வெள்ளச்சியின் வீடு(part-2)

2

தான் புரோக்கருக்கு அழைக்கும் பொழுது வேறு ஏதோ அலைவரிசை அதை தடை செய்வதை சண்முகம் உணர்ந்தான். அதே நேரத்தில் அந்தக் காட்டுப் பகுதியில் அருகில் எந்த குடியிருப்புகளும் இல்லாமல் இருக்கும் பொழுது இந்த அலைவரிசை எங்கிருந்து வர முடியும் என்றும் திகைத்தான். சற்று தூரம் தள்ளிச் சென்றான்.

மீண்டும் புரோக்கருக்கு அழைக்க லைன் போனது.

"சார் வந்துட்டீங்களா? வந்துட்டே இருக்கேன். இன்னொரு அஞ்சு நிமிஷம்." புரோக்கர் மாயாண்டி சொன்னது காதில் விழ அழைப்பை துண்டித்தவன் சுற்று முற்றும் பார்த்தான். எல்லா இடங்களிலும் புதர்கள் மண்டிக்கிடந்தன. இந்த இடம் தகைந்தால் இதை சுத்தப்படுத்துவதற்குள் தாவு தீர்ந்துவிடுமென்றுத் தோன்றியது.

மெல்ல நடந்தவன் வீட்டிற்கு எதிராகச் செல்லும் தெருவைப் பார்த்தான்.

இந்தத் தெரு மட்டும் ஏதோ வித்யாசமாகத் தோன்றுகிறது. மற்ற இடங்கள் எதுவும் புழக்கமில்லாமல் இருக்க இந்த தெரு மட்டும் யாரோ தினமும் புழங்குவது போல் அவனுக்குத் தோன்றியது.

தன் மனம் விபரீதமாக கற்பனை செய்வது போல் அவனுக்குத் தோன்ற தன்னைத் தானே கடிந்து கொண்டான்.

"அப்பா" செல்வி அழைத்தாள்.

"சொல்லும்மா"

"நாம இங்கதான் வரப்போறமாப்பா?"

"தெரியலம்மா"

"அப்புறம் எதுக்குப்பா இங்க வந்திருக்கோம்?"

"இந்த இடத்தை பார்க்க வந்திருக்கோம் அப்பா வச்சிருக்கிற பணத்துக்குள்ள இந்த இடம் கிடைச்சா நாம வாங்கிடலாம்"

"நீ வச்சிருக்கிற பணத்துக்குள்ள இந்த இடம் கிடைக்குமாப்பா?" கேட்ட செல்வியை புன்னகையுடன் பார்த்தான்.

"தெரியலப்பா"

"நீ ஒண்ணும் கவலைப்படாதப்பா. நான் பெருசானதுக்கப்புறம் உனக்கு நிறைய சம்பாதிச்சுத் தர்றேன்" செல்வி செல்ல அவளை உச்சி முகர்ந்தான்.

சண்முகத்திற்கு சொந்த ஊர் மதுரை ஆனால் ஈரோட்டிற்கு வந்து இருபது வருடங்கள் ஆகின்றன ஈரோடுதான் அவனுக்கு வேலையும் தந்தது திருமணமும் இங்கு தான் நடந்தது. கீதாவிற்கு சொந்த ஊர் ஈரோட்டில் மூலப்பாளையம். ஆஷ்ரம் பள்ளிக்கு அருகில் அவர்களின் வீடு. அதைத்தான் வீட்டு உரிமையாளர் விற்பதற்காக வந்து பேசியதில் இவர்கள் தாங்கள் வாங்குவதற்கு தாமரைப்பாளையத்தில் உள்ளே சற்று தள்ளி இருக்கும் இந்த வீட்டிற்கு விலை பேச வந்திருக்கிறார்கள். செல்வி தினேஷ் இருவரும் அவர்களின் குழந்தைகள்.

"என்னங்க"

"சொல்லு கீதா"

"இவ்வளவு தூரம் தள்ளி வந்தா சரியா வருமா?"

