வெள்ளச்சியின் வீடு(part-3)

கூடவே ஒரு பேய் 4

ராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

மாநகரில் மிக முக்கியமான கம்பெனி

ராஜ் கன்ஸ்டிரக்ஷன்ஸ் ஆரோக்கியராஜ் என்றால் அனைவருக்கும் தானாக மரியாதை வரும். கூடவே பயமும்.

அனைத்து அரசியல்வாதிகளிடமும் தொடர்பு வைத்திருக்கிறார். எந்த ஆட்சி நடந்தாலும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து டெண்டர் கைப்பற்றுவதில் மிகவும் சாமர்த்தியசாலி.

டெண்டர் கைப்பற்ற நிறையவே கொடுக்க வேண்டி வந்தாலும் அதை வேறு வகையில் ஈடு கட்டுவார். அவர் கட்டிமுடித்த பாலங்கள் கட்டடங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் காலை வாரும் என்ற அளவில்தான் இருக்கும். அவை இன்னும் தாக்குபிடிப்பது அவற்றை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களின் புண்ணியத்தால் மட்டுமே.

இந்த விவரங்கள் அனைத்தும் அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் தெரியும். ஆனால் எவரும் அதை கண்டுகொள்வதில்லை. எல்லாருக்கும் தேவைக்கும் அதிகமான சம்பளம் வசதிகள் என்று செய்து கொடுத்து அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் ஆரோக்கியராஜ்.

அதுமட்டுமல்ல எதிர்த்து எதுவும் சொல்லி விட்டால் என்ன நடக்கும் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் நமக்கெதற்கு வம்பு என்ற மனநிலைதான் அனைவருக்கும்.

சிவா மட்டும் கொஞ்சம் வித்தியாசமானவனாக இருந்தான்.

"இது தப்பில்லையா சார்?" 

இடம் கேண்டீன்.

டீயை ரசித்து உறிஞ்சிக் கொண்டிருந்த மேனேஜர் ரங்கநாதன் புன்னகைத்தார்.

"தப்புதான்."

"அப்புறம் எப்படி சார்?"

"இங்கே இருக்கேன்னு கேட்கறே. அப்படித்தானே?"

"ம்"

"எனக்கு ரெண்டு பொண்ணு இருக்கு. முதல் பொண்ணுக்கு கல்யாணம் ஆனாலும் மாப்பிள்ளைக்கு எதிர்பார்ப்பு இன்னும் குறையல. ரெண்டாவது பொண்ணு கல்யாணத்துக்கு தயாரா இருக்கா. நான் என் வீட்டைப் பார்ப்பேனா இல்ல சமூகத்தைப் பார்க்கணுமா? நீயே சொல்லு"

"அதில்ல சார்"

"இரு நான் பேசி முடிக்கறேன். சின்ன வயசுல நானும் உன்ன மாதிரி கோவப்பட்டிருக்கேன். நம்மள மாதிரி ஆளுங்களால கோபம் மட்டும்தான் படமுடியும். அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத்தான். கல்யாணம் ஆயிடுச்சுன்னு வை. பொண்டாட்டி கொஞ்சம் கோவத்தைக் குறைச்சிடுவா. புரியலயா? அவ கொடுக்கிற பிரச்னைல சமுகத்து மேல இருக்கிற அக்கறை குறைஞ்சிடும். இன்னும் அவ அம்மா பொண்ண ஏத்தி விடற கேரக்டர்னு வை சமூகமா அது எங்க இருக்குன்னு தேடற மாதிரி ஆய்டும் நம்ம பொழப்பு."

சொல்லிவிட்டு சிரித்த ரங்கநாதனைப் பார்த்த சிவா தளர்ந்தான்.

"அப்ப இதுக்கு வேற வழியே இல்லையா சார்?"

"இல்ல சிவா. மெதுவடை சாப்பிடேன். இங்க ஏ ஒண்ணா இருக்கும்."

"வேண்டாம் சார் நீங்க சாப்பிடுங்க."

"சிவா"

"சார்"

"என் கிட்ட சொன்னது மாதிரி வேற எங்கயும் போய் சொல்லாத. பிரச்னை ஆய்டும்."

"சரி சார்"

இருவரும் எழுந்து வெளியே செல்ல பில் போட்டவன் அவர்கள் இருவரையும் வெறித்தான்.

மொபைல் எடுத்து யாரையோ அழைத்தான்.

"சார் நான்தான். "

"சொல்லு"

சொன்னான்.

*** 

"தம்பி இன்னொரு டீ"  சொன்ன மாடசாமி தினத்தந்தியில் மூழ்கியது போல் பாவலா செய்தான்.

அவன் பார்வை மட்டும் தெருவில் இருந்தது. மனம் சிவாவை எதிர்பார்த்தது.

'எங்கே அவன்? நேற்று சாயங்காலம் ஆறு மணிக்கெல்லாம் வந்துவிட்டானே.' 

