்யா. வெளில ஒருத்தர் இருக்கார். அவருக்கும் கொடுக்கணும்."
டேவிட் சொல்ல திவ்யா ஆச்சரியமானாள்.
"யார் அது?"
"சயின்டிஸ்ட் வர்மா."
"அவரா? அவர் பெரிய ஆளாச்சே?"
"பெரிய ஆளா?"
"ஆமா டேவிட். செயற்கை பிளாஸ்மா கண்டுபிடிச்சதுல அவரோட பங்கு ரொம்ப ஜாஸ்தி இன்டர்வ்யூ கொடுத்திருப்பாரே."
திவ்யா கேட்க டேவிட் புன்னகைத்தான்.
"கொடுத்தாரு ஆனா நான் முழுக்க அந்த வீடியோ பார்க்கல."
திவ்யா புரிந்துகொண்டு பதிலுக்குப் புன்னகைத்தாள்.
அவருக்கு தேனீர் கொண்டுபோய் கொடுத்தாள்.
வாங்கிக் கொண்டவர் பதட்டமாக சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே இருக்க திவ்யாவிற்கு அவர் ஏதோ ஒரு சிக்கலில் இருப்பது புரிந்தது.
சட்டென்று டாமி கேட்டிற்குப் பாய்ந்தது.
உள்ளே வந்த அசோக் புன்னகைத்தான்.
டாமியை நோக்கி குனிய அது பாசமாகத் தன் முன்னங்கால்களை உயர்த்தியது.
"என்ன டாமி இன்னிக்கு ரொம்ப ஜாஸ்தியா பாசமா இருக்கே? என்ன விஷயம்?"
அசோக் கேட்க டாமி குரைத்தது. அசோக்கிற்குப் புரிந்தது. யாரோ வந்திருக்கிறார்கள்.
நிமிர்ந்தவனின் பார்வை அமர்ந்திருந்த சயின்டிஸ்ட் மீது பட அசோக் சட்டென்று அவர் யார் என்பதை புரிந்து கொண்டான்.
"சயின்டிஸ்ட் வர்மா ?"
"யெஸ் அசோக்."
"பிளசன்ட் சர்ப்ரைஸ் இவ்வளவு காலையில உங்கள நான் எதிர்பார்க்கல."
"என்னோட சூழ்நிலை அப்படி அசோக்."
அவர் ஏதோ சிக்கலில் இருக்கிறார் என்பது அசோக்கிற்கு புரிந்தது.
"வாங்க உள்ள"
வர்மா அசோக்கைப் பின்தொடர்ந்தார்.
தன் இருக்கையில் அமர்ந்த அசோக் எதிரிலிருந்த சேரைக் காட்டி சொன்னான்.
"உட்காருங்க சார்."
அமர்ந்தார்.
"என்ன பிரச்னை?"
அசோக் கேட்க வர்மா சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டார். அவர் விழிகளில் பயத்தைப் பார்த்த அசோக் அவரை சமாதானப்படுத்தினான்.
"இங்க யாரும் வரமாட்டாங்க. எந்த பிரச்சினையும் இங்க இல்லை. உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க "
வர்மா குரல் கம்மிய நிலையில் சொன்னார்.
"என் பொண்ணத் தூக்கிட்டாங்க அசோக்."
அவர் சொல்ல அசோக் அதிர்ந்தான்.
"யார் சார்?"
"சூர்யகுமார்."
"யு மீன்?"
"யெஸ். அண்டர்வேர்ல்ட் டான் சூர்யகுமார் ஆளுங்கதான் என் பொண்ணத் தூக்கிட்டாங்க."
வர்மா சொல்ல அசோக் அதிர்ச்சியாய் பார்த்தான்.
"இதுல நான் என்ன பண்ண முடியும்?"
"என் பொண்ணக் காப்பாத்துங்க அசோக் ப்ளீஸ்."
"போலீஸ்க்கு?"
"இல்ல அசோக். என்னால் போலீஸ்க்குப் போக முடியாது."
"ஏன்?"
"என் ஆராய்ச்சி அப்படி"
"புரியல."
"செயற்கை பிளாஸ்மானு வெளியே சொல்லிட்டு வேற ஒரு ஆராய்ச்சியும் நான் பண்ணேன்."
"என்ன அது?"
"கொஞ்சம் ரத்தம்"
"மீன்ஸ்?"
"என்னோட லேப்ல நான் பண்ண ப்ராஜக்ட்."
"என்னது?"
"மனிதக் குரங்கோட ரத்தம் மனுஷனுக்கு சேருமான்னு பண்ண ஆராய்ச்சில நானே நம்ப முடியாம எனக்கு கொஞ்சம் நல்ல ரிசல்ட் கிடைச்சது. இது நான் எங்கயும் வெளில சொல்ல முடியாது. டாப் சீக்ரட்னு ரொம்ப ரகசியமா வச்சிருந்தேன். ஆனா?"
"ஆனா ?"
"நேத்துத்தான் தெரிஞ்சது. எப்படியோ இந்த ரகசியம் சூர்யக்குமாருக்கும் தெரிஞ்சிருக்குன்னு."
"எப்படி சொல்றீங்க?"
"நேத்து காலேஜ்க்குப் போன என் பொண்ணு சரண்யா வீட்டுக்கு வரல. எல்லா இடமும் தேடிப்பார்த்தேன். அப்பத்தான் எனக்கு போன் வந்துச்சு. சரண்யா அவன் கஸ்டடில இருக்கிறதாவும் அவள வீட்டுக்கு அனுப்பணும்னா என் ரிசர்ச் பேப்பர்ஸ் அவனுக்குக் கொடுக்கணும்னு மிரட்டினான்."
"ம்"
"எனக்கு வேற வழி தெரியலை அசோக் உங்கள நம்பி வந்துட்டேன் நீங்கதான் எனக்கு ஒரே நம்பிக்கை.
என்னால போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக முடியாது. காரணத்தை உங்க கிட்ட சொல்லிட்டேன்."
"உங்க நிலைமை எனக்கு புரியுது ஆனா இந்த கேஸ் நான் எப்படி எடுத்துக்க முடியும்?"
"ப்ளீஸ் அசோக் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க"
அவர் மீண்டும் கெஞ்ச அசோக் யோசித்தான்.
"உங்க பொண்ணு ஃபோட்டோ இருக்கா?"
"கொண்டு வந்திருக்கேன்."
அவர் காட்டிய ஃபோட்டோவில் சரண்யா சிரித்தாள்.
"அண்டர் வேர்ல்ட் டான் இதில இன்வால்வ் ஆயிருக்கான். அவனும் அவனோட ஆட்களும் எந்தக் காரணத்துக்காகவும் போலீஸ்க்குப் போகாதவங்க அசோக்."
"ம் அதாவது செத்தாலும் சரி கொன்னாலும் சரி எதுவும் கணக்கில காட்டமாட்டாங்க. அப்படித்தானே சார்?"
அசோக் புன்னகைத்தபடி கேட்க வர்மா மௌனமாய் தலையசைத்தார்.
"கவலைப்படாதீங்க சார் இறங்கி அடிச்சு ரொம்ப நாளாச்சு. தைரியமா இருங்க. பார்த்துக்கலாம்."
அசோக் சொல்ல அவர் அசோக்கின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
"ரொம்ப தேங்க்ஸ் அசோக் உங்களை நம்பித்தான் இருக்கேன்."
"இட்ஸ் ஓகே. இந்த கேஸ் விஷயமா எல்லா டீடெயில்ஸ் டேவிட் கிட்ட குடுங்க. கொடுத்துட்டு நீங்க கிளம்புங்க. நீங்க இங்கே வந்தது யாருக்கும் தெரிய வேண்டாம் நாங்க பார்த்துக்கறோம்."
"ஓகே அசோக்."
எழுநத வர்மா டேவிட்டைப் பார்த்து முழு விவரங்களையும் தந்து விட்டு வெளியே சென்றார் காரில் ஏறி அமர்ந்தார்.
அவர் அலைபேசி அடித்தது.
மறுமுனையில் யாரோ பேச புன்னகைத்தார்.
"அசோக் நம்பிட்டான். பட்சி சீக்கிரம் மாட்டும்.மாட்டினதுக்கப்புறம் கழுத்தறுத்திட வேண்டியதுதான்".
சொன்னவரின் விழிகளில் குரூரம்.
"இப்ப என்ன பண்ணப் போறோம் அசோக்?"
கார்த்தி கேட்க அசோக் அனைவரையும் பார்த்தான்.
"இந்த கேஸ் கொஞ்சம் வித்தியாசமானது. எதிரிக்கு நாம இந்த கேஸ்ல இறங்கியிருக்கிறது தெரியக்கூடாது அப்படி தெரிஞ்சா நம்மள முடிக்க ட்ரை பண்ணுவான். நாம அதுக்குள்ள அவன முடிக்கணும். வர்மா சாரோட பொண்ணையும் காப்பாத்தணும்."
"போலீஸ்கிட்ட?"
"இல்ல அதுக்கு வாய்ப்பே இல்லை வர்மா சார் அதை விரும்பல. எதிரிகளும் போலீஸ்க்கெல்லாம் கட்டுப்படாதவங்க."
"அப்போ நம்ம ஸ்ட்ரேட்டஜி என்ன?"
