வெள்ளச்சியின் வீடு 4
செழியன் புரவியில் மெதுவாய் முன்னே சொல்ல மூவரும் மற்றவர்களை நடக்க வைத்து செழியனைத் தொடர்ந்தனர்.
அங்க ஒரு அசாதாரண மௌனம் நிலவியது. சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தவர்கள் பயமாய் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நடந்தனர்.
கொஞ்ச தூரத்தில் ஒரு காட்டுப் பகுதி வந்தது.
செழியன் இறங்கினான். சுற்று முற்றும் பார்த்தான்.
எல்லாம் திருப்தியாக இருக்கிறது என்று மலையனுக்குக் கண்களால் புலப்படுத்தினான்.
தலையசைத்த மலையன் தன் வாளை உருவினான். செழியனுடன் வந்த மற்ற இருவரும் தங்கள் வாட்களை உருவினர்.
சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த அனைவரும் அதிர்ந்து போய் பார்த்தனர்.
சிலர் கதற ஆரம்பித்தனர். சிலர் உறைந்து போய் பார்த்தனர்.
ஒருவன் மட்டும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டான்.
"எதற்காக எங்களை இங்கே கொண்டு வந்திருக்கிறீர்கள்?"
"உங்களை பலி கொடுக்க உத்தரவு."
செழியன் சொல்ல அந்த இளைஞன் மீண்டும் கேட்டான்.
"காரணம்?"
"மிகவும் சாதாரணமான காரணம்தான். சிறைச்சாலைகளில் இடமில்லை. அதனால் மன்னர் உத்தரவு இது. அதைத்தான் நாங்கள் சிரமேற்றுள்ளோம்."
சொன்ன செழியனை அனைவரும் வேதனையாகப் பார்த்தனர்.
"இது மிகவும் அநீதியான செயல் கொலை செய்யப்படும் அளவிற்கு நாங்கள் யாரும் கொடுங்குற்றவாளிகள் அல்ல"
ஒரு பெரியவர் கண்ணீர் மல்கக் கூறினார்.
செழியன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான்.
மலையா அழைத்தான்.
மலையன் புரிந்துகொண்டான். அவனும் மற்ற இருவரும் தங்கள் வாட்களை வீசத் தொடங்கினர். தலைகள் கீழே விழுந்தன. ரத்தம் அனைத்து இடங்களிலும் தெறித்தது.
கண் முன்னே மற்றவர்கள் வெட்டி வீசப்பட்டதைப்பார்த்த சிலர் கதறினர்.
முழுக்கக் கதறி முடிக்கும் முன் அவர்களின் தலைகளும் மண்ணில் உருண்டன.
செழியன் மலையனைப் பார்க்க மலையன் எல்லாம் முடிந்ததாய் சைகை செய்தான்.
செழியன் மலையன் மற்ற இருவர் காட்டில் இருந்து திரும்பி நடந்தனர்.
உயிர் போகும் கடைசி நிமிடத்தில் இருந்த ஒருவன் செல்லும் அவர்களை வெறித்துப் பார்த்தான்.
தன் மேல் ஏதோ ஊர்ந்தது போல் இருக்க என்னவென்று பார்த்தான். அது நாகப்பாம்பு. சட்டென்று தன் குருவாளால் அதைக் குத்தினான். அது பரிதாபமாய் தன் உயிரை விட்டது. இறந்த பாம்பையே பார்த்துக்கொண்டிருந்தவன் கண்கள் அதன் மேல் நிலைத்தன.
பாம்பு அசைய ஆரம்பித்தது. படமெடுத்து ஆடியது.
அதில் மிதமிஞ்சி இருந்தது அதன் வெறி.
***
கருப்பன் தன் இதழ்களில் சிறைப்பட்டிருந்த வெள்ளச்சியின் இதழ்களை விடுவித்தான். வெள்ளச்சி பரவச உணர்வில் தன் கண்களை மூடியிருக்க கருப்பனுக்கு அந்த வாசம் அடித்தது.
அது மனோரஞ்சிதப்பூவின் வாசம்.
கருப்பன் திகைத்தான்.
இங்கே இந்த வாசம் எப்படி வரும்? வாய்ப்பில்லையே.
அவனுக்கு இதழ்கள் சங்கமித்த பரவசம் சட்டென்று வடிந்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். எதுவும் வித்தியாசமாகத் தோன்றவில்லை. பிறகு எப்படி இந்த வாசம் வருகிறது? எங்கிருந்து வருகிறது?
கருப்பன் குழப்பமானான்.
