1
"அப்பா" தன் எட்டு வயது மகள் செல்வி தன் முன் வந்து நிற்க சண்முகம் மலர்ந்தான்.
"என்னம்மா?"
"ஜெலஸ்னா என்னப்பா?"
"பொறாமைம்மா"
"அப்படின்னா?"
"அப்படின்னா?" சண்முகம் யோசித்தான்.
"இப்ப ஒரு விஷயம் ரெண்டு பேர் செய்யறாங்கன்னு வை"
"எந்த விஷயம்?"
"நீயும் உன் ஃப்ரண்ட்ம் டான்ஸ் ஆடறீங்க."
"ம்"
"அவ உன்னை விட நல்லா ஆடறா. நீ என்ன நினைப்பே?"
"நானும் அவள மாதிரி ஆடணும்னு நினைப்பேன்"
"வெரிகுட். ஆனா அப்படி நினைக்காம அவ நல்லா ஆடறான்னு அவள நாலு பேர்கிட்ட திட்டறேன்னு வை. அதான் பொறாமை"
"நல்லா ஆடற பொண்ண யார் பா திட்டுவாங்க?"
செல்வி அப்பாவியாய் கேட்க சண்முகம் புன்னகைத்தபடி அவள் நெற்றியில் முத்தமிட்டான். கேட்டான்.
"அம்மா என்ன பண்ணுது?"
"அம்மா கிச்சன்ல இருக்காங்கப்பா"
சண்முகம் எழ காலிங்பெல் அடித்தது. வெளியே பார்க்க ஹவுஸ் ஓனர் ரங்கசாமி நின்றார்.
"வாங்க சார்"
உள்ளே வந்தார்.
"என்ன சாப்பிடறீங்க? டீ ஆர் காஃபி ?"
"அதெல்லாம் வேணாம். இப்படி உட்காரு." சொன்ன ரங்கசாமி செல்வியைப் பார்த்து கேட்டார்.
"என்ன கண்ணு எப்படி படிக்கிற?"
"நல்லாப் படிக்கிறேன் அங்கிள்"
"வெரிகுட்"
சொன்னவர் சண்முகத்திடம் திரும்பினார்.
"எப்படி சொல்றதுன்னு தெரியல. இந்த வீட்ட விக்கலாம்னு இருக்கேன்"
ரங்கசாமி சொல்ல சண்முகம் அதிர்ந்தான்.
"சார் என்ன சொல்றீங்க?"
"பாம்பேல இருக்குற பையன் கூட போய் செட்டில் ஆகப் போறேன் அவனும் ரொம்ப நாளா கூப்பிட்டிருக்கான் அதான்."
"புரியுது சார்"
"வீட்டை விக்கிறதுன்னு ஆயிப்போச்சு. அதான் உனக்கு ஏதாவது ஐடியா இருந்தா உனக்கே கொடுத்தறலாம்னு உன்கிட்ட சொல்றேன்"
ரங்கசாமி சொல்ல சண்முகம் திகைத்தான் .புன்னகைத்தான் .
"என்னால இந்த வீட்டை வாங்க முடியாதுங்க. என் பட்ஜெட் கம்மி"
"நல்லா யோசிச்சு சொல்லு சண்முகம் உனக்கு வேணும்னா கொஞ்சம் பார்த்து பண்ணிக்கலாம் "
"அதுக்கு இல்ல சார் இந்த வீடு நல்ல வசதியா இருக்கு சிட்டிக்கு நடுவுல இருக்கு. நீங்க ஒரு விலை மனசுக்குள்ள வச்சிருப்பீங்க. அந்த விலை எனக்கு சுத்தமா கட்டுப்படி ஆகாது"
"சரி உன் விருப்பம்" ரங்கசாமி எழுந்தார்.
"சார்"
"ம்"
"நான் வீடு மாற கொஞ்சம் டைம் கொடுப்பீங்களா?"
"என்ன சண்முகம் இப்படி கேட்கற? உனக்கு நல்லபடியா வேற வீடு அமைஞ்சதுக்கு அப்புறம் தான் பத்திரத்தைப் பதியறோம்" அவர் புன்னகைக்க சண்முகம் நெகிழ்ந்தான்.
சமையல் வேலையை முடித்துக் கொண்டு வெளியில் வந்த கீதா சண்முகத்தின் அருகில் வந்து நின்றாள்.