"சூரியக்குமார் இப்போ எங்க இருக்கான்னு தெரிஞ்சுக்கணும். அவனோட ஆளுங்க யாருன்னு கம்ப்ளீட் லிஸ்ட் கரெக்ட் பண்ணனும். அவன் எல்லார்கிட்டயும் க்ளோஸா இருக்க மாட்டான். அவனுக்குன்னு கொஞ்சம் பேர் மட்டும் தான் ரொம்பக் க்ளோசா இருப்பாங்க. அவங்க யார் யாருன்னு கண்டு பிடிக்கணும் அவங்கள நாம தீவிரமா கண்காணிக்கணும். வர்மா சார் பொண்ணு இருக்கிற இடம் தெரியணும். அதுக்கப்புறம் என்ன பண்ணனும்னு நான் சொல்றேன்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் அவங்க மோசமானவங்க. எந்தக் காரணத்தைக் கொண்டும் அவங்களுக்கு சந்தேகம் வரக்கூடாது நாம செய்யற எல்லா வேலையும் அவங்களுக்குத் தெரியாம செய்யணும் ஒருவேளை நாம் மாட்டிக்கிட்டோம்னா அவங்க எப்படி நடப்பாங்கன்னு நம்மால் சொல்ல முடியாது."
"புரியுது அசோக்". சொன்ன திவ்யாவைப் பார்த்தவன் சொன்னான்.
"இதுல கொஞ்சம் ஆபத்து அதிகம் நீ வேணும்னா ரெஸ்ட் எடுத்துக்கோ நாங்க மூணு பேரு பார்த்துக்கறோம்."
"இல்ல அசோக். எது நடந்தாலும் நம்ம நாலு பேருக்கும் சேர்ந்தே நடக்கட்டும் நான் உங்ககூட இருக்கேன்."
திவ்யா சொல்ல அசோக் அவளை பெருமையாய் பார்த்துக் கொண்டே தலையசைத்தான்.
"டேவிட்"
"சொல்லு அசோக்"
"எந்தக் காரணத்தைக் கொண்டும் உணர்ச்சிவசப்பட கூடாது. அவ்வளவு சீக்கிரம் நாம யாருன்னு நாம காட்டிக்கக் கூடாது. முக்கியமா நீ யார் மேலயும் முதல்ல கை வைக்காதே"
"புரியுது அசோக்."
"நாம தனித்தனியா இருந்தாலும் ஏதாவது ஆபத்துன்னா மத்தவங்க நம்மள உடனே அப்ரோச் பண்ற அளவுக்குத்தான் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் செய்யணும்."
"ஓகே அசோக்."
"நம்ம நாலு பேர் கிட்டயும் மேக்ஸிம் 9 பிஸ்டல் எப்பவும் இருக்கணும். "
"ம்"
"அசோக்" திவ்யா அழைத்தாள்.
"சொல்லு திவ்யா"
"சூரியக்குமார் ஆளுங்கள எப்படி கண்டுபிடிக்கிறது?"
"கரெக்ட் அது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் நாம எப்படி நம்மளை வெளிக்காட்டமாட்டோமா அதே மாதிரி அவங்களும் அவங்கள வெளிக்காட்ட மாட்டாங்க. ஆனால் சூரியக்குமார் ஆளு ஒருத்தன் நம்மகிட்ட மாட்டினால் போதும், அவனைப் பேச வைக்கணும். மத்தவங்களை யார் யாருன்னு அவனே சொல்லிடுவான்."
"ம் அந்த ஒருத்தனை எப்படி கண்டுபிடிக்க.?"
"அதுக்கு ஒரு வழியிருக்கு" புன்னகைத்தான் அசோக்
***
வர்மா தன் சேம்பரில் இருந்த கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்தார்.
அலைபேசி அடித்தது.
பிரதாப். அவர் மகன்.
எடுத்தார்.
"சொல்லு"
"என்ன நிலவரம்?"
"திட்டம் போட்டபடிதான் நடக்குது".
"சரண்யா மாட்டுவாளா நம்மகிட்ட மறுபடியும்?"
"கண்டிப்பா மாட்டுவா. எனக்கு நம்பிக்கையிருக்கு."
"அப்போ அவசரப்பட்டு டெஸ்ட் பெட் கலைக்க வேண்டாம் தானே?"
"வேண்டாம். "
"அந்த சூர்யக்குமார் எதுக்கு சரண்யாவக் கடத்தி வச்சிருக்கான்? காரணம் ஏதாவது தெரிஞ்சதா?"
"இல்ல."
"ம்"
"அசோக் நாளைக்கு உண்மைய தெரிஞ்சிக்கிட்டா நமக்கு ஆபத்து."
"அது பத்திக் கவலைப்படாத. நம்ம எலி நமக்குக் கிடைக்கும். அது அசோக் கொண்டுவந்துடுவான். நம்மள டார்ச்சர் பண்ண சூர்யக்குமார் அசோக் ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் தான் உயிரோடு இருப்பாங்க. யார் இருந்தாலும் அவங்கள காலிபண்ண இன்னொருத்தன் இருக்கான்."
வர்மா சொல்ல பிரதாப் ஆச்சர்யப்பட்டான்.
"என்னப்பா சொல்றீங்க? யார் அது?"
"நேரம் வரும்போது சொல்றேன்."
"சரிப்பா"
"நீ ஒண்ணு பண்ணு"
"சொல்லுங்கப்பா"
"வேற எலி கிடைக்குதான்னு பாரு."
"கஷ்டம் பா. கம்பேடிபிளிட்டி டெஸ்ட் ஃபெயில் ஆயிடுதே."
"ம். எதுக்கும் ட்ரை பண்ணு".
"சரிப்பா."
***
"ரோகிணி"
"அம்மா"
"எங்கம்மா கிளம்பிட்டே?"
"இன்னிக்கு ஒரு இன்டர்வ்யு இருக்கும்மா"
"இன்னிக்காவது வேலை கிடைக்குமாம்மா?"
"முருகனுக்கு வேண்டியிருக்கேன்மா"
"சீக்கிரமா உனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சு உனக்கு ஒரு நல்லது பண்ணி முடிச்சுட்டா நான் நிம்மதியா கண்ணை மூடிடுவேன்"
அம்மா தன் வழக்கமான பல்லவியைப் பாட ரோகிணி பெருமூச்சு விட்டபடி நகர்ந்தாள்
அம்மா பாவம். நினைவு தெரிந்த நாள் முதல் ஆஸ்த்மாவுடன் போராடிக்கொண்டு வீட்டு வேலை செய்து ரோகிணியைப் படிக்க வைத்திருந்தாள். அப்பா அம்மாக்கு உடல் நிலை சரியில்லை என்றவுடன் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டு போய் விட்டார். அதிலிருந்து ரோகிணியின் ஒரே கனவு நல்ல வேலைக்குப் போய் அம்மாவை உட்கார வைத்து சோறு போடவேண்டும் என்பதுதான்.
ஏதேதோ நினைவுகளுடன் பேருந்து நிறுத்தத்தை அடைய பஸ் வர சரியாக இருந்தது. ஏறிக்கொண்டாள்.
இன்டர்வ்யூ கால் லெட்டரில் குறிப்பிடப்பட்டிருந்த இடத்தை அடைந்தாள். திகைத்தாள்.
காட்டுப்பகுதியாக இருக்க இங்கா வேலை செய்யப் போகிறோம் என்று பார்க்க ஒரு பேட்டரி கார் அங்கே வந்தது.
"மிஸ் ரோகிணி?"
ஒருவன் கேட்க ஆமென்று தலையாட்டினாள்.
"ஏறுங்க"
"இன்டர்வ்யூ?"
"ஆமா ஏறுங்க"
தயக்கமாய் ஏறிக்கொண்டாள்.
பேட்டரி கார் காட்டுப்பாதையில் பயணிக்க ஆரம்பித்தது.
"உங்க கம்பெனி இங்க இருக்கிறதா கால் லெட்டர்ல போடலயே?"
ரோகிணி கேட்க அவன் சொன்னான்.
"அது ஹெட் ஆஃபீஸ் அட்ரஸ் கால் லெட்டர்ல இருக்கும். கம்பெனி இங்க தான்."
பேட்டரி கார் நிற்க இறங்கிய ரோகிணி மலைத்தாள்.
இவ்வளவு விஸ்தீரமான ஒரு கம்பெனியை இந்த இடத்தில் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
தயக்கமாய் உள்ளே நுழைந்தாள்.
ரிஷப்ஷனிஸ்ட் புன்னகைத்தாள்.
"யெஸ்"
"இன்டர்வ்யூக்கு வந்திருக்கேன்."
"நேம் சொல்லுங்க"
"ரோகிணி"
ரிஷப்ஷனிஸ்ட் இன்டர்காமில் பேசினாள்.
ரோகிணியிடம் புன்னகைத்து
"ஃபர்ஸ்ட் ஃப்ளோர் செகண்ட் ரூம்" என்றாள்.
ரோகிணி படிக்கட்டுகளில் ஏறி இரண்டாவது அறை முன் நிற்க
"கம்மின்" என்ற குரலைத் தொடர்ந்து உள்ளே சென்றாள்.
"குட்மார்னிங் சார்"
"குட்மார்னிங்" என்ற படி திரும்பினான் பிரதாப்.
ரோகிணி நீட்டிய ஃபைலை வாங்கிப் பார்த்தவன் முகம் மலர்ந்தது.
சம்பிரதாயத்திற்காக நான்கு கேள்விகள் கேட்டான்.
"மிஸ் ரோகிணி"
"சார்"
"என்ன சேலரி எக்ஸ்பெக்ட் பண்றீங்க?"