சட்டென்று தன்னை விடுவித்தக் கருப்பன் என்ன செய்கிறான் என்பதை இமைகள் திறந்து பார்த்த வெள்ளச்சி திகைத்தாள்.
கருப்பனுக்கு என்னாச்சு? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கிறது?
"கருப்பா"
கண்மணி அழைத்ததைக் கூட கண்டுகொள்ளாமல் எங்கேயோ பார்த்துக்கொண்டு நின்ற கருப்பனை மீண்டும் அழைத்தாள்.
இம்முறை சத்தமாக.
"கருப்பா"
சட்டென்று ஏதோ தூக்கத்தில் விழித்தவனைப் போல் திரும்பினான் கருப்பன்.
"ம்"
"கருப்பா"
"ம்"
"என்னாச்சு?" கேட்ட வெள்ளச்சியிடம் ஓடி வந்தான் கருப்பன்.
"அம்மு"
"ம்"
"உனக்கு ஏதாவது வாசம் தெரியுதா?
"வாசமா?"
"ம்"
வெள்ளச்சி நுகர்ந்து பார்த்தாள்.
"இல்லையே"
அவள் சொல்ல அதிர்ந்தான் கருப்பன்.
"இல்லயா?"
"இல்லையே கருப்பா."
வெள்ளச்சி உறுதியாகச் சொன்னதைக் கேட்ட கருப்பன் திகைப்பில் ஆழ்ந்தான்.
அவனுக்கு நன்றாக அடிக்கிறதே. எப்படி? யாரோ உடனிருந்து கண்காணிப்பதைப் போல் உணர்ந்தான் கருப்பன்.
ஏதோ விபரீதம். முதலில் இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும்.
யோசித்த கருப்பன் வெள்ளச்சியின் கையைப் பிடித்தான்.
தன் கை பிடித்தவனின் முகத்தைக் காதலாய் பார்த்தவள் அவன் வேறு ஏதோ குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதைப் புரிந்தவள் ஒன்றும் பேசாமல் அவனை குழப்பமாய் ஏறிட்டாள்.
"நாம போலாம் அம்மு"
"சரிப்பா"
அந்தக் காட்டுப் பகுதியை விட்டு வெளியே வர முயல அவர்களுக்காகவே காத்து நின்றது அந்த நாகம்.
***
அடர்ந்த வனம்.
மலையன் தன் மைத்துனன் பரிதியுடன் மது எங்கே கிடைக்கும் என்று தேடியதில் யாரோ புன்னை வனத்தில் ரகசியமாக விற்பனை செய்வதைக் கூற மதுவைத் தேடி வந்தனர்.
"மலையா"
"சொல் பரிதி"
"இங்கு மது கிடைக்குமா?"
"நம்பத்தகுந்த தகவல் தான் கிடைத்துள்ளது. நிச்சயம் கிடைக்கும்."
"எனக்கு என்னவோ கிடைக்கும் என்று தோன்றவில்லை"
"ஏன் அப்படி சொல்கிறாய்?"
"பிறகென்ன? இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் மது விற்பனைக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை."
"இதெல்லாம் வெளிப்படையாக செய்ய முடியுமா? யோசித்துப்பார் பரிதி. ரகசியமாகத தான் செய்ய முடியும். இன்னும் சற்று அடர்ந்த பகுதிக்கு சென்று பார்ப்போம்."
"நிச்சயம் செல்ல வேண்டுமா?"
"ஆமாம் என் மனதில் நான் தீர்மானித்து விட்டேன் நான் தீர்மானித்து விட்டால் அதை மாற்ற யாரால் இயலும்?"
மலையன் கொக்கரிக்க பரிதி புன்னகைத்தான்.
"இல்லத்திலே இருக்கும் என் தங்கை முன் இப்படிப் பேச முடியுமா?"
பரிதி கேட்க மலையன் சிரித்தான்.
"உன் சகோதரி இல்லாத பொழுதுகளில்தானே சிறிது வீரமாய் பேசிக் கொள்கிறேன். அது உனக்குப் பொறுக்கவில்லையா? "
பரிதி சிரித்தான். சிரித்தபடி நிமிரும்போது மரத்தின் மேல் இருந்த அந்த நாகம் தெரிந்தது..
பரிதி வியர்த்தான். எத்தனையோ முறை சர்ப்பங்களைப் பார்த்தவன் தான். ஆனால் இந்த நாகம் அவர்களுக்காகவே காத்திருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. அது மட்டுமல்ல அதன் கண்களில் தெரிந்தது அசாத்திய வெறி.