"பார்க்கலாம் நமக்கு இருக்கிற பட்ஜெட்டுக்கு இதுதான் செட்டாகும்"

"சரி முடிவு உடனே சொல்லிடாதீங்க புரோக்கர் வரட்டும் பேசுவோம். நாம வீட்ல போய் கலந்து பேசிட்டு அதுக்கப்புறம் சொல்லலாம்"

"சரி கீதா. ஆனா இந்த மாதிரி விஷயத்துல ரொம்ப இழுக்கக் கூடாது. ஏன்னா சட்டுன்னு கை மாறிப் போயிடும்"

"சரிங்க"

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க செல்வி தினேஷ் இருவரும் அங்கே விளையாட ஆரம்பித்தனர். தினேஷ் மண்ணைத் தோண்டி விளையாட செல்வி அவனைத் தடுக்க முற்பட்டு தோற்றாள்.

"க்கா" மழலை மொழியில் கூப்பிட்ட தினேஷைத் திரும்பிப் பார்த்த செல்வி தினேஷின் கையில் ஏதோ இருப்பதைப் பார்த்து அவனிடம் ஓடினாள். தினேஷ் கையில் ஒரு செப்புத்தகடு இருக்க செல்வி அதை அவனிடமிருந்து வாங்க முற்பட அதை அவள் கையில் கொடுக்காமல் தினேஷ் அங்கும் இங்கும் ஓடினான். சட்டென்று அவன் கையில் இருந்த செப்புத்தகடை பறித்த செல்வி அதைத் தூக்கி எறிய அது வீட்டின் ஜன்னலுக்குள் விழுந்தது.

ஏதோ ஒன்று ஜன்னலுக்குள் இருந்து தன்னை எட்டிப் பார்ப்பதாய் செல்வி உணர்ந்தாள்.

மெல்ல ஜன்னலுக்கு அருகில் சென்றாள். ஜன்னல் திறக்கப்பட்டிருக்க ஜன்னலுக்குள் செல்வி எட்டிப் பார்த்தாள். குப்பையாக இருந்தது. யாரும் இல்லை என்று திரும்பிய செல்வியின் காதில் கேட்டது அந்த சத்தம். என்ன சத்தம் என்று திரும்பிய செல்வி அதிர்ந்தாள். நாய் ஒன்று அவளையே பார்த்தது. உறுமியது.

செல்வி பயந்துபோய் ஓடினாள்.

"அப்பா" செல்வி கத்தியதைக் கேட்ட சண்முகம் அவசரமாய் அவள் அருகில் ஓடினான்.

"என்னம்மா?"

"நாய் பா"

செல்வி கைகாட்ட சண்முகம் பார்த்தான். நாய் அவன் மீது பாயத் தயாராக இருப்பது போல் அவனுக்குத் தோன்ற சட்டென்று விலகியவன் கால் தவறி கீழே விழுந்தான்.

நாய் அவன் மீது பாயாமல் உள்ளே யாரோ இருப்பது போல் ஜன்னலையே பார்த்தது. சட்டென்று அது  மண்டியிடுவது போல் தன் தலையால் தரையைத் தொட்டது. பார்த்த சண்முகத்திற்கு குளிர் அடித்தது.

இங்கே ஏதோ விபரீதம். இந்த இடம் நமக்கு வேண்டாம். புரோக்கர் இன்னும் வரவில்லை. அக்கம் பக்கம் குடியிருப்புகளும் அருகில் இல்லை. மனைவி குழந்தைகளுடன் இந்த மாதிரி ஒரு இடத்தில் வசிப்பது சரி வராது.

அவனுக்குள் தோன்றிய அதே கணத்தில் ஹாரன் சத்தம் கேட்டது. மாயாண்டி ஹோண்டா ஆக்டிவாவில் வந்தார்.

அந்நேரத்தில் அவரைப் பார்த்த சண்முகம் ஆறுதலாய் உணர்ந்தான்.

"மன்னிச்சுக்கங்க சார் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு சிட்டில டிராபிக் ஜாஸ்தி" அவன் சொல்ல சண்முகம் தலையாட்டினான்.

அதே நேரத்தில் அவன் மனம் யோசித்தது. தனக்கு சம்பவித்ததை தான் உணர்ந்ததை இவனிடம் சொன்னால் இவன் என்னைப் பற்றி எப்படி நினைப்பான்? என்ன நினைப்பான்? சொல்லிவிடலாம் என்று சொல்லப் போகும் நேரத்தில் மாயாண்டி பேசினான்.

"உங்களுக்கு லக் சார்"

"என்ன சொல்றீங்க?"