யோசித்த மாடசாமி மணி பார்த்தான்.

மணி ஏழை நெருங்கியது.

ஒரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் வீட்டிற்கு வருகிறான் போல. வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் மீண்டும் அவன் வெளியில் எங்கும் செல்வதில்லை. மாலை நேரம் அல்லது இரவு நேரம் நமக்கு செட் ஆகாது. காலையில் ஜாகிங் அல்லது ஜிம் ஏதாவது செல்கிறானா என்று பார்க்க வேண்டும்.

யோசித்த மாடசாமி அடுத்த டீ வர அதையும் குடித்துவிட்டுக் கிளம்பினான். அப்போது சிவா எதிரில் வர மாடசாமி புன்னகைத்தான்.

"யாருங்க?" சிவா அவனை குழப்பமாய் கேட்க மாடசாமி மீண்டும் புன்னகைத்தான்.

"என்னத் தெரியலையா கண்ணு? நான் உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்."

"வீட்டுக்கா?"

"ஆமா கண்ணு"

"எப்ப?"

"தோட்ட வேலைக்கு அய்யா கூப்பிட்டிருந்தாரே."

"ஓ நான் கவனிச்சிருக்க மாட்டேன்."

"அது பரவால்ல கண்ணு."

"சரி வர்றேன்."

"கண்ணு "

"சொல்லுங்க"

"என்ற உறவுக்காரப் பையன் ஒருத்தன் படிச்சு முடிச்சிட்டு சும்மா இருக்கான். உங்க கம்பெனியில் கொஞ்சம் பேசி ஏதாவது வேலை வாங்கித் தாங்க கண்ணு."

"சரி என்ன வந்து பார்க்கச் சொல்லுங்க."

"சரி கண்ணு"

சிவா கிளம்பிச்சென்றுவிட மாடசாமி அவனைப் புன்னகையாய் பார்த்தபடி நின்றான்.

'மச்சான் சாமிக்கண்ணுவ வேலைக்குன்னு இவனப் பார்க்க வச்சிடறேன். என்னோட திட்டம் பலிச்சா இவன் சீக்கிரமாவே மேலப் போயிடுவான்.'

*** 

"அய்யோ" வள்ளி அலறிக்கொண்டே வெளியில் ஓட முனியன் விடாமல் துரத்தினான்.

"எங்கடி ஓடறே?" நாலு எட்டில் அவளை நெருங்கியவன் அவள் தலைமுடியைப் பிடித்து இழுத்தான்.

"வேண்டாம்யா விடுய்யா" வள்ளி கத்த முனியன் விடவில்லை. பளாரென்று அறைந்தான்.

உள்ளேயிருந்து ஓடிவந்த அவர்களின் பனிரெண்டு வயது மகன் சின்னான் அழுதபடி முனியனைத் தடுக்க முயன்று தோற்றான்.

"அப்பா அம்மாவ அடிக்காதப்பா"

"ஏண்டா எனக்கே புத்தி சொல்ற அளவுக்கு ஆளாயிட்டியா?" கேட்ட முனியன் சின்னானை எட்டி உதைக்க சமாளிக்க முயன்ற சின்னான் முடியாமல் கீழே விழ அவன் தலை முழு வேகத்தில் கூரான கல் ஒன்றின் மீது மோதப் போன கடைசி நொடியில் அவனை ஒரு கை விழ விடாமல் தடுத்தது.

சின்னான் யாரென்று பார்க்க சிவா நின்றிருந்தான்.

"அண்ணா சிவாண்ணா" மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் சின்னான் அழ சிவா சின்னானின் கண்ணீரைத் துடைத்தான்.

"அம்மாண்ணா "

"கவலைப்படாத"

சொன்ன சிவா முனியனை நெருங்கினான்.

"என்ன முனியா? என்ன இது?"

"சின்னய்யா உங்களுக்கு இது சம்பந்தமில்லாத விஷயம்."

"பொண்டாட்டி புள்ளைய ரோட்டில் வச்சு அடிக்கிற. தப்பில்லயா? உள்ள போ"

"சின்னய்யா என் பொண்டாட்டி புள்ளைய நான் எங்க வேணாலும் அடிப்பேன் அத நீங்க கேட்க வேண்டியது இல்ல"

"சரி முனியா அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் நீ முதல்ல உள்ள போ"

சொன்ன சிவா முனியனின் தோள் மீது கைகளை வைக்க முனியன் ஆத்திரமானான்.

சிவாவைப் பிடித்துத் தள்ள கீழே விழப் போன சிவா சுதாரித்துக் கொண்டான். மீண்டும் தன் மீது பாய்ந்த முனியனை எளிதாய் எதிர்கொண்டான் சிவா.

தன் இடது கையால் அவனைத் தடுத்த சிவா வலது கையால் அவன் கன்னத்தில் பளார் என்று அறைய முனியன் தடுமாறி விழுந்தான்.

சிவா வள்ளியிடம் சொன்னான்.