"என்னோட படிப்புக்கும் அனுபவத்துக்கும் தகுந்த மாதிரி நீங்களே ஒரு நல்ல சம்பளத்தைக் கொடுப்பிங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு சார்."
"நைஸ். *
"தேங்க்யு சார்,"
"ரோகிணி"
"சார்"
"ரிஷப்ஷன்ல வெயிட் பண்ணுங்க."
"யெஸ் சார்."
ரோகினி வெளியே செல்வதை கபடமாய் பார்த்துக் கொண்டிருந்த பிரதாப் தன் அருகில் இருந்த இன்டர்காமை எடுத்தான்.
"சன்னி?"
"யெஸ் சார்"
"ரிசப்ஷன்ல ஒரு பொண்ணு உட்கார்ந்திருக்கும்."
"யெஸ் சார்'
"கம்பேடிபிளிட்டி டெஸ்ட் பண்ணி ரிப்போர்ட் சப்மிட் பண்ணு."
"யெஸ் சார்."
"சன்னி"
"சார்"
"டெஸ்ட் பண்றது அந்தப் பொண்ணுக்குத் தெரியக்கூடாது."
"யெஸ் சார்"
***
"என்ன வாசு நல்லாயிருக்கியா?" அசோக் கேட்க செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு வெளியில் வந்தான் வாசு
"வா தல. ரொம்ப நாளாச்சு. ரொம்ப சந்தோஷமா இருக்கு உன்னைப் பார்க்க."
"எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா?"
"சொல்லு தல. என்ன பண்ணனும்?"
"இங்க உங்களுக்குள்ள பிரச்சினை வருதுன்னா என்ன பண்ணுவீங்க?"
"புரியல தல."
"நீ மெக்கானிக் ஷெட் வச்சிருக்க. உங்கிட்ட இங்க யாராவது பிரச்சினை பண்றாங்க. நீ என்ன பண்ணுவ?"
"நம்ம கிட்ட யார் தல பிரச்சனை பண்ணுவாங்க?"
"பண்றாங்கன்னு வச்சுக்கோ. என்ன பண்ணுவ?"
"வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு வெட்டிட்டுப் போயிட்டேயிருப்பேன் தல."
இது இதத்தான் எதிர்பார்த்தேன். சிரித்த அசோக் கேட்டான்.
"உனக்கு சப்போர்ட்டா இருக்கிறது யாரு? "
"அது இருக்காங்க தல"
"யார் ஆளுங்க?"
"தல நீ கேக்கறது வச்சுப் பார்த்தா எதும் வில்லங்கம் ஆய்டுச்சா? உன்னப் பத்தி தெரியாம யாராச்சும் எதாவது பண்ணிருப்பாங்க தல."
"அதில்ல"
"சொல்லு தல"
"எனக்கு கொஞ்சம் விவரம் வேணும்?"
"என்ன விவரம் தல?"
"இவன் இப்ப எங்க இருப்பான்? இவன் ஆளுங்கல்லாம் யார் யாருன்னு."
அசோக் சூரியகுமார் போட்டோவை வாசுவிடம் காட்டி கேட்க வாசு அதிர்ந்தான்.
சூரியக்குமாரின் போட்டோவை பார்த்த வாசு அதிர்ந்தான்.
"தல எதுக்குத் தல கேக்கற?"
"ஒரு கணக்கிருக்கு."
"இவன் மோசமானவன் தல."
வாசு சொல்ல அசோக் புன்னகைத்தான்.
"நான் மட்டும் என்ன?" அசோக் கேட்க வாசு சிரித்தான்.
"அதுக்கில்ல தல இவன் ரொம்ப டேஞ்சரான ஆளு இவன்கிட்ட வச்சுக்கக் கூடாது. "
"அது நான் பார்த்துக்கிறேன் இவன் இப்ப எங்க இருப்பான்? இவனோட ஆளுங்க யாரு யாருன்னு ஏதாவது தெரியுமா?"
"மரப்பாலம் பழைய நடராஜா தியேட்டர் தெரியுமா தல?"
"ம்"
"அங்க காளின்னு ஒரு ரவுடி இருக்கான். அவன் இவன் கேங் தான்."
"சூப்பர்."
"வேற யாரு? சட்டுன்னு ஞாபகத்துக்கு வர மாட்டேங்கிறாங்க தல."
"விடு. நான் பார்த்துக்கறேன். இவன் வீடு எங்கயிருக்கு?"
"இவனுக்கு இங்க மட்டும் நாலு வீடிருக்கு தல."
"ம்"
"தல"
"சொல்லு"
"பத்திரமா இரு தல எல்லாரும் கொலகாரப் பசங்க."
"நன்றி வாசு."
வெளியே வந்த அசோக் டேவிட்டை அழைத்தான்.
"டேவிட்"
"சொல்லு அசோக்"
"எங்க இருக்கே?"
"வீரப்பன் சத்திரத்தில்."
"ஏதாவது முன்னேற்றம்?"
"இல்ல."
"சரி நீ ஒண்ணு பண்ணு."
"சொல்லு அசோக்"
"மரப்பாலம் வா"
"மரப்பாலத்துக்கா?"
"ஆமா. இங்க ஒரு ஆளத் தூக்கணும்."
மறுமுனையில் டேவிட் சிரித்தான்.
"அதுக்குள்ள யார் மாட்டினாங்க?"
"நேரா வா சொல்றேன்."
சொன்ன அசோக் அலைபேசியை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு தன் புல்லட்டை ஸ்டார்ட் செய்தான்.
எதிர்க்காற்றில் அவன் முடி கலைய கண்களில் மாறாதிருந்த தீர்க்கம் அவன் உறுதியை வெளிப்படுத்த சீரான வேகத்தில் பயணித்தான்.
அரைமணிநேரத்தில் மரப்பாலத்தை அடைந்தான்.
இங்கே அந்தக் காளி வீட்டை எப்படி கண்டுபிடிப்பது?
யோசித்தவன் ஒரு டீக்கடை முன் புல்லட்டை நிறுத்தினான்.
"அண்ணா ஒரு டீ"
"வடை சாப்பிடுங்க தம்பி."
"இப்ப போட்டதா?"
"ஆமா தம்பி. சூடாயிருக்கு"
"கொடுங்க" வாங்கிக் கொண்டான்.
சாப்பிட்டுப் பார்க்க நல்ல சுவை என்பதை நாக்கு அறிவித்தது.
"வடை சூப்பர்ணா"
"தேங்க்ஸ் தம்பி"
"எவ்வளவுணா?"
"அஞ்சு ரூபா"
"என்னண்ணா சொல்றீங்க? இவ்வளவு நல்லா போடறீங்க? வெறும் அஞ்சு ரூபா தான் வாங்கறீங்களா?"
"போதும் தம்பி. போகும்போது என்ன கொண்டு போகப்போறோம்?"
"கை கொடுங்கண்ணா"
"எதுக்குத் தம்பி?"
"உங்கள மாதிரி இருக்கிறவங்க தான் அரசியலுக்கு வரணும்."
"நான் அரசியல்ல இருக்கேன் தம்பி."
"என்னண்ணா சொல்றீங்க?"
"அஞ்சு ரூபாக்கு வடை பத்து ரூபாக்கு சாப்பாடு போடறேன் தம்பி. என்னால முடிஞ்ச சேவை இது. அப்ப நான் அரசியல்ல இருக்கிற மாதிரி தானே?"
"சூப்பர்ணா."
"தம்பி யாரு? புதுசா இருக்கீங்க."
"நமக்கு வெளியூர்ணா. இங்க என்னோட நண்பன் ஒருத்தனப் பார்க்க வந்தேன். அட்ரஸ் மறந்துட்டேன். "
"போன் பண்ணிப் பாருங்க தம்பி"
"பண்ணிட்டேண்ணா. சிக்னல் இல்ல."
"ஓ"
"அவன் வீடு யார் வீட்டுக்கோப் பக்கத்தில இருக்கு. யாரக் கேட்டாலும் அவர் வீட்டுக்கு வழி சொல்லுவாங்கன்னு சொன்னான்."
"யார் தம்பி சொல்லுங்க?"
யோசிப்பது போல் நடித்த அசோக்
"இங்க காளின்னு .."
அவன் முடிக்கவில்லை.
அவர் முகம் மாறியது.
"தம்பி"
"சொல்லுங்கண்ணா"
"உடனே ஊரப் பார்த்து போங்க."
"என்னண்ணா சொல்றீங்க?"
"நீங்க உங்க ஃபிரண்டத் தேடி வர்ல. எதுக்கோ காளியத் தேடறீங்க. வேண்டாம் தம்பி. வெட்டிப் போட்டுடுவான். கிளம்புங்க."
"அண்ணா"
"சொல்லுங்க தம்பி"
"நீங்க சொல்றது கரெக்ட். நான் அவனத் தேடித்தான் வந்தேன். அவன் வீடு எங்கயிருக்குன்னு சொல்லுங்க."
அவர் பயமாய் பார்த்தார்.
"பயப்படாதீங்கண்ணா தப்பா ஒண்ணும் நடக்காது."
அவர் தயங்கியபடி காளியின் முகவரியைச் சொல்ல அசோக் குறித்துக் கொண்டான்.
அடுத்த பத்து நிமிடங்களில் காளியின் வீட்டின் முன் நின்ற அசோக் அயர்ந்தான்.
வீடு அல்ல அது. மாளிகை. உயரமான காம்பவுண்ட் சுவர்கள் உள்ளே என்ன நடந்தாலும் வெளியே தெரிவிக்காது மறைத்து நின்றன.