"இந்த வீடு போன மாசம் வரைக்கும் பதினஞ்சு லட்சத்துக்கு கம்மி இல்லன்னு சொன்னாங்க. இப்பதான் சரி பரவால்ல கொஞ்சம் முன்ன பின்ன வந்தாலும் பேசி முடிச்சிடுங்கன்னு சொல்லி இருக்கார் ஓனர். இது நீங்க ஓகே சொன்னீங்கன்னா அடுத்த வாரமே ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம்."

"எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கு" சண்முகம் சொல்ல மாயாண்டி அவனைப் பார்த்தான்.

"கேளுங்க என்ன சந்தேகம்?"

"இது சந்து குத்து வீடுதானே?"

"ஆமா"

"பொதுவா சந்து குத்து வீடு நல்ல விலைக்குப் போகாது. அதனாலதான் இந்த வீடு கம்மியா கொடுக்கிறீங்களா?"

"அப்படி சொல்ல முடியாது. இப்பல்லாம் காலம் ரொம்ப மாறிடுச்சு" சொன்ன மாயாண்டியை புன்னகையுடன் ஏறிட்டான் சண்முகம்.

"சாமிக்கு ஆடு வெட்டறது கோழி வெட்டறது இன்னும் நடந்துட்டுத்தான் இருக்கு. எதுக்கு சொல்றேன்னா வருஷங்கள் எவ்வளவு ஆனாலும் சில நம்பிக்கைகள் மாறாது"

"அது சரிதான் சார்"

"அது மாதிரிதான் இந்த சந்து குத்து வீடுன்னு சொல்றது"

"ம்"

"அந்த மாதிரி வீடு இருந்தா காத்து கருப்பு சர்வ சாதாரணமா இருக்கும்கிறது ஒரு நம்பிக்கை. என்ன சரியா தப்பா?"

"சரிதான்" சொன்ன மாயாண்டி தொடர்ந்தான். "அது ஒன்னும் பண்ணாது சார். நீங்க ஒரு சூலம் வச்சு அதில எலுமிச்சம்பழம் குத்திவைங்க. எதுவும் தப்பா நடக்காது"

"நீங்க சொல்றீங்க ஆனா…"

"யோசிக்காதீங்க சார் உங்க பட்ஜெட்டுக்கு இந்த வீடு தான் கிடைக்கும். இதையும் விட்டுட்டீங்கன்னா இந்த வீட்டக் கூட இன்னும் கொஞ்ச நாள்ல வாங்க முடியாம போயிடும் "

மாயாண்டி சொல்ல யோசித்துப் பார்த்த சண்முகத்திற்கு அவன் சொல்வது சரிதான் என்று தோன்றியது.

"இந்த வீட்டு ஓனர் எதுக்காக இந்த வீட்டை விக்கிறாருன்னு தெரிஞ்சுக்கலாமா?"

"அவர டவுன்ல குடியேறிப் போய்ட்டார் சார். இப்ப அவரோட பொண்ணுக்கு கல்யாணம் கூடி வந்திருக்கு. அதான் இந்த வீட்டை விக்கணும்னு சொன்னாரு. வீட்ட பத்தி நீங்க ஒரு கவலையும் படத் தேவையில்ல. கிளீன் பண்ணிட்டீங்கன்னா இது நம்ம வீடான்னு தோணும் உங்களுக்கு"

மாயாண்டி தன் தொழில் சாமர்த்தியத்தை எடுத்து வீசினான். புரோக்கர்கள் பொதுவாக வியாபாரத்தை முடிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள் வியாபாரம் முடியவேண்டும் என்பதற்காக பல வகைகளில் இல்லாத ஒன்றைக் கூட இருப்பதாக சொல்வதற்கு தயங்க மாட்டார்கள் என்பதை சண்முகம் நன்றாக உணர்ந்து இருந்தாலும் சண்முகத்தின் தேவை அவனை இந்த வீட்டை வாங்குவதற்கு சம்மதிக்க வைத்தது.

அடுத்து வந்த ஒரு வாரத்தில் அந்த வீடு சண்முகத்தின் கைக்கு மாறியது. வரப்போகும் ஆபத்து தெரியாமல் சண்முகம் கீதா இருவரும் தங்களுக்கு சொந்த வீடு அமைந்தது என்று மகிழ்ந்தனர்.

"என்னங்க?"