"உள்ள போங்கம்மா. சின்னான் பயந்திருக்கான். கூட்டிட்டுப் போங்க"

தன்னையே சீற்றமாய் பார்த்த முனியனிடம் சிவா குனிந்தான்.

"திரும்ப வீட்ல போய் யாரையாவது அடிச்சேன்னு வையி நாளைக்கு உனக்கு வேலையில்ல. புரியுதா?"

சொல்லிவிட்டுச் செல்லும் சிவாவை வன்மத்துடன் பார்த்தான் முனியன்.

***

சிவா டைனிங் டேபிளில் வந்து அமர அப்பா அருணாச்சலம் புன்னகைத்தார். 

"என்ன சிவா இன்னைக்கு ஏதாவது வம்பு இருக்கா?"

"என்னப்பா நீங்க?  நான் வேணும்னு வம்புக்குப் போற மாதிரி கேக்கறீங்க?"

"அதுக்கு இல்லப்பா எப்பவுமே ஏதாவது ஒரு குட்டி பிரச்னையாவது பண்ணுவியே அதான் கேட்டேன்"

அருணாச்சலம் சொல்ல சாப்பாட்டை கொண்டு வந்து வைத்த சிவாவின் அம்மா அலமேலு அவரைக் கடிந்து கொண்டாள்

"அவனை எதுவும் சொல்லலன்னா உங்களுக்கு தூக்கம் வராதே"

"அப்படியில்ல அலமு. நமக்கு இருக்கிறது ஒரே பையன். அதான் ஒரு பயம்."

அவர் சீரியஸாகச் சொல்ல அலமு புரிந்து கொண்டாள்.

"நமக்கு எதுக்குப்பா மத்தவங்க வம்பு? "

"அப்படி இல்லம்மா என் முன்னாடி யாராவது பாதிக்கப்பட்டா அதப் பார்த்துட்டு என்னால  சும்மா இருக்க முடியல."

"நமக்கு இருக்கிற சொத்துக்கு பேசாம நம்ம நிலத்திலேயே விவசாயம் பார்த்துட்டு இருந்துடுன்னு பலமுறை சொல்லிட்டேன். நீ கேட்க மாட்டேங்கிற. சிவில் இன்ஜினியரிங் படிச்சே. சரி சொந்தமாக ஏதாவது ஆரம்பிப்பேன்னு பார்த்தேன். ஆனா எக்ஸ்பீரியன்ஸ் வேணும்னு தனியார் கம்பெனியில் போய் ஜாயின் பண்ணியிருக்கே. எல்லாமே உன்னோட இஷ்டத்துக்கு பண்றே. அட்லீஸ்ட் உன்னோட கல்யாணமாவது எங்க இஷ்டத்துக்கு நடக்குமா?"

அருணாச்சலம் கேட்க சிவா புன்னகைத்தான்.

"கல்யாணமா? அதுக்கு இப்ப என்ன அவசரம்?"

"உனக்கு வேணும்னா அவசரம் இல்லாம இருக்கலாம். எங்களுக்கு இருக்கு". அலமேலு குறுக்கிட்டு சொன்னாள்.

"என்னம்மா சொல்றீங்க?"

"காலா காலத்துல ஒரு பேரனோ பேத்தியோ மடியில வச்சு கொஞ்சணும்னு எங்களுக்கும் ஆசை இருக்குன்னு சொல்றேன்"

அலமேலு சொல்ல ஆமோதிப்பாய் புன்னகைத்தார் அருணாச்சலம்.

இருவரையும் பார்த்த சிவா ஒரு நிமிடம் யோசித்தான்.

திவ்யாவைப் பற்றி சொல்லிவிடலாமா? சொன்னாள் அடுத்து அவர்கள் என்ன கேட்பார்கள்?

அவள் வீடு எங்கே இருக்கிறது? அப்பா என்ன செய்கிறார்? 

வீடு காலனியில் இருக்கிறது என்று சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? சொந்தபந்தம் நிச்சயம் கேவலப்படுத்தும். கேவலப்படுத்தும் சொந்தபந்தம் எனக்கு தேவையில்லை என்பது எனது தனிப்பட்ட முடிவு. இருந்தாலும் அப்பாவும் அம்மாவும் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? ஏராளமானோரை வைத்து பண்ணையில் விவசாயம் செய்யும் அப்பாவிற்கு அய்யா என்று அனைவரும் கையெடுத்துக் கும்பிட்டு மரியாதை கொடுக்கின்றனர். கூடவே எனக்கும் சின்னய்யா என்று. இந்த விஷயம் தெரிந்தால் அப்பாவை எப்படி மதிப்பர்?

"என்னப்பா நாங்க கேட்டுட்டிருக்கோம். நீ பாட்டுக்கு என்னமோ யோசிச்சிட்டிருக்கே.?"