"என்னங்க"
"ம்"
"என்ன பண்ணப் போறீங்க?"
"யோசிப்போம் புரோக்கர் கிட்ட சொல்லி வேற வீடு வாடகைக்கு பார்த்துடலாம்"
"நான் ஒரு ஐடியா சொன்னா கேப்பீங்களா?"
"என்ன கீதா ?"
"என்னோட நகை எல்லாம் தரேன். உங்ககிட்ட இருக்குற சேவிங்ஸ் எவ்வளவு இருக்கும்?"
"நாலு லட்சம்"
"எங்கம்மா ஒரு அஞ்சு லட்ச ரூபா கொடுப்பாங்க"
"என்ன சொல்ற கீதா ?"
"அஞ்சும் நாலும் ஒன்பது. என்னோட நகைய வச்சு மூணு லட்சம் லோன் வாங்கலாம். மொத்தம் பன்னெண்டு கையில இருக்கும்"
"அத வச்சு என்ன பண்ண முடியும்?"
"ஏங்க முடியாது? கொஞ்சம் அவுட்டரா ஒரு சின்ன வீடு கிடைச்சா நல்லா இருக்குமே?"
"கிடைச்சா நல்லா இருக்கும் ஆனா கிடைக்காது"
"நீங்க ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா கிடைக்கும். முன்ன பின்ன ஆச்சுன்னா லோன் போட்டுக்கலாம்" கீதா நம்பிக்கையுடன் பேச அவன் புன்னகைத்தான்.
"கீதா"
"ம்"
"உண்மையாகவே உன்னை நினைச்சா சந்தோசமா இருக்கு"
"ஏங்க?"
"எல்லாத்துக்கும் டக்குனு சொல்யூஷன் கொடுக்கிறே."
சண்முகம் சொல்ல கீதா சிரித்தாள்.
"கை கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்"
"செல்வி"
"அப்பா"
"தம்பி என்னம்மா பண்றான்?"
"விளையாடறான் பா"
"ரெண்டு பேரும் வாங்க அம்மா சாப்பிட கூப்பிடுது"
"சரிப்பா"
சண்முகம் கீதா செல்வி தினேஷ் நான்கு பேரும் தரையில் வட்டமாய் அமர்ந்தனர். கீதா மூவருக்கும் பரிமாற சண்முகம் ஒரு தட்டில் சோறு எடுத்து குழம்பை வைத்து கீதாவிற்கு கொடுத்தான்.
"நீயும் சாப்பிடு கீதா"
"நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்"
"அது வேண்டாம் நாம நாலு பேரு தானே? நமக்கு என்ன தேவையோ அதை நாம் எடுத்துப் போட்டுக்கலாம். எல்லாரும் ஒண்ணா சாப்பிடுவோம்."
சண்முகம் சொல்ல கீதா புன்னகைத்தாள்.
"என்னங்க"
"ம்"
"எனக்கு உங்களை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு"
"லூஸ்"
"என்னோட மனசுக்குள்ள ஒரு பயம்"
"என்ன சொல்ற கீதா ?"
"ரொம்ப நிம்மதியாவும் சந்தோஷமாவும் இருந்தா அடுத்தது ஏதோ ஒரு கெட்டது நடக்க போகுதுன்னு சொல்லுவாங்க. நமக்கும் ஏதாவது கெட்டது நடந்திருமோன்னு பயமா இருக்குங்க"
"சீ ஏன் இப்படி?"
"இல்லங்க எனக்குத் தோணுச்சு"
"நிம்மதியா சாப்பிடு எதையும் நினைச்சு மனசப் போட்டு குழப்பிக்காத"
"ம்"
***
"சண்முகம்"
"சொல்லுங்க சார்"
இடம் அவன் அலுவலகத்தின் கேண்டீன்.
"எனக்கு ஒரு புரோக்கர் தெரியும். அவரோட நம்பர் தர்றேன். வீடு ஏதாவது அவுட்டர்ல கிடைக்குமான்னு கேட்டுப் பார்ப்போம்."
"சரி சார் ரொம்ப தேங்க்ஸ் சார்"
"இதுல என்ன இருக்கு சண்முகம்? எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா நீ ஹெல்ப் பண்ண மாட்டியா?"