வெளியே இருந்து பார்த்தால் உள்ளே காளி இருக்கிறானா இல்லையா என்பதே தெரியாது.
என்ன செய்யலாம்?
யோசித்தவன் திகைத்தான். செக்யூரிட்டி ஒருவன் அசோக்கை நோக்கி வந்தான்.
"யார் நீ? என்ன பண்றே இங்க?"
கோபப் பார்வையுடன் அவன் கேட்க அசோக் சட்டென்று அப்பாவி போன்று நடித்தான்.
"அய்யாவப் பார்க்க வந்தேனுங்க"
"எந்த ஊர் நீ?"
"எல்லக்கடை"
"என்ன விஷயமா?"
"வேலை விஷயமா சிபாரிசுக்கு"
"எதுக்கு வெளில நின்னுட்டிருக்கே?
பயமா?"
"ஆமாங்க."
"அய்யா உள்ள தான் இருக்கார்"
சொன்னவன்
"உன் பேர் என்ன?" கேட்டான்.
"முருகனுங்க."
"ஆதார் கார்ட் கொடு"
அதை அசோக் எதிர்பார்க்கவில்லை.
"கொண்டுவரலங்க"
"உன் போட்டோ ஐடி கார்ட் ஏதாச்சும் கொடு "
கேட்ட செக்யூரிட்டியின் பார்வையில் சந்தேகம் வலுத்திருக்க அசோக் மேலே பார்த்தான். காமரா ஒன்றும் இல்லை.
"எடு உன் ஐடி கார்ட்" சொன்ன செக்யூரிட்டியின் முகத்தை இடது கையால் சட்டென்று பிடித்து அவனை சுதாரிக்க விடாமல் வலது கையால் விடாமல் குத்தியதில் மூக்கு உடைந்து அலறவும் முடியாது மயங்கினான்.
அவனை அப்படியே சுவரில் சாய்த்து வைத்த அசோக் ஒரு நிமிடம் யோசித்தான்.
கணுக்காலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிஸ்டல் இருக்கிறதா? பார்த்தான். இருந்தது.
உள்ளே சென்றான்.
***
ரிஷப்ஷனில் அமர்ந்திருந்த ரோகிணி தன்னருகில் வந்து நின்றவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"மேடம் கொஞ்சம் வரீங்களா?"
"நீங்க?"
"நான் சன்னி உங்களுக்கு மெடிக்கல் டெஸ்ட் பண்ணனும். நான் இன்சார்ஜ்."
"மெடிக்கல் டெஸ்ட்டா? எதுக்கு?"
"இங்க அது ஒரு ஃபார்மாலிட்டி. ஜாப்க்கு செலக்ட் ஆறவங்களுக்கு க்ரோனிக் டிஸீஸ் ஒண்ணும் இல்லைன்னு ரிப்போர்ட் எடுத்து வைக்கணும்."
ரோகிணியின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.
"செலக்ட் ஆகிட்டேனா?"
"ஆமா மேடம்.
மெடிக்கல் டெஸ்ட் ரிப்போர்ட் வந்தா அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுத்திடுவாங்க."
சொன்னவன்
"போலாங்களா மேடம்?" கேட்டான்.
ரோகிணி தலையசைத்தாள்.
சன்னி உள்ளே காரிடாரில் நடக்க அவனை மௌனமாய் பின்தொடர்ந்தாள்.
ஆய்வகத்தை அடைந்த ரோகிணி திகைத்தாள். ஏதோ ஆராய்ச்சிக் கூடத்திற்கு வந்த உணர்வில் அவளுக்குள் பயம் கிளர்ந்தது.
"இது நார்மல் டெஸ்ட் மாதிரி தெரியலயே" தயங்கியபடி சன்னியிடம் கேட்க அவன் புன்னகைத்தான்.
"பயப்படாதீங்க மேடம். பார்க்கத்தான் இப்படி செட்டப் இருக்கும். பத்து நிமிஷத்தில் நீங்க இங்கயிருந்து போயிடலாம்.*
"இதுல ஏறிப் படுங்க" சன்னி சொல்ல அவளால் தவிர்க்க முடியாமல் அந்த எக்ஸ்பெரிமண்டல் டெஸ்ட் பெட்டில் படுத்தாள்.
தூக்கம் கண்களைத் தழுவ சன்னி அவளைப் புன்னகையுடன் பார்த்தான்.
மளமளவென்று மறைக்கப்பட்டிருந்த வயர்களை அவளுடன் இணைத்தான். சலைன் பாட்டியில் செயற்கை ரத்தம் இருக்க அதை அவளுக்கு ஐவியில் செலுத்தினான். அருகிலிருந்த மானிட்டரில் அவள் இதயத்துடிப்பு பதிவாகிக் கொண்டே இருந்தது.
முதல் ஐந்து நிமிடங்கள் அமைதியாக இருந்த ரோகிணியின் உடம்பு தூக்கிப் போட ஆரம்பித்தது.
மானிட்டரில் இதயத் துடிப்பு தாறுமாறாய் எகிறியது.
***
டேவிட் ட்ராஃபிக்கில் மாட்டி மரப்பாலம் வந்தபோது ஒரு மணி நேரம் கடந்திருந்தது.
அசோக் எங்கிருக்கிறான்? யோசித்த டேவிட் அவன் அலைபேசிக்கு தொடர்பு கொள்ள ரிங் போனது.
முழு ரிங் போயும் அசோக் எடுக்கவில்லை.
டேவிட்டிற்குள் பதட்டம்.
மீண்டும் முயன்றான்.
ரிங் போனது.
அசோக் எடுக்கவில்லை.
ரோகினியின் உடம்பு தூக்கிப்போடப்படுவதைப் பார்த்த
சன்னி திகைத்தான்.
பதட்டமாய் அனைத்து இணைப்புகளையும் துண்டிப்பதற்கு முன் மானிட்டர் நீண்ட பீப் சத்தத்துடன் நேர்கோட்டைக் காட்டியபடியே இருக்க சன்னிக்குப் புரிந்தது.
ரோகிணி இறந்துவிட்டாள்.
பிரதாப்பிற்கு இன்டர்காமில் அழைத்தான்.
"சார்"
"சொல்லு"
"சார்"
"என்ன சொல்லு? டெஸ்ட் பண்ணியா?"
"பண்ணேன் சார். பட் ரிசல்ட் ஃபெயிலியர்"
"என்னாச்சு?"
"செத்துட்டா."
"மை காட்"
"சார்"
"ம்"
"டிஸ்போஸ் பண்ணிடறேன்"
"ம்"
பிரதாப் யோசித்தான்.
"ப்ரிலிமினரி டெஸ்ட் பாஸிட்டிவாத்தானே இருந்திச்சு? அப்புறம் எப்படி தப்பு நடந்துச்சு?"
தன் முன் இருந்த இன்டர்காம் அடிக்க பிரதாப் எடுத்தான்.
"ஹலோ"
"சார் கேட்ல இருந்து பேசறேன்."
"சொல்லு"
"உங்களைப் பார்க்க ஒரு இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு."
***
அசோக் உள்ளே போனவுடன் சட்டென்று அவசரமாய் நோட்டமிட்டான்.
நாய் எதுவும் இருக்கிறதா என்று பார்ப்பதற்குள் அவன் முன் மூச்சிறைத்தபடி வந்து நின்றது அந்த நாய்.
ஆட்கள் யாரும் வருகிறார்களா என்று பார்த்தான். யாரும் இல்லை.
நாய் அசோக்கைப் பார்த்து பயங்கரமாக குரைத்தது. அவன் மேல் பாய முற்பட அசோக் சட்டென்று விலகினான்.
கீழே கயிறு ஒன்று கிடக்க அதைப் பாய்ந்து எடுத்த அசோக் அதன் ஒரு முனையை சுருக்கிட்டான்.
நாய் மீண்டும் மேலே பாய கயிற்றை அதன் கழுத்தை நோக்கி எறிந்தான். குறி தவறவில்லை நாய் சுருக்கில் மாட்டியது. விடுபட முயன்று முடியாமல் தீனமாய் அலறியது.
பங்களாவின் உள்ளே இருந்து யாரோ வெளியே வருவது போல் இருக்க கயிற்றை அருகிலிருந்த மரத்தில் கட்டிவிட்டு அசோக் மரத்தின் பின் ஒளிந்து கொள்ள வெளியே வந்தவன் சுற்றுமுற்றும் பார்த்தான்.
நாய் மரத்தில் கட்டப்பட்டிருப்பது அவனுக்கு வித்தியாசமாக இருக்க அவன் அருகில் வந்தான்.
அவன் பார்வை அசோக்கின் மேல் பட்டுவிட ஆவேசமானான்.
"யாருடா நீ?"
அசோக் பதில் பேசாமல் மௌனமாய் நிற்க
அவன் கோபமாய் அசோக் மேல் பாய்ந்தான்.
அவனை எளிதில் கையாண்ட அசோக் அவனைக் கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்தான். அவன் பேச முடியாமல் சுவாசத்திற்கு திணற
"இன்னும் கொஞ்சம் அழுத்தினா செத்துப் போய்டுவே. பரவாயில்லையா?"
அசோக் கேட்க அவன் அசோக்கையே பார்த்தான்.
"யார் நீ? என்ன வேணும் உனக்கு?"
"காளி கிட்ட என்னைக் கூட்டிட்டுப்போ"
"சாகணும்னு ஆசைப்படறியா?"
"அப்படித்தான் வெச்சுக்கயேன்."