அருணாச்சலத்தின் குரலில் கலைந்தான் சிவா

"என்னப்பா நீ யோசிக்கறதப் பார்த்தா நீயே பொண்ணு பார்த்து வெச்சுட்டியா?"

அருணாச்சலம் சிரிக்க அலமேலு சிவாவையே பார்த்தாள்.

"இல்லப்பா அப்படி ஒண்ணும் இல்ல".

"சந்தோசம்பா உன் கல்யாணமாவது எங்க இஷ்டத்துக்கு நடக்கட்டும்"

அருணாச்சலம் சொல்ல சிவாவின் மனம் கனத்தது.

**" 

சனிக்கிழமை.

ஸ்விஃப்ட் காரின் ட்ரைவிங் சீட்டில் வருண் அமர்ந்திருந்தான்.அருகில் புன்னகையுடன் சிவா.

பின் சீட்டில் திவ்யா வந்தனா இருவரும் அமர்ந்திருந்தனர்.

"போலாமா?" வருண் கேட்க சிவா தலையாட்டினான். கார் கிளம்பியது.

"வீட்ல என்ன சொன்னே?" சிவா திவ்யாவிடம் கேட்க 

"ஃப்ரண்டுக்கு கல்யாணம்னு சொன்னேன்"

"வந்தனா நீ?"

"திவ்யா எவ்வழி நானும் அவ்வழி" வந்தனா சொல்ல வருண் சிரித்தான்.

"நாம கடைசியா டூர் போய் எவ்வளவு மாசம் இருக்கும்?"

"மாசமா? ரெண்டு வருஷமாவுது "

"ரெண்டு வருஷமா?"

"ஆமா வருண். கொரோனாக்கு முன்னாடி போனது."

"கொரோனான்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது."

"என்ன வந்தனா?"

"இப்ப ஊட்டிக்குப் போனா இ பாஸ் வேண்டாமா?"

"வேண்டாம். வேக்சின் எடுத்த சர்ட்டிஃபிகேட் போதும்."

"ம்"

"திவ்யா"

"சொல்லு வந்தனா"

"என்ன பேசாம இருக்கே?"

"சும்மா"

வருண் வந்தனாவிடம் சொன்னான்

"திவ்யா சிவாவோட ஞாபகத்தில் இருப்பாங்க. தொல்ல பண்ணாத வந்தனா."

வருண் சொல்ல வந்தனாவும் சிவாவும் சிரித்தனர். திவ்யாவை வெட்கம் பிடுங்கித் தின்றது.

"அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல"

"ஒண்ணுமில்லயா? சிவா நோட் பண்ணிக்க"

வந்தனா வார சிவா வருண் இருவரும் சிரித்தனர்.

வருண் காரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.

"வருண்"

"சொல்லு வந்தனா"

"கொஞ்சம் ஸ்லோவா போலாமே."

"சீக்கிரம் போனா ஈவினிங் போட்டிங் போலாம்."

"போட்டிங் நாளைக்கு மார்னிங் கூட போலாம் வருண்"

"சரி பயப்படாத ஸ்பீட் குறைக்கறேன்" வருண் சொல்ல வந்தனா புன்னகைத்தாள்.

கொண்டை ஊசி வளைவுகளில் கார் ஏறும் பொழுது காலநிலை மாற ஆரம்பித்தது.

வெளியில் பார்த்த சிவா அதிர்ந்தான். மழை மேகங்கள் திரண்டிருந்தன.

"வருண்"

"ம்"

"மழை வரும் போலிருக்கு."

"ஆமா"

"பிரச்னையாகுமா?"

"லேண்ட்ஸ்கேப் ஒண்ணும் நடக்கலன்னா பிரச்னை இருக்காது.

வெதர் ரிப்போர்ட் பார்க்கலயா சிவா?"

"பார்த்தேனே"

"சரி விடு."

அடுத்த அரை மணி நேரத்தில் சாரல் அடிக்க ஆரம்பித்தது. 

'உன்னுடனான ஒவ்வொரு பயணமும்

என்னுள் தங்கிப் போகிறது.

இதோ இப்பொழுது கூட

முன்னிருக்கையில் நீ அமர்ந்திருந்தாலும்

என்மடியில்தான் உன்னை வைத்துக்கொண்டு பயணிக்கிறேன் நானும்.'

திவ்யா தன் மனதில் ஓடிய கவிதையை எண்ணிப் பார்த்து தனக்குள் புன்னகைக்க அவள் மலர்ந்த முகத்தைப் பார்த்த வந்தனா புரிந்து கொண்டாள்.

அடுத்த முக்கால் மணி நேரத்தில் கார் அவர்கள் புக் செய்திருந்த லேக் வ்யூ ஹோட்டல் முன் நின்றது.

பார்க் செய்துவிட்டு ரிஷப்சனுக்குள் அவர்கள் நுழைய மழை காத்திருந்தாற்போல் பெய்ய ஆரம்பித்தது.

சிவாவைப் பார்த்து புன்னகைத்த ரிஷப்சனிஸ்ட் 

"யெஸ் சார்" என்றாள்.