"நிச்சயமா பண்ணுவேன் சார்"
"நம்பர் சொல்றேன் நோட் பண்ணிக்க"
அவர் நம்பர் சொல்ல சண்முகம் குறித்துக் கொண்டான்.
அந்த எண்ணுக்கு அழைத்தான். ரிங் போனது மறுமணையில் யாரோ எடுத்தார்கள்.
"ஹலோ"
"வணக்கம் என்னோட பேரு சண்முகம் ராபர்ட் சார் உங்க நம்பர் கொடுத்தார்"
"சொல்லுங்க சார்"
"வீடு கொஞ்சம் அவுட்டர்ல ஏதாவது சேல்ஸ்க்கு இருக்கா?"
"என்ன பட்ஜெட்ல பார்க்கறீங்க?"
"பன்னெண்டு"
"ஹலோ இது 2022. பத்து பதினஞ்சு வருஷம் முன்னாடி சொல்ல வேண்டியது இப்ப சொல்றீங்க"
"இல்ல நீங்க கொஞ்சம் அவுட்டர்ல பார்த்து சொல்லுங்க முன்ன பின்ன இருந்தாலும் நான் பார்த்துக்கறேன்"
"இல்ல சார் உங்க பட்ஜெட்டுக்கு என்னோட கையில வீடு எதுவும் இல்ல"
மாயாண்டி கட் செய்துவிட சண்முகம் ஏமாற்றமாய் உணர்ந்தான்.
***
'என் கண்ணா
எத்தனை நாளாய் உன்னை எதிர்பார்க்கிறேன் நான்?
என்றுதான் நீயும் வருவாயோ என்னைச் சேர?
காலமெல்லாம் காத்திருந்தேன்
கண்ணன் உன் வரவிற்கு.
கடைசி வரையிலும் நீ வரவில்லை
காணாது ஆக்கினர் உன்னை
கலங்க வைத்தனர் என்னை.
ஆனாலும் அன்பே
மாறுமோ என் மனம்?
என்றாவது ஒருநாள்
என்னை நீயும் தேடி வருவாய்..
இப்பொழுதும் காத்திருக்கிறேன்
என் காலம் முடிந்தும் கூட.
உன்
வெள்ளச்சி'
அந்த வீடு சிதிலமடைந்திருந்தது. எருக்கஞ்செடிகள் தாறுமாறாய் வளர்ந்திருந்தன. வானில் பெளர்ணமி ஒளிர்ந்தது.
அந்த வீட்டின் நேராக ஒரு சந்து இருந்தது. இருட்டு மை அப்பியது போல் இருக்க யாரோ அந்தத் தெருவில் நடந்தனர். அந்த சத்தம் கேட்ட நாய் ஒன்று சட்டென்று எழுந்து சத்தம் வந்த திசையில் பார்த்தது. அதன் காதுகள் விடைத்தன. நாசியில் புதுவித மணத்தை உணர்ந்த நாயின் விழிகள் இருட்டில் பளிச்சிட்டன. நன்கு பழக்கமான யாரோ வருவது போல் நாய் அதன் கூடவே சென்றது.
நடந்து சென்ற அந்த கருப்பான உருவம் வீட்டை அடைந்தது. உள்ளே ஒரு பெண் குரல் அலறியது. யாருக்காகவோ பல வருடம் காத்திருந்து காத்திருந்தவர் வந்தால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அலறல் அது.
சட்டென்று அதன் அலறல் அடங்கியது. மௌனம். எங்கும் மௌனம். ஓர் அசாதாரணமான மௌனம். நாய் ஊளையிட்டது. சட்டென்று இங்குமங்கும் ஓடியது. சூறைக்காற்று சுழன்றடிக்க ஆரம்பித்தது. அந்த வீட்டின் ஜன்னல்கள் காற்றிற்கு அடித்துக் கொண்டன.
கதவு திறந்து கொண்டது. நாய் கண்கள் ஒளிர்ந்தன. ஆவேசமாய் மூச்சிறைத்தபடி தன் முன்னங் கால்களால் தரையை நோண்டியது.
வெள்ளையாய் ஒரு உருவம் வீட்டுக்கு வெளியே வந்து நின்றது.