"ம்"

"நாம வாங்கி இருக்கிற வீட்ட ஒரு நாள் போய் கிளீன் பண்ணிட்டு வரணும்"

"போலாம்"

"எப்பன்னு சொல்லுங்க? குழந்தைங்க ரெண்டு பேரையும் எங்க அம்மா வீட்ல விட்டுட்டுப் போலாம்"

"ஏன் கீதா ? அவங்களயும் கூப்பிட்டுப் போலாமே?"

"கிளீன் பண்ணப் போகும்போது அவங்கள கூட்டிட்டுப் போக வேண்டாங்க நமக்கு நிறைய வேலை இருக்கும் அதுல குழந்தைகளும் கஷ்டப்படுவாங்க "

"சரி கீதா"

"என்னங்க"

"ம்"

"எனக்கு மனசுக்கு சந்தோஷமா இருக்கிற அதே நேரத்துல ஏதோ தப்பு நடக்க போகுதுன்னு பயமாவும் இருக்குங்க" சொன்ன கீதாவை புன்னகையுடன் பார்த்தான் சண்முகம்.

"ஆரம்பிச்சுட்டியா?"

"ஏங்க நான் சீரியஸா சொன்னா நீங்க தமாஷ் பண்றீங்க?"

"கீதா"

"போங்க"

"எங்க போக?"

"எங்கயாவது போங்க"

"என்னோட அழகான பொண்டாட்டிய விட்டுட்டு என்னால எங்கயும் போக முடியாது" சொன்னவன் அவள் மடியில் தலை வைத்துப் படுக்க அவள் அவனை பாசமாய் பார்த்தபடி தலையைக் கோதிவிட்டாள். அவன் புன்னகைத்தபடி அவளை தன்னுடன் இழுக்க அவள் மறுத்தாள்.

"ஏன் கீதா ?"

"குழந்தைங்க."

"அவங்கதான் தூங்கிட்டாங்களே?"

"செல்வி அப்படியே உங்கள மாதிரி. தூங்கினாலும் சின்ன சத்தம் கேட்டா அப்படியே டக்குனு எந்திரிச்சிடுவா"

கீதா சொல்ல சண்முகம் செல்வியை பாசமாய் பார்த்தான்.

"செல்விக்குதான் அந்த வீட்டை வாங்கினதுல ரொம்ப சந்தோசம்"

"ஆமாங்க. என்கிட்ட வந்து எப்பவுமே கேப்பா. எப்பம்மா அந்த வீட்டுக்குப் போகப் போறோம்னு"

"ம்"

"என்னங்க"

"சொல்லு கீதா"

"அங்க போனா போக்குவரத்துக்கு கொஞ்சம் பிரச்னை வருமா?"

"அதான் பைக் இருக்கே. பார்த்துக்கலாம்"

"ம்"

"எனக்கு வேற கவலை கீதா"

"என்னங்க?"

"நாங்கல்லாம் வெளியில போனதுக்கப்புறம் நீ தான் தனியா இருக்கப் போற. அந்த இடத்தில் நீ தனியா இருந்துடுவியா?" சண்முகம் கவலையாய் கேட்க கீதா சண்முகத்தை மாதிரியே சொன்னாள்.

"பார்த்துக்கலாம்" சொன்னவளை தன்னுடன் சேர்த்து இறுக்கிக் கொண்டான் சண்முகம்.

***

அதே நேரத்தில் ஒரு பாரில் மாயாண்டி தன் சகாவுடன் அமர்ந்திருந்தான்.

"மாயாண்டி நீ பண்ணது ரொம்பத் தப்பு"

"என்ன கருப்பா சொல்ற?"

"அந்த வீட்டில வெள்ளச்சி தூக்கு மாட்டி செத்துப் போயிட்டா. இது உனக்கு நல்லா தெரிஞ்சிருந்தும் அந்த வீட்டை வாங்கினவங்க கிட்ட நீ அதப் பத்தி எதுவுமே சொல்லல"

"அதச் சொன்னா அந்த வீட்டோட மதிப்பு குறைஞ்சிடுமே"

"பாவம் மாயாண்டி ரெண்டு சின்ன குழந்தைங்க வேற இருக்கு. உள்ள வெள்ளச்சி இருக்கா. சந்து குத்து வீடு வேற. என்ன நடக்கும்னு தெரியல."

தொடரும்


Comments