"ரூம் புக் செஞ்சிருக்கோம்"

"நேம் சார்?"

"சிவா ஃப்ரம் காரமடை"

"ரெண்டு டபுள் ரூம் சார்?"

"யெஸ்"

அவள் சாவியை எடுத்துக் கொடுத்தாள்.

நான்கு பேரும் தங்கள் அறைகளுக்குள் நுழைந்தனர்.

"திவ்யா"

"ம்"

"இப்படி பக்கத்துல வா"

"எதுக்காம்?"

"வந்தாத் தெரியும்"

"ம்ஹூம்"

"ஏன்?"

"நல்ல பிள்ளையா இரு சிவா. வந்தனா வந்திடப் போறா."

"அவ இப்ப வரமாட்டா"

"எப்படி சொல்றே?"

"வருணும் நானும் ஏற்கனவே பேசி வச்சிக்கிட்டோம்."

"அடப்பாவிங்களா"

"நான் அப்பாவி திவ்யா. என்னைப் போய் அடப்பாவின்னு சொல்றே? "

சிரித்தபடி சிவா கேட்க அவன் கன்னத்தில் குழி விழ அதில் மயங்கி நின்ற திவ்யாவைத் தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்ட அதே வேளையில்

சோமசுந்தரம் தன் மாமா மாடசாமிக்கு அழைத்தான்.

"மாமா"

"சொல்லு மச்சான்"

"அவன் இங்க தான் தங்கியிருக்கான். ஹோட்டல் லேக் வியூல"

"சூப்பர்"

"இங்க எனக்குத் தெரிஞ்ச ஆளுங்க இருக்காங்க மாமா. நீ ம் சொல்லு. அவன் கதைய முடிச்சிடலாம்."

"ம்"

தொடரும்.

3

கணபதி பண்டிதர் தன் முன் நின்ற சண்முகத்தை நிமிர்ந்து பார்த்தார்.

"சொல்லுங்கோ"

"புது வீடு வாங்கியிருக்கோம்"

"ரொம்ப நல்லது"

"நீங்கதான் வந்து கணபதி ஹோமம் பண்ணித் தரணும்"

"பேஷா பண்ணிடலாம். கிரகப்பிரவேசம் எப்ப?"

"வர்ற வெள்ளிக்கிழமை"

***

வீட்டைச் சுற்றியிருந்த புதர் களையப்பட்டு வீடு சுத்தம் செய்யப்பட்டிருந்தது.

சண்முகம் கீதாவிடம் கேட்டான்.

"கீதா"

"என்னங்க?"

"நாளைக்கு காலைல சீக்கிரமா அய்யர் வந்திருவார். நான் இப்ப போய் அவர் கொடுத்த லிஸ்ட்ல இருக்கிறதெல்லாம் வாங்கிட்டு வந்து வச்சுடறேன்."

"சரிங்க" என்றவள் கொஞ்சம் தயங்கி "என்னங்க " என்று அழைத்தாள்.

"என்ன கீதா ?"

"கொஞ்சம் சீக்கிரமா வாங்க இங்க தனியா இருக்கிறதுக்கு ஒரு மாதிரியா இருக்கு"

சொன்னவளைப் பார்த்து சிரித்தான் சண்முகம்.

"இது நம்ம வீடு கீதா. நான் வேலைக்கு போனதுக்கப்புறம் குழந்தைகள் ஸ்கூலுக்கு போனதுக்கப்புறம் நீ தனியாத்தானே இருக்கணும்?"

"அது புரியுதுங்க இருந்தாலும் சொன்னேன்"

"இதுக்கு தான் குழந்தைகளக் கூப்பிட்டு வந்திருந்தா உனக்கு ஒண்ணும் தெரிஞ்சிருக்காது. அவங்களையும் அம்மா வீட்டுல விட்டுட்டு வந்துட்டே"

"சரி அதை விடுங்க. போயிட்டு எல்லாம் வாங்கிட்டு சீக்கிரமா வாங்க"

"ம்" தலையசைத்தவன் தன் புல்லட்டை ஸ்டார்ட் செய்தான்.

கீதா திரும்பினாள். ஏதோ ஒன்று அவளை கடந்தது போல் இருந்தது. தன் தலையில் தானே வலிக்காது அடித்தவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

'இனிமே ஹாரர் நாவல் படிக்கவே கூடாது. நானே ஏதோ கற்பனை பண்ணிட்டிருக்கேன்'

சொன்னவள் வீட்டிற்குள் செல்ல முயல அந்த சத்தம் கேட்டது. அது என்ன சத்தம்?

கீதா மீண்டும் உன்னிப்பாகக் கேட்டாள். யாரோ அழும் சத்தம். கீதா அதிர்ச்சியில் உறைந்தாள்.

அழுகை சத்தம் வீட்டிலிருந்துதான் வருகிறது. கீதா மெல்ல அடியெடுத்து வைத்தாள்.