சொன்ன அசோக் தன் மேக்ஸிம் பிஸ்டலை வெளியே எடுத்தான்.
அவன் அதை எதிர்பார்க்கவில்லை.
"என்ன பார்க்கிற? ஒண்ணு என்ன காளிகிட்ட கூப்பிட்டுப் போ. இல்லன்னா நான் உன்ன மேல அனுப்பி வச்சிடறேன்."
"நான் கூப்பிட்டுப் போறேன்" அவன் திணறலாய் சொன்னான்.
"அதுல ஒரு சின்ன கரெக்ஷன்.
"என்ன?"
"நம்ம ரெண்டு பேரும் கதவு வரைக்கும்தான் போவோம். நீ வெளியேயிருந்து அவனைக் கூப்பிடணும்"
அசோக் சொல்ல அவன் மௌனமாய் இருந்தான்.
"புரிஞ்சதா?" அசோக் கேட்க தலையாட்டினான்.
கீழே கிடந்தவன் எழுந்த வேளையில் வீட்டில் இருந்து நான்கு பேர் வெளியே வர அவர்களின் நடுவில் முரட்டு மீசை ஜிப்பாவுடன் காளி அசோக்கை நோக்கி நடந்தான்.
"அவர் தான் காளி. இப்ப உன்ன வச்சு செய்வார் பாரு. " அருகிலிருந்தவன் அசோக்கிடம் சொல்ல அசோக் ஒரு நிமிடம் யோசித்தான்.
அருகில் வந்த காளி அசோக்கை ஏறிட்டான்.
"யார் நீ? என்ன வேணும்?"
கேட்ட காளியைப் புன்னகையுடன் பார்த்த அசோக்
"நீ தான் வேணும்" என்றான்.
"யார் நீ? ரங்கன் ஆளா?"
காளி கேட்க அவன் ஆட்களில் ஒருவன் காளியிடம் கேட்டான்.
"இவன் யாரா இருந்தா என்னண்ணா? சொருகிட்டுப் போயிட்டே இருக்கலாம்."
சொல்லியபடியே அருகில் வந்தவன் எகிறிப் போய் விழுந்தான். நடந்ததைப் பார்த்த காளி ஒரு நிமிடம் அசந்து போய் நின்றான்.
அசோக்கின் வலது கால் சொன்னவன் முகத்தில் வெடித்ததில் எகிறிப் போய் விழுந்தவன் எழ முயன்று முடியாமல் மயங்கினான்.
காளியுடன் இருந்த மற்ற மூன்று பேர் அசோக்கை சூழ்ந்து கொண்டனர்.
ஒருவன் எட்டி உதைக்க முயல அவன் கால்களைப் பற்றித் தூர எறிந்தான்.
மற்ற இருவர் இரு பக்கமும் அசோக்கின் தோள்களைப் பிடித்துக்கொள்ள காளி சிரித்தான்.
"என்ன மாட்டினியா?" கேட்டவன் தன் கையிலிருந்த பட்டன் கத்தியை விரித்தான்.
அசோக்கை நெருங்கினான். அசோக் தன்னைப் பிடித்திருந்தவர்களிடம் இருந்து விடுபட முயன்றான். முடியவில்லை. பிடி பலமாக இருந்தது. காளி கத்தியுடன் நெருங்க அவனை உதைக்க கால்களை உயர்த்த காளி விலகிக்கொண்டான்.
சிரித்தான்.
"யார் நீ? இன்னும் கொஞ்ச நேரம்தான் உனக்கு டைம். இல்லன்னா கழுத்தறுத்துட்டுப் போயிட்டேயிருப்பேன். இந்தக் காளி பத்தி உனக்குத் தெரியாது."
அசோக் தன்னைப் பிடித்திருந்த இருவரையும் பார்த்தான். அதிகமான தன்னம்பிக்கையால் நெருங்கி நின்றவர்களைப் புன்னகையுடன் பார்த்தான்.
"என்ன சிரிக்கிறே?" காளி கேட்க
"ஓவர் கான்ஃபிடன்ஸ் எப்பவும் உடம்புக்கு ஒத்துக்காது. எதிரிய எப்பப் பிடிச்சாலும் ரொம்ப ஒட்டி நிக்கக் கூடாது."
அசோக் சொல்ல
"நின்னா?" கேலியாக காளி கேட்டான்.
அசோக் தன் வலது முழங்கையால் வலது புறம் நின்றிருந்தவன் விலாவில் அதிரடியாகத் தாக்க அவன் நிலை குலைந்தான். பிடியை விட அதே வேகத்தில் வலது கையால் இடது புறம் இருந்தவன் தலையில் ஓங்கி அடிக்க அவன் கதறிக் கொண்டு கீழே விழுந்தான்.
காளி ஆவேசமாகக் கத்தியுடன் பாய விலகிக் கொண்ட அசோக் அவன் கழுத்தில் கையால் வெட்டினான்.
காளி நிலைகுலைந்து போய் அசோக்கை பரிதாபமாய் பார்த்தான்.
"காளி" புன்னகைத்த அசோக் தொடர்ந்தான்.
"உன்னப் பத்தி எனக்குத் தெரியாதுன்னு சொன்னே. உண்மை. தெரிஞ்சுக்கத்தான் வந்தேன். என் இடத்துக்கு உன்னத் தூக்கிட்டுப் போய் உன்னைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கறேன். போலாமா கண்ணா?"
"தப்பு பண்றே"
"தப்பா?"
"ஆமா. நான் யாரோட ஆளுன்னு தெரியாம என் மேல கை வச்சுட்டே"
"யாரோட ஆளு காளி நீ?"
"சூர்யக்குமார் ஆளு நான்" மூச்சு வாங்கியபடி காளி சொல்ல அசோக் புன்னகைத்தான்.
"எனக்கு நீ ஒண்ணு பண்ணனும் காளி."
"சொல்லு"
"என்னை சூர்யக்குமார் கிட்ட கூட்டிட்டுப் போறியா?"
அசோக் கேட்க காளி அதிர்ந்தான்.
"யார் நீ?"
"நம்ம இடத்துக்குப் போய் விலாவாரியா பேசலாம். " சொன்னவன் தன் பிஸ்டலை வெளியில் எடுத்தான்.
"இது என்ன தெரியுமா காளி? மேக்ஸிம் 9.0 சைலன்சர் பிஸ்டல். சத்தம் சுத்தமா வராம சாகடிச்சுடும்.
நீ புத்திசாலி. என்னை இதை யூஸ் பண்ண விடமாட்டே. கரெக்ட்தான காளி?"
அசோக் புன்னகைக்க காளி தளர்ந்தான்.
"எந்த சேட்டையும் பண்ணாம என் கூட வந்துட்டே இருக்கணும். யாராவது கேட்டா நான் உன்னோட ஃப்ரண்ட்னு சொல்லு. புரியுதா காளி?"
காளி தலையாட்டினான்.
எதார்த்தமாக தன் மொபைலை எடுத்துப் பார்த்த அசோக் டேவிட் பலமுறை அழைத்திருந்ததைப் பார்த்தான்.
மீண்டும் டேவிட் அழைக்க எடுத்துப் பேசினான்.
"சொல்லு டேவிட்"
"அசோக் நீ எங்க இருக்க இப்போ?"
"காளி வீட்ல."
"ஒண்ணும் பிரச்சனை இல்லையே?"
"ஒண்ணும் பிரச்சனை இல்ல டேவிட். நீ எங்க இருக்க?"
"காளி வீட்டுக்கு வெளிய"
"இரு நாங்க வர்றோம்" சொன்ன அசோக் காளியை நெட்டித் தள்ளியபடி வெளியே வர டேவிட் காரிலிருந்து இறங்கினான். அசோக்கை நம்ப முடியாமல் பார்த்தான்.
"என்ன டேவிட் அப்படி பார்க்கிறே? " அசோக் புன்னகையுடன் கேட்க டேவிட் சிரித்தான்.
காளி இருவரையும் வெறுப்பாய் பார்த்தான்.
காரின் டாஷ்போர்டில் இருந்த மாத்திரைப் பட்டையில் இருந்து ஒரு மாத்திரை எடுத்த அசோக் காளியிடம் கொடுத்தான்.
"இத சாப்பிடு."
"இது என்ன?"
"விஷம் இல்ல. நம்பி சாப்பிடு."
"முடியாது."
சொன்ன காளியைப் புன்னகையுடன் பார்த்தான் அசோக்.
"அது தூக்க மாத்திரை. ஒண்ணு சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்கு. அதுக்குள்ள நம்ம இடம் வந்துரும். இல்லை. ஒரேயடியா தூங்க நீ விரும்பினா அனுப்பி வைக்க நான் தயார். என்ன சொல்ற?"
கேட்ட அசோக்கை கோபமாய் பார்த்தான் காளி.
"என்ன காளி? உன்ன விட மோசமா இருக்கேனா நான்? என்ன பண்றது? என் கேரக்டரே அப்படித்தான்."
அசோக் சொல்ல ஒன்றும் பேசாமல் மாத்திரையை வாங்கி முழுங்கினான் காளி.
கொஞ்ச நேரத்தில் கொட்டாவி வர அவனை காரின் பின் சீட்டில் கிடத்தினான் டேவிட்.
"டேவிட்"
"சொல்லு அசோக்"
"நம்ம இடத்துக்கு இவனைக் கொண்டு போயிடு. நான் பைக் எடுத்துட்டு வந்திடறேன்."