சுற்றுமுற்றும் பார்த்த அந்த உருவம் நாயைப் பார்க்க அது சப்த நாடியும் ஒடுங்கிப் போய் உருவத்தைப் பார்த்தது. உருவத்தின் கட்டளைக்குக் காத்திருந்தாற்போல் தன் தலையால் தரையைத் தொட்டது.
'விடமாட்டேன். நான் யாரையும் விட மாட்டேன்'
சொன்ன அந்த உருவம் மீண்டும் வீட்டுக்குள் சென்றது. நாய் மூச்சிறைத்தபடி வீட்டையே பார்த்தது.
***
சண்முகம் அடுத்தது என்ன செய்வது என்று யோசித்தான்.
இனிமேல் யாராவது ப்ரோக்கர் பட்ஜெட் கேட்டால் நான் உடனே பதில் சொல்லக்கூடாது. அவனை சொல்ல வைத்து அவற்றுள் எனக்கு எது சரியாக வரும் என்பதை நான் பார்க்க வேண்டும்.
இரண்டு நாட்கள் அப்படியே போக ஒரு நாள் மாலையில் அவனுக்கு போன் வந்தது.
"ஹலோ"
"சண்முகம் சாரா?"
"ஆமா நான்தான் பேசறேன்"
"நீங்க ரொம்ப லக்கி சார்"
"நீங்க?"
"நான் மாயாண்டி சார் நீங்க கூப்பிட்டிருந்தீங்களே?"
"ஆமா ஆமா சொல்லுங்க"
"உங்க பட்ஜெட்டுக்கு ஒரு வீடு இருக்கு. ஆனா அது கொஞ்சம் அவுட்டர். பக்கத்துல வீடு எதுவும் இல்ல. உங்களுக்கு செட் ஆகுமா?"
"வீட்டைப் பார்க்கலாமா?"
"தாராளமா பார்க்கலாம் எப்ப வருவீங்க?"
" சனிக்கிழமை வந்து பார்க்கிறோம்"
"ஓகே சார் வரும்போது போன் பண்ணுங்க நான் லொகேஷன் ஷேர் பண்றேன்"
"ம்"
***
சனிக்கிழமை காலை.
பெருமாளை தரிசித்து விட்டு சண்முகம் கீதா குழந்தைகள் இருவர் இறங்கினர்.
சண்முகம் புல்லட்டில் ஏறிக்கொண்டு தினேஷ் முன்னால் அமர வைத்தான்.
கீதா செல்வி இருவரும் ஏறிக்கொள்ள புல்லட் ஸ்டார்ட் செய்தான்.
மாயாண்டி வீடு எங்கிருக்கிறது என்று விவரங்கள் அனுப்பி இருந்தான்.
அவர்கள் நான்கு பேரும் வீட்டை அடையும் பொழுது அங்கே யாரும் இல்லை.
வீட்டைப் பார்த்த சண்முகத்தின் முகம் மாறியது.
"கீதா"
"ம்"
"பக்கத்துல வீடு ஒண்ணுமே இல்லையே?"
"இல்லைங்க நான் வர்ற வழியில பார்த்தேன். ஒரு வீடு புதுசா கட்டிட்டிருக்காங்க "
"ம்"
"என்னங்க?"
"ம்"
"இது சந்து குத்து வருது"
"என்ன கீதா சொல்ற?"
"சந்து குத்து வந்தா காத்து கருப்புன்னு சொல்வாங்க"
"என்ன கீதா இது? நாம எந்த ஜெனரேஷன்ல இருக்கோம்? இப்பப் போய்…"
"இல்லங்க சொன்னேன்"
"ம் இந்த புரோக்கர் என்ன இன்னும் வரல? "
சண்முகம் மாயாண்டியை அழைத்தான். மொபைலில் வேறு ஏதோ அலைவரிசை சத்தம் கேட்டது.
சண்முகம் திகைத்தான். இது என்ன வித்யாசமான சத்தம்? ர்ர்ர்ர் என்று தொடர்ச்சியாக? பக்கத்தில் அலைவரிசை சாதனங்கள் ஒன்றும் இல்லையே? பின் எப்படி?
யோசித்தவன் மொபைலை காதில் வைக்க மீண்டும் அந்த சத்தம் கேட்டது.
ர்ர்ர்ர்ர்ர்
தொடரும்
copyrights@varnajalam.in
Comments