'உள்ளே எட்டிப் பார்க்கலாமா இல்லை பேசாமல் வெளியில் இருந்து விடுவோமா?' யோசித்தவள் சண்முகம் வருகிறானா என்று வீட்டிற்கு எதிரில் இருந்த தெருவைப் பார்த்தாள். உச்சமாய் அதிர்ந்தாள். நாய் ஒன்று தன் நாக்கை வெளியில் நீட்டியபடி கோரைப் பற்களைக் காட்டியபடி வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அடக்கடவுளே. உள்ளே அழுகை சத்தம். வெளியே தன்னையே வெறித்தபடி வந்து கொண்டிருக்கும் நாய்.

கீதா தவித்தாள்.

'இந்த வீடு நமக்கு வேண்டாம். எப்படியாவது இங்கிருந்து தப்பித்துவிட வேண்டும்' கீதாவிற்கு வியர்த்தது.

'என்னங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க' தவித்த கீதாவின் மனம் சண்முகத்தை எதிர்பார்த்தது. அவனைக் காணாமல் தவித்தாள்.

நாய் அவள் அருகில் வந்தது. உறுமியது. 'எப்பொழுது வேண்டுமானாலும் இந்த நாய் என் மீது பாய்ந்து விடும்'

கீதா யோசித்தாள். நாய் அவள் மீது பாயாமல் ஜன்னலைப் பார்த்தது. தன் தலையை தரையில் வைத்தபடி வெறித்தது. கீதாவிற்கு புரிந்தது. வீட்டிற்குள் ஏதோ ஒன்று இருக்கிறது. அது இந்த நாய்க்கு தெரிந்திருக்கிறது. அப்படி என்றால்.. அவசரப்பட்டு விட்டோம்.

கடவுளே வெளியே ஓட முயன்ற கீதா நாய் எழுந்து வாசலை மறிப்பதைக் கண்டு அதிர்ந்தாள்.

பின்னால் நடந்தவள் எதார்த்தமாக திரும்பி பார்க்க வெள்ளையாய் புகையாய் ஒரு உருவம். காற்று தான் அந்த உருவமா அல்லது அந்த உருவம் தான் காற்றா என்று பிரித்தறிய முடியாதபடி உருவம் மிகத் தெளிவாக கீதாவின் கண்களுக்குத் தெரிந்தது.

கீதாவிற்கு இதயம் நடுங்கியது. இப்படிப்பட்ட அனுபவங்களை அவள் முன்பு கேட்டிருக்கிறாளேத் தவிர நேரடியாக அவள் பாதிக்கப்பட்டதில்லை.

உருவம் அழுதபடி அருகில் வர பின்னால் செல்ல முயன்ற கீதா நாய் தன்னை வெறியுடன் பார்ப்பதை உணர்ந்து திக்பிரமை அடைந்து அதே இடத்தில் நின்றாள்.

உருவம் கீதாவின் மீது படர கீதா எதிர்க்கத் துணிவற்று நடுங்க …உருவம் கீதாவிற்குள் ஊடுருவியது.

நாய் கீதாவைப் பார்க்க கீதா சிரித்தாள்.

'என்னடா பார்க்கிறே? இனிமே யாரும் எதுவும் நம்மளப் பண்ண முடியாதுடா. நாமதான்டா எல்லாம். இது நம்ம வீடுடா. வெள்ளச்சி வீடு.'

கீதா நாயிடம் என்ன பேசுகிறாள்? புல்லட்டில் வந்திறங்கிய சண்முகம் குழம்பினான்.

"கீதா"

பதிலில்லை.

மீண்டும் அழைத்தான்.

வெள்ளச்சி திரும்பினாள்.

***

கணபதி பாளையம்.

ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் வழியில் உள்ளது. டவுன் பஸ்ஸில் செல்ல வேண்டுமென்றால் ஊஞ்சலூர் செல்லும் அனைத்து பஸ்களும் கணபதிபாளையம் செல்லும்.

கணபதிபாளையம் காவிரிக்கரையில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம்.

ஊருக்கு பல கோவில்கள் உண்டு என்றாலும் ஆற்றின் அக்கரையில் அமைந்துள்ள சித்தர் கோவில் மிகவும் பிரசித்தமானது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று மட்டும் தான் சித்தர் கோவிலில் கூட்டம் ஓரளவு இருக்கும். மற்ற நாட்களில் பெரும்பாலும் மனம் விட்டுப் பேச துடிக்கும் காதலர்கள் வந்து போகும் இடமாக மட்டுமே சித்தர் கோவில் இருந்தது. அதற்கு காரணம் கோவிலின் அருகே உள்ள அந்த வனப்பகுதி. காட்டு மலர்களின் நறுமணம் காவிரி ஆறு சலசலத்து ஓடும் சத்தம் சுத்தமான காற்று என்று யாவரையும் அந்த இடம் எளிதில் ஈர்க்கும்.