"ம்"
டேவிட் புறப்பட்டுச் சென்றுவிட யாரும் அவர்களை கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான் அசோக். யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிசெய்தவன் தன் புல்லட்டை ஸ்டார்ட் செய்தான்.
எதிர்க்காற்றில் கேசம் கலைய சீரான வேகத்தில் பயணித்தான்.
***
"சொன்னாக் கேளு இப்ப எந்த பிரச்னையும் வேண்டாம்"
வர்மா தன் முன் இருந்தவனிடம் சொல்ல
"முடியாது. என் அண்ணன் சாவுக்கு நான் அசோக்கைப் பழிக்குப் பழி வாங்குவேன். என் அண்ணன் ஜெயசிம்மன் எவ்வளவு பெரிய சயின்டிஸ்ட். அவரை அநியாயமாக் கொன்ன அசோக்கோட சாவு என் கையில் தான்"
சொன்ன ஷக்தி தன் முன் இருந்த கிளாஸில் இருந்த பிராந்தியை எதுவும் சேர்க்காமல் அப்படியே குடித்தான்.
அவன் விழிகள் சிவந்தன.
இன்ஸ்பெக்டர் கேட்டில் இருக்கிறார் என்பதை அறிந்த பிரதாப் அதிர்ந்தான்.
என்ன பண்ணலாம்?
தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தான்.
படிய வாரிக் கொண்டான்.
இயல்பாக இருக்கவேண்டும். வருவது போலீஸ். சந்தேகப்படும்படி எதுவும் நடந்து கொள்ளக்கூடாது.
தனக்குள் சொல்லிக் கொண்ட பிரதாப் இயல்பாய் இருக்க முற்பட்டான்.
சற்று நேரத்தில் கதவைத் தட்டும் ஓசை கேட்க
"ப்ளீஸ்" என்றான்.
இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார்.
"வாங்க சார் உட்காருங்க"
எழுந்து வரவேற்ற பிரதாப்பை சந்தேகமாகப் பார்த்தார்.
ஒன்றும் பேசாமல் அமர்ந்தவர் அவனை கூர்மையாகப் பார்க்க அவன் அவர் பார்வையைத் தவிர்த்தான்.
"மிஸ்டர் பிரதாப்"
"சார்"
"உங்க கம்பெனியப் பத்திக் கொஞ்சம் சொல்ல முடியுமா?"
"யெஸ் சார்"
"ம்"
"நாங்க லீடிங் ஃபார்மாச்சுடிக்கல்ஸ் அண்ட் ரிஸர்ச் கூட பண்றோம்."
"எந்த மாதிரி?"
"அலோபதி அண்ட் ஆயுர்வேதா கம்பைன் பண்ணி"
சொல்ல முற்பட்டவனை இடைமறித்த இன்ஸ்பெக்டர் புன்னகைத்தார்.
"நான் வேற கேள்விப்பட்டேனே"
பிரதாப்பிற்கு குப்பென்று வியர்த்தது.
"சார்"
"என்ன பதில் காணோம்?"
"சார் என்ன கேள்விப் பட்டீங்கன்னு"
"அதை நான் சொல்றத விட நீங்க உங்க வாயால சொல்றது உத்தமம்."
இவர் போட்டு வாங்கப் பார்க்கிறார்.
பிரதாப் உறுதியானான்.
"இல்ல சார் நான் இப்ப சொன்னது தான் இங்க நடக்குது. வேற ஏதாவது நீங்க கேள்விப்பட்டிருந்தா யாராவது தப்பா சொல்லிருப்பாங்க."
"இஸ் இட்?"
"யெஸ் சார்."
இன்ஸ்பெக்டர் எழுந்தார்.
"உங்க கம்பெனியப் பார்க்கலாமா?" இன்ஸ்பெக்டர் கேட்க பிரதாப்பிற்கு வாய் உலர்ந்தது.
"யெஸ் சார் வாங்க"
***
அசோக் தன் புல்லட்டை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய டாமி பாய்ந்து வந்தது. வாலாட்டியபடி நிற்க அசோக் டாமியின் முகத்தை வருடினான்.
"என்னடா சாப்பிட்டியா?"
அசோக் கேட்க
"அவன் இன்னும் சாப்பிடலை" குரல் வந்த திசையைப் பார்த்தான்.
திவ்யா புன்னகைத்தாள்.
"ஏண்டா?" டாமியைப் பார்க்க அது அசோக்கைப் பார்த்தது. தன் வலது முன்னங்காலை உயர்த்த அதைப் பற்றியவன்
"ஒரு ப்ராப்ளமும் இல்ல. சாப்பிடு" என்றான்.
டாமி தலையாட்டியது. திவ்யா கொண்டு வந்து வைக்க சாப்பிட்டது.
அது சாப்பிடுவதை பாசமாய் பார்த்த அசோக் திவ்யாவிடம் கேட்டான்.
"நீ சாப்பிட்டியா?"
"இன்னும் இல்ல."
"டேவிட் வந்துட்டானா?"
"ம்"
"எங்க இருக்கான்?"
"அண்டர்கிரவுண்ட்ல"
"கார்த்தி?"
"அவன் கூடத்தான் இருக்கான்"
"ம் திவ்யா"
"சொல்லு அசோக்"
"நீ சாப்பிடு. நாங்க சாப்பிட லேட் ஆகும்."
"ஓகே அசோக்."
தன் அறைக்குப் போன அசோக் அந்த சிறிய வஸ்துவை எடுத்தான். அண்டர்கிரவுண்டில் இருந்த அறைக்குச் செல்ல நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டிருந்த காளி முறைத்தான். அருகில் இருந்த டேவிட் கார்த்தி இருவரும் அசோக்கைப் பார்த்துப் புன்னகைத்தனர்.
"டேவிட்"
"ம்"
"ஏதாச்சும் சொன்னானா?"
"இல்ல. வாயத் திறக்க மாட்டேங்கிறான்."
"ம் "
"பேச வச்சிடலாமா?" கார்த்தி முன்னால் வர
அசோக் புன்னகைத்தான்.
"வேண்டாம். அடிச்சாலும் சொல்ல மாட்டான் கார்த்தி."
சொன்ன அசோக்கைப் பார்த்து காளி புன்னகைத்தான்.
"பரவாயில்லையே என்னப்பத்தி நிறையத் தெரிஞ்சு வச்சிருக்க."
"காளி உனக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்ல. சூரியக்குமார் எங்க இருக்கான்னு சொன்னா போதும். நானே உன்னை உன்னோட வீட்ல கொண்டு போய் விட்டுடுவேன். நீ என்னை நம்பலாம்."
சொன்ன அசோக்கை அலட்சியமாகப் பார்த்த காளி
"உனக்கு சூரியக்குமார் பத்தித் தெரியல. உங்க நாலு பேருக்கும் கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆயிடுச்சு. அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்."
சொன்ன காளியை அறைய முயன்ற கார்த்தியைத் தடுத்தான் அசோக்.
"ஏன் அசோக்?"
"எப்ப ஒருத்தனால கையாலாகாமப் போகுதோ அப்ப அவனால செய்ய முடிஞ்சது நம்மள கோபப்படுத்தறது மட்டும்தான். நாம அப்ப கோவப்படக்கூடாது."
புன்னகைத்தபடி அசோக் சொல்ல காளி அயர்ந்துபோய் பார்த்தான்.
"அப்ப என்ன பண்றது இப்ப?" கார்த்தி கேட்க
அசோக் அந்த வஸ்துவை வெளியில் எடுத்தான். அது ஒரு மாத்திரை
"இது செரட்டோனின் "
"இது எதுக்கு அசோக்?"
"நம்ம காளிக்கு"
அசோக் சொல்ல காளி பயமாய் பார்த்தான்.
"என்ன காளி? இப்ப இந்த மாத்திரைய உன்னோட வாயில போட்டு முழுங்க வெச்சுடுவோம். இந்த மாத்திரை என்ன பண்ணும் தெரியுமா? உன்னோட மூளையோட நியூரோடிரான்ஸ்மிட்டர அஃபெக்ட் பண்ணும். பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கும். அப்ப நாங்க கேட்கப்போற எல்லா கேள்விக்கும் நீ உனக்கும் தெரியாம பதில் சொல்லப் போற."
அசோக் மாத்திரையுடன் காளியின் அருகில் செல்ல காளி தவித்தான்.
கார்த்தி வாட்டர் பாட்டிலை கொண்டு வந்தான்.
"வேண்டாம் "காளி கத்தினான்.
"அசோக்" டேவிட் கூப்பிட
"சொல்லு டேவிட்" திரும்பினான் அசோக்.
"இது பிரச்னை ஒண்ணும் ஆயிடாதே?"
"தெரியல டேவிட். நான் டாக்டர் இல்லையே. ஏதாச்சும் தப்பா ஆச்சுன்னா மார்ச்சுவரியில் அட்மிட் பண்ணிடலாம்". அசோக் அலட்டிக்கொள்ளாமல் புன்னகையுடன் சொல்ல காளி அதிர்ந்து போய் பார்த்தான்.
"வேண்டாம் வேண்டாம் "கத்தினான்
"என்ன வேண்டாம்?"
"மாத்திரை வேண்டாம் ப்ளீஸ்"
"அப்ப சூர்யக்குமார் பத்தி எங்களுக்குத் தெரியணுமே"
"சொல்றேன். எல்லாமே சொல்றேன்"
காளி சொல்ல டேவிட் கார்த்திக் இருவரும் அவனை மகிழ்வாய் பார்த்தனர்.
"கார்த்தி"
"ரெக்கார்ட் பண்ணிடறேன் அசோக்"
காளி சொல்ல ஆரம்பித்தான்.