வெள்ளச்சிக்கு இந்தக் கோவில் மிகவும் பிடிக்கும். சிறுவயதிலிருந்தே இந்தக் கோவிலுக்கு வருவது என்றால் வெள்ளச்சியின் மனதில் உற்சாகம் கரை புரளும்.

அதற்குக் காரணம் அவளுக்கு பரிசலில் பயணிப்பது மிகவும் பிடிக்கும்.

வெள்ளச்சி பெற்றோருக்கு ஒரே பெண். இளங்கலைப் படிப்பை முடித்துவிட்டு இறுதிப் பருவத் தேர்வு முடிவிற்காக காத்திருக்கிறாள்.

அப்பா பழனி விவசாயி. பழனிக்கு வெள்ளச்சியை மிகவும் பிடிக்கும். அம்மா வள்ளி அதற்கு நேர்மாறானவள். எப்பொழுதும் வெள்ளச்சியை கண்டித்துக் கொண்டே இருப்பாள். அளவுக்கு மீறிய பாசம் இருக்கும்பொழுது கண்டிப்பு தானாக வந்துவிடும் தானே. அளவுக்கு மீறிய பாசம் ஆழ்மனதில் எப்பொழுதும் ஒரு பயத்தை தோற்றுவிப்பதால் அவர்களுக்கேத் தெரியாமல் யார் மீது பாசம் வைக்கிறார்களோ அவர்களைத் கண்டிக்க தொடங்கிவிடுவர். இது பெரும்பாலும் கண்டிக்கப்படுபவர்களுக்குப் புரியாது. ஆனால் வெள்ளச்சி அப்படி அல்ல. வள்ளியின் அதிக பாசத்தை நன்று புரிந்து வைத்திருக்கிறாள்.

இப்போது கொஞ்ச நாட்களாக வெள்ளச்சிக்கு ஒரு சிக்கல். அந்த சிக்கலுக்கு காரணமானவன் முன்புதான் அவள் அமர்ந்திருக்கிறாள்.

அவன் கருப்பன். செய்வது விவசாயம். அவன் பெற்றோருக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்து அவர்களின் குலதெய்வம் கருப்பு சாமிக்கு நேர்ந்து கொண்டு பெற்ற குழந்தை என்பதால் கருப்பன் என்று பெயரிட்டிருந்தனர். கருப்பன் பெயருக்கேற்றபடி கருப்பு நிறம். உழைத்து தினவேறிய தோள்கள். அவனை முதல்முதலாய் பார்க்கும்போதே வெள்ளச்சியின் மனம் அவள் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனது.

மீண்டும் அவனை எங்காவது சந்தித்து விடமாட்டோமா என்று அவள் விழிகளும் இதயமும் போட்டி போட்டபடி ஏங்கின.

ஊர் திருவிழாவில் மீண்டும் இருவரும் சந்தித்துக் கொள்ள நேர்ந்தது. பல நாட்கள் பழகிய இருவர் நீண்டதொரு பிரிவிற்குப்பின் சந்தித்த பரவசம் இருவரை கண்ட பொழுது இருவரின் விழிகளிலும் தெரிந்ததை இருவரும் உணர்ந்து கொண்டனர்.

எல்லோருக்கும் பிறக்கும் பொழுது இவர்களுக்கு உரியவர்கள் இவர்கள்தான் என்று விதிக்கப்படுகின்றனர். அப்படி விதிக்கப்படுபவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது அந்த காதல் அறிவிக்கப்படும் முன்பே அறிந்துகொள்ள ஏதுவாகிறது.

கருப்பனும் வெள்ளச்சியும் தங்களுக்குத் தாங்கள்தான் என்று அறிவிக்காமலே அறிந்து கொண்டனர்.

ஆறு மாதங்கள் கடந்த நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் சகஜமாகப் பேசி பழகினாலும் இன்னும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவிக்காமல் காதலித்துக் கொண்டிருக்கின்றனர்.

கருப்பன் ஒன்றும் பேசாமல் அமைதியாக யோசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த வெள்ளச்சி அவனையே பார்த்தாள்.

"கருப்பா"

"சொல்லும்மா"

"என்ன யோசனை ரொம்ப பலமா இருக்கு."

"ம்"

"என்னாச்சுப்பா?"

"எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்?"

கருப்பன் திடீரென்று கேட்க வெள்ளச்சி வெட்கப்பட்டாள்.

"என்னப்பா திடீர்னு கேக்கற?"

"சொல்லு"

"எப்ப வேணாலும்"

"உங்கப்பா ஒத்துக்குவாரா?"

"கண்டிப்பா ஒத்துக்க மாட்டார் "

வெள்ளச்சி சொல்ல கருப்பன் திகைப்பாய் அவளை ஏறிட்டான்.

"அப்ப என்ன பண்றது?"

"ஒத்துக்க வைக்கணும்"

"எப்படி?"

"ஏதாவது ட்ராமா பண்ணி"

அவள் சொல்ல கருப்பன் புன்னகைத்தான்.

"பாப்பா" வெள்ளச்சியை கருப்பன் எப்போதும் பாப்பா என்றுதான் அழைப்பான். அவன் பாப்பா என்றால் வெள்ளச்சி சர்க்கரைப் பாகாய் உருகி விடுவாள்.

"சொல்லுப்பா"

"ரிசல்ட் எப்ப வரும் உனக்கு?"

"இன்னும் ஒரு மாசம் இருக்கு."

"மேல படிக்கணும்னு ஆசை இல்லையா?"

"சத்தியமா இல்ல."

"ஏன்?"

"சீக்கிரமா உன்ன கல்யாணம் பண்ணிட்டு உன்கூட இருக்கணும்னு தான் தோணுது எப்பவும்"

"ம் " வெள்ளச்சி சொன்னதைக் கேட்டு கருப்பன் பெருமூச்சுவிட்டான்.

"எல்லாமே நல்லபடியா நடக்கணும்"

"நடக்கும் கருப்பா சித்தர் கிட்ட வேண்டிக்க அவர் கண்டிப்பா நடத்திக் கொடுப்பார்."

அவள் கண்கள் ஒளிர்ந்தன.

அவள் முகம் மலர்ந்ததைக் கண்டவன் அருகில் வந்தான். அவள் முகத்தையே பார்த்தான்.

"என்னப்பா அப்படி பார்க்கிறே?"

"என் பாப்பாக்கு ஏதாவது கொடுக்கணும் போலிருக்கு"

சொன்ன கருப்பனைப் பார்த்து புன்னகைத்தாள்.

"கொடு"

கருப்பன் தன் இரண்டு கைகளாலும் அவள் முகத்தை ஏந்திக்கொண்டான்.

அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவள் கண்கள் முடிக் கிறங்க இருவிழிகளின் மூடிய இமைகளிலும் முத்தமிட்டான்.

அவள் இதழ்கள் மெலிதாய் புன்னகைக்க கருப்பன் தன் இதழ்களால் அவள் இதழ்களில் அழுத்தமாய் முத்தமிட்டான். 

இரு அன்பான இதயங்களின் இதழ்களின் சங்கமத்தில் இதயங்கள் மலர்ந்த வேளை 'அது' அவர்கள் இருந்த பகுதியில் நுழைந்தது.

***

மழை தூறிக்கொண்டிருந்த ஒரு காலைப் பொழுது.

சிறைக் காவல் தலைவன் விஜயன் காத்திருந்தான்.

புரவி சத்தம் கேட்கும் போதெல்லாம் அவன் உன்னிப்பாய் கேட்டான்.

'என்னவாயிற்று? இன்னும் படைத்தலைவன் செழியன் வரவில்லையே?'

யோசனையில் ஆழ்ந்தான்.

"அய்யா" குரல் கேட்டு கலைந்த விஜயன் நிமிர்ந்து பார்த்தான்.

மலையன் புன்னகைத்தான். மலையன் சிறைக் காவல்படை வீரன்.

"இன்று பலி உண்டா?"

மலையன் கேட்க விஜயன் ஒன்றும் சொல்லாமல் பார்த்தான்.

"இன்னும் எவரும் வரவில்லையே. அதுதான் எனக்கு ஒரு ஐயம்"

சொன்னவனைப் பார்த்த விஜயன் பெருமூச்சு விட்டான். கேட்டான்.

"எத்தனை கைதிகள் இருக்கிறார்கள்?"

"மொத்தம் இருபத்திரண்டு பேர்"

"அனைவரையும் சங்கிலியால் பிணைத்தாயிற்று. அல்லவா?"

"ஆம் அய்யா"

"அரசரின் ஆணை வந்தால் பலி உண்டு. இல்லை என்றால் அவர்களின் வாழ்நாட்கள் நீட்டிக்கப்படும்."

விஜயன் சொல்ல மலையன் ஒன்றும் சொல்லாமல் மௌனம் காத்தான்.

சற்று நேரத்தில் புரவிகளின் குளம்படி சத்தங்கள் கேட்டன.

செழியன் கரிய நிற புரவியில் வந்து இறங்கினான். அவனுடன் இன்னும் இருவர் தங்கள் புரவிகளில் இருந்து இறங்கினர்.

செழியன் விஜயனிடம் ஓலை ஒன்றைக் கொடுத்தான். அதை வாங்கிப் படித்துப் பார்த்த விஜயன் சம்மதமாய் தலையசைத்தான்.

மலையனிடம் திரும்பிய விஜயன் கண்களைக் காட்ட அவன் புரிந்து கொண்டான்.

மலையனும் செழியனுடன் வந்த மற்ற இருவரும் உள்ளே சென்றனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வரும் பொழுது அவர்களுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்ட அந்த இருபத்திரண்டு பேரும் வெளியில் கொண்டுவரப்பட்டனர்.

தொடரும்


Comments