***
இன்ஸ்பெக்டருக்கு பிரதாப் ஒவ்வொரு செக்சனையும் காட்டி விளக்கினான்.
சில இடங்களை தன் மொபைல் கேமராவில் அவர் படம் பிடித்துக் கொண்டார்.
பிரதாப்பின் இதயம் வேகமாய் துடித்தது.
இனி கம்பேடிபிலிடி டெஸ்ட் நடக்கும் அறை மட்டும்தான் இருக்கிறது.
உள்ளே சன்னி இருப்பான். ரோகிணியின் டெட் பாடியை மறைத்திருப்பானா?
"மிஸ்டர் பிரதாப்"
"சார்"
"இந்த ஏசிலயும் உங்களுக்கு ஏன் இப்படி வேர்க்குது?"
"ஸாரி சார் கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான்."
"இட்ஸ் ஓகே நீங்க வேணா ரெஸ்ட் எடுங்க. நான் பார்த்துக்கறேன்."
"இல்ல சார் நானும் வர்றேன்"
"ஆர் யூ ஷ்யூர்?"
"யெஸ் சார்"
"சரி வாங்க" சொன்ன இன்ஸ்பெக்டர் கம்பேடிபிலிடி டெஸ்ட் நடக்கும் அறையின் அருகில் வந்தார்.
"மிஸ்டர் பிரதாப்"
"சார்"
"இது என்ன ரூம்?"
பிரதாப் என்ன சொல்வதென்று திகைத்து
"ஸிக் ரூம் சார்" என்றான்.
"மீன்ஸ்?"
"ஸ்டாஃப் யாருக்காவது உடம்பு சரியில்லன்னா இங்க வந்து ரெஸ்ட் எடுப்பாங்க."
"ஐ சீ" சொன்னபடி கதவைத் தள்ளித் திறந்தார்.
சன்னி விஷ் செய்தான்.
தலையாட்டிய இன்ஸ்பெக்டர் அவனை உன்னிப்பாய் பார்த்தபடி கேட்டார்.
"உன் பேர் என்ன?"
"சன்னி சார்"
"என்ன பண்றே?"
"ஹெல்ப்பர் சார். பேஷண்ட்ஸ்க்கு அசிஸ்டண்ட்"
இன்ஸ்பெக்டரின் பார்வை டெஸ்ட் பெட் மீது விழுந்தது.
"இது எதுக்கு?"
"இது எங்க ரிஸர்ச்சோட ஒரு பார்ட் சார்" சொன்ன பிரதாப் இன்ஸ்பெக்டருக்கு தெரியாமல் சன்னிக்கு கண்களை காட்ட அவன் கண்களாலேயே பயப்பட வேண்டாம் என்று சமிக்ஞை செய்தான்.
இன்ஸ்பெக்டர் சுற்றுமுற்றும் பார்த்தார்.
"ஓகே மிஸ்டர் பிரதாப் அப்ப நான் கிளம்பறேன்"
இன்ஸ்பெக்டர் சொல்ல பிரதாப் நிம்மதியாக உணர்ந்தான்.
"யெஸ் சார் தேங்க்யூ சார் "
பிரதாப் சொல்ல இன்ஸ்பெக்டர் திரும்பினார். அப்போது எதார்த்தமாக மருந்துகள் வைக்கப்பட்டிருந்த பெரிய அட்டைப்பெட்டியின் மீது அவர் பார்வை பதிந்தது. அவர் மனதில் ஏதோ உறுத்த அருகில் சென்று அட்டைப் பெட்டியை விலக்க இறந்து கிடந்த ரோகிணி நிலைத்த விழிகளுடன் அவர் பார்வையில் பட்டாள்.
***
காளி சொல்லி முடித்திருக்க டேவிட் அசோக்கைப் பார்த்து கேட்டான்.
"இவனை என்ன பண்றது அசோக்?"
"சூரியக்குமாருக்கு ஒரு வழி பண்ற வரைக்கும் இவன் இங்கயே இருக்கட்டும். "
சொன்ன அசோக் காளியைப் பார்த்து புன்னகைத்தான்.
"கொஞ்ச நாளைக்கு நீ எங்க கெஸ்ட்"
காளி கோபமாய் பார்த்தான்.
கார்த்தி அசோக்கிடம் அந்த மாத்திரையைப் பார்த்தபடி கேட்டான்.
"உனக்கு எப்படி செரட்டோனின் கிடைச்சது அசோக்?"
அசோக் சிரித்தான்.
"இது செரட்டோனின் இல்ல கார்த்தி"
"என்ன சொல்ற அசோக்?"
"இது பாராசிட்டாமால். நம்ம காளிக்காக இது செரட்டோனின்னு சொன்னேன்."
அசோக் சொல்ல டேவிட் கார்த்தி இருவரும் சிரித்தனர். காளி நொறுங்கினான்.
இன்ஸ்பெக்டரின் பார்வையில் ரோகிணி பட்டுவிட அவர் பிரதாப்பை கேலியாய் பார்த்து புன்னகைத்தார்.
"என்ன பிரதாப் யார் இது?"
வசமாக சிக்கிக் கொண்டு விட்டோம் என்றுணர்ந்த பிரதாப் அதிர்ந்தான். என்ன செய்வது என்று புரியாமல் ஒரு நிமிடம் தடுமாறினான்.
ஆபத்து உடனடியாக ஏதாவது செய் இல்லை என்றால் மாட்டிக் கொண்டு விடுவோம்.
அவன் மூளை திரும்பத் திரும்ப எச்சரிக்க சற்றும் யோசிக்காமல் இன்ஸ்பெக்டர் கழுத்தில் கையால் வெட்ட அவர் ஒரு அவசர மயக்கத்திற்குப் போனார்.
"சன்னி" பிரதாப் சத்தமாய் அழைத்தான்.
"சார்" சன்னி வேகமாய் ஓடிவந்து அவன் முன்னால் நின்றான்:கீழே கிடந்த இன்ஸ்பெக்டரைத் திகைப்பாய் பார்த்தான்.
"சன்னி"
"சார்"
"இன்ஸ்பெக்டர் ரோகிணியப் பார்த்துட்டார். எனக்கு வேற வழி தெரியல"
"சார்"
"இப்ப மயக்கத்துல தான் இருக்கார் நீ ஒண்ணு பண்ணனுமே"
"சொல்லுங்க சார்"
"இவருக்கு பிளாஸ்மா கம்பேடிபிளிட்டி டெஸ்ட் பண்ணு உடம்பு தாங்குதான்னு பாரு. இல்லன்னாலும் பரவால்ல" பிரதாப் சொல்ல சன்னி தலையசைத்தான்.
இன்ஸ்பெக்டரை நோக்கி குனிந்த சன்னி அதிர்ந்தான். மெல்ல அசைந்த இன்ஸ்பெக்டர் தன் கண்களை திறந்து பார்த்தார். அவருக்கு சூழ்நிலையின் விபரீதம் புரிந்தது. அசைய முயல சன்னி அவரை தரதரவென்று இழுத்துச் சென்றான்.
பிரதாப் தன் நெற்றியில் அரும்பிருந்து வேர்வையை கைக்குட்டையால் துடைத்தான்.
'இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல. இது கண்டிப்பா அப்பாக்கிட்ட சொல்லணும். அப்பா என்ன சொல்லுவார்னு தெரியல'
அவர்கிட்ட சொல்லாம மறைச்சிடலாமா? வேண்டாம் எதுவாக இருந்தாலும் அவரிடம் சொல்லி விடுவதே நல்லது.
யோசித்த பிரதாப் தன் மொபைலை எடுத்தான். வர்மாவிற்கு அழைத்தான் ரிங் போனது.
"யெஸ்"
"அப்பா நான் தான்"
"சொல்லு பிரதாப்"
"இங்க ஒரு கம்பேடிபிளிட்டி டெஸ்ட் நடத்தினேன். "
"அவசரப்படாத பிரதாப் எல்லாருக்கும் அதைப் பண்ண முடியாது"
"அப்பா" பிரதாப் வர்மாவை தயக்கமாய் அழைத்தான்.
"என்ன சொல்லு?"
"இன்டர்வியூக்கு இங்க வந்த ஒரு பொண்ண டெஸ்ட் பண்ணேன்"
"என்ன சொல்ற? என்னாச்சு?"
"வந்து…அந்தப் பொண்ணு செத்துட்டா"
"முட்டாள். பாடிய டிஸ்போஸ் பண்ணு முதல்ல"
"அப்பா"
"என்ன சொல்லு"
"டிஸ்போஸ் பண்றதுக்குள்ள இன்னொரு ப்ராப்ளம் ஆயிடுச்சு"
"என்ன?"
"இன்ஸ்பெக்டர் ஒருத்தர் வந்தார்"
"இன்ஸ்பெக்டரா? "
"ம்"
"அவர் எப்படி அந்த நேரத்தில அங்க வந்தார்?"
"தெரியலப்பா" சொன்னவன் தயக்கமாய் அழைத்தான்.
"அப்பா"
"ம்"
"அந்தப் பொண்ணு செத்துப் போனது அவருக்குத் தெரிஞ்சுருச்சு" பிரதாப் சொல்ல மறுமுனையில் வர்மா அதிர்ந்தார்.
"பிரதாப்"
"வேற வழி இல்லாம…"
"இல்லாம?"
"அவர் கழுத்துல கையால வெட்டினேன். மயக்கமாய்ட்டாரு. சன்னிகிட்ட முடிக்கச் சொல்லிட்டேன்"
"மை காட். "
"அப்பா"
"ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேல கை வச்சா என்ன ஆகும்னு தெரியுமா? டிபார்ட்மெண்ட் சும்மா இருக்கும்னு நினைக்கிறியா?"
"அப்பா"
"போய் அந்த சன்னியத் தடுத்து நிறுத்து போ"
"இதோ போறேன் பா" சொன்ன பிரதாப் வெளியே ஓடினான். உள்ளே இருந்த அறைக்குள் நுழைய இன்ஸ்பெக்டரின் உடம்பில் ஏற்கனவே செயற்கை ரத்தம் செலுத்தப்பட்டிருக்க சன்னி பிரதாப்பிடம் கேட்டான்.
"சார்"
"ம்"
"என்னாச்சு சார்?" கேட்ட சன்னியை வெறுமையாய் பார்த்த பிரதாப் மௌனமாய் நின்றான்.
அதே நேரம் செயற்கை ரத்தம் பொருத்தப்பட்ட இன்ஸ்பெக்டரின் உடம்பு அசைந்தது. மானிட்டரைப் பார்த்த சன்னி உற்சாகமானான்.
"சார்"
"என்ன?"
"இன்ஸ்பெக்டர் உடம்பு செயற்கை ரத்தத்தை ஏத்துக்க ஆரம்பிக்குது"
"வாட்?" பிரதாப் மானிட்டரைப் பார்த்தான். பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கோடுகள் தாறுமாறாக மேலும் கீழும் போக அவனுக்குப் புரிந்தது.
'ஏதோ விபரீதம்'
இன்ஸ்பெக்டர் கண் திறந்து பார்த்தார். அவர் பார்வையில் பிரதாப் பட அவர் எழுந்தார். தன்னுடன் இணைக்கப்பட்டிருந்த வயர்களைப் பிய்த்தெறிந்தார்.
இன்ஸ்பெக்டர் எழுந்ததைப் பார்த்த பிரதாப் வாய் உலர்ந்தான்.
"சார் நான்.." ஏதோ சொல்ல ஆரம்பித்த பிரதாபை குழப்பமாய் பார்த்த இன்ஸ்பெக்டர் பெருங்குரலெடுத்துக் கத்தினார். அதை கேட்ட பிரதாப் சன்னி இருவரும் அதிர்ந்து போய் பார்த்தனர்.
"சார்"
"சொல்லு சன்னி"
"வாங்க சார் ஓடிடலாம்" சன்னி சொல்ல பிரதாப்புக்கு அது நல்ல யோசனையாகத் தோன்றியது.
மெல்ல நகர்ந்து கதவு பக்கம் சென்ற பிரதாப்பை இன்ஸ்பெக்டர் பாய்ந்து பிடித்தார்.
அவனை கோபமாய் பார்த்து ஏதோ மாதிரியாகக் கத்தினார். தான் பேச முயற்சித்தும் தன்னால் எதுவும் பேச முடியவில்லை என்றுணர்ந்தவர் சட்டென்று தன் தலையில் மாறி மாறி அறைந்து கொண்டார். பிரதாப்பின் கழுத்தைப் பிடித்து இறுக்க பிரதாப் சுவாசிக்கத் திணறினான்.
"ச…ன்…னி"
"சார்" சன்னி இன்ஸ்பெக்டரைப் பிடித்து தள்ள முயன்று முடியாமல் அருகில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து இன்ஸ்பெக்டரின் தலையில் தாக்க அவர் நிலை குலைந்தார். தரையில் விழுந்தார். தன் கழுத்தைத் தடவி ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிரதாப் இரும்புக்கம்பியை சன்னியிடம் இருந்து வாங்கி இன்ஸ்பெக்டரை தலையில் விளாசினான். இன்ஸ்பெக்டர் தலையில் இருந்து ரத்தம் வழிந்தது.
அவர் உடல் துடித்தது.
பிரதாப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர் துடிப்பு நின்றது. அவர் விழிகள் நிலைத்தன.
"சன்னி"
"சார்"
"ரெண்டு பாடியையும் இம்மீடியட்டா டிஸ்போஸ் பண்ணிடு"
"யெஸ் சார்"
"ரோகினி இன்ஸ்பெக்டர் ரெண்டு பேரும் இங்க வந்ததுக்கான எந்த அடையாளமும் இருக்கக் கூடாது. விசிட்டிங் ரிஜிஸ்டர்ல அந்த பேஜ் எடுத்துடு"
"யெஸ் சார்"
பிரதாப் நெற்றியில் இருந்த வியர்வையைத் துடைக்க அவன் மொபைல் அடித்தது.
பிரதாப்பின் இதயம் எக்கச்சக்கமாய் துடித்தது.
'இந்நேரம் யார்?' யோசித்தவன் எடுத்துப் பார்க்க புது நம்பர்.
***
ஹோட்டல் மேகா.
ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு உரிய அனைத்து தகுதிகளுடன் இருந்தது.
ரெட்டி தன் முன் கண்ணாடி கிளாசில் இருந்த மதுவை உதட்டிற்குக் கொடுக்கப் போன வேளையில் அறைக்கதவு தட்டப்பட்டது.
ரெட்டி குழப்பமானார்.
ராம்தேவ் அதற்குள் வந்து விட்டானா என்ன? அவன் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறதே? அப்படி என்றால் இது யார்?
நான் இங்க வந்தது யாருக்கும் தெரியாது என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன்.
யோசித்தவர் மெல்ல எழுந்தார். எதற்கும் இருக்கட்டும் என்று பிஸ்டலை எடுத்து தன் ஜிப்பா பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.
கதவை திறக்க அவன் உள்ளே நுழைந்தான். ஆறடி உயரத்தில் கூர்மையான பார்வையால் பார்த்தவனை ரெட்டி திகைப்பாய் பார்த்தார்.
"யாரு?"
அவர் கேட்க மெல்ல புன்னகைத்தவன் சட்டென்று அவரை எட்டி உதைக்க ரெட்டி தாறுமாறாக கீழே விழுந்தார்.
"யாரு நீ?" கேட்ட ரெட்டி தன் பிஸ்டலை எடுக்க முயல அதை புரிந்து கொண்டவன் தன் பாக்கெட்டில் இருந்த சைலன்ஸர் பிஸ்டலால் சுட தோட்டா அவனுக்கு விசுவாசமாக ரெட்டியின் நெஞ்சை துளைத்தது. ரெட்டி நம்ப முடியாத பார்வையுடன் இறக்க ஆரம்பிக்க அவன் புன்னகைத்தான்.
"என்னை யாருன்னு கேட்டே. நான் சூர்யக்குமார். இங்க எல்லாமே நான் தான்."
சொன்னவன் வாசலைப் பார்த்து குரல் கொடுத்தான்.
"கிருஷ்ணா"
"சார்"
"இவன உடனே இங்கயிருந்து டிஸ்போஸ் பண்ணனும். நீ இந்த ரூம்ல காத்திரு இவனோட ஆள் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வருவான். அவன் என்ன கொண்டு வர்றானோ அது அடுத்த ஒரு மணி நேரத்துல நீ என்கிட்ட கொண்டு வந்து தரணும்"
"யெஸ் சார்"
சூரியகுமார் வெளியில் வந்தான். லிப்டில் நுழைந்து கீழே வந்தவன் பார்வை ஹோட்டலுக்குள் நுழைந்த அசோக் மீது நிலைத்தது.
யார் இவன்?
சூரியகுமார் அசோக்கைப் பார்த்த அதே நேரத்தில் அசோக்கும் சூரிய குமாரைப் பார்க்க சூர்யக்குமார் சட்டென்று பார்வையைத் தாழ்த்திக் கொண்டான்.
இவன் யாராக இருக்கும்? ஒருவேளை இவன்தான் ரெட்டியைக் காண வந்தவனோ?
சூரியகுமார் யோசிக்க அசோக் ரிசப்ஷனை அடைந்தான்.
"யெஸ் சார்"
"மிஸ்டர் ரத்னக்குமார் எங்க இருக்கார்னு சொல்ல முடியுமா?"
"ரத்னக்குமார்?"
"ரத்னா ஹாஸ்பிடல் எம்டி"
"ஒன் மினிட் சார்"
சொன்ன ரிசப்ஷனிஸ்ட் தன் முன் இருந்த ரெஜிஸ்டரை எடுத்துப் பார்த்து சொன்னாள்.
"ரூம் நம்பர் 307 சார்"
"தேங்க்யூ"
சொன்னவன் லிப்டை அடைந்தான்.
உள்ளே நுழைந்து லிப்ட் பட்டன் மீது கை வைக்கும் பொழுது மற்றொருவன் உள்ளே நுழைந்தான்.
நுழைந்தவன் கண்கள் அங்குமிங்கும் அலைபாய ஏதோ ஒரு வித பதட்டத்தில் இருப்பது போல் அசோக்கிற்கு தோன்றியது.
அவன் இரண்டாவது மாடியில் வெளியேற அசோக் அவனைத் தொடர்ந்தான்.
முன்னால் சென்றவன் காரிடாரில் திரும்பிப் பார்த்தபடி நடக்க அசோக்கிற்கு அவன் மேல் சந்தேகம் உண்டானது.
இங்க ஏதோ விபரீதம்.
***
காலிங் பெல் அடிக்க கிருஷ்ணா எழுந்தான். தன் பாக்கெட்டில் இருந்த ரிவால்வரைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.
copyrights@varnajalam.in
Comments