***
மனோரஞ்சிதப்பூவின் வாசனைக்கு அர்த்தம் புரிந்தது கருப்பனுக்கு.
நாகம் வழியில் படமெடுத்த நிலையில் இருக்க வெள்ளச்சி அலறினாள்.
"கருப்பா என்ன இது?"
"பயப்படாத ஒண்ணும் நடக்காது".
நாகம் அவர்களையே பார்த்தது. அவர்களை நோக்கி முன்னேறியது.
தப்பிக்க வழி இருக்கிறதா? கருப்பன் பார்வை சுற்றுமுற்றும் அலைந்தது.
ஒரே ஒரு வழிதான் ஆனால் அந்த வழியில் நாகம் இருக்கிறது. போவதென்றால் அதைக் கடந்து தான் செல்ல வேண்டும். என்ன செய்யலாம்?
வேறு வழியில்லை நாகத்தை ஏதாவது செய்தால்தான் நாம் தப்பிக்க முடியும்.
கருப்பன் அருகில் இருந்த மரத்தின் கிளையை சட்டென்று ஒடித்தான்.
அதற்குள் நாகம் அவன் அருகில் வந்திருக்க மரக்கிளையால் அதைத் தாக்க முற்பட்டான் கருப்பன்.
"அம்மு நீ ஓடிரு நான் எப்படியும் வந்தர்றேன்."
"இல்ல கருப்பா நீயும் வா. எனக்கு பயமா இருக்கு."
"பயப்படாத அம்மு நீ போ நான் கண்டிப்பா வந்துடுவேன்."
கருப்பன் உறுதியான குரலில் சொல்ல வேறு வழி தெரியாமல் அங்கிருந்து வெளியே வந்தாள்.
நாகம் கருப்பனை நோக்கி ஆவேசமாகப் பாய்ந்தது.
மரக்கிளையை அதன் மீது வீச முற்பட்ட கருப்பனின் கரத்தை நாகம் சுற்றியது.அப்போது அதன் கண்களைப் பார்த்த கருப்பன் திடுக்கிட்டான். நீண்ட நாட்களாக யாரையோப் பழி வாங்க வேண்டும் என்ற வெறியுடன் காத்திருப்பது போல் அதன் கண்கள் ஒளிர்ந்தன.
எங்கேயோ தவறாகிவிட்டது? என்ன அது?
கருப்பன் முகத்தை ஆவேசமாய் நாகம் தீண்ட முயல அதைத் தன் இடது கையால் பிடித்தான் கருப்பன்.
அதைத் தடுப்பது மிகவும் சவாலாக இருந்தது. நாகம் விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தது. ஒருவழியாக அதை இறுக்கிப் பிடித்த கருப்பன் அதன் முயற்சி வெற்றி பெறாமல் இருக்கச் செய்தான். நாகம் ஆவேசமாய் சீறியது. எத்தனையோ முறை முயற்சித்தும் கருப்பனின் உறுதியான பிடியால் நாகத்தால் அவனைத் தீண்ட முடியவில்லை.
சட்டென்று அதை தூர எறிந்த கருப்பன் வெளியில் ஓடினான். மரத்தின் மீது மோதி விழுந்த நாகம் அவனையே பார்த்தது.
மீண்டும் அவனை நோக்கி வெறியுடன் பாய்ந்தது. அது வரும் திசையில் வைத்த தன் விழிகளை கிஞ்சித்தும் மாற்றாத கருப்பன் சட்டென்று தாவித்தாவி அதன் குறியிலிருந்து தப்பித்தான்.
நாகத்தின் கண்கள் வெறியுடன் மின்னின. சற்றும் சளைக்காத நாகம் எவரையோ திரும்பிப்பார்க்க எதற்காகவோ யாருடைய உத்தரவிற்காகவோ காத்திருப்பது போல் கருப்பனுக்குத் தோன்றியது.
இது இயல்பாக நடப்பதல்ல. யாரோ ஒருவர் ஏவி விட்டுள்ளார்
கருப்பன் உடம்பு முழுவதும் வியர்த்துக் கொட்டியது.
ஏவிவிட்டுள்ளார் என்றால் யார்? எதற்காக? அவர் நோக்கம் என்ன?
கருப்பன் யோசித்த அந்த ஒரு நொடியில் நாகம் அவன் மேல் பாய்ந்திருந்தது. அதை சற்றும் எதிர்பாராத கருப்பன் தரையில் உருண்டான். நாகம் அவனுடன் சேர்ந்து உருண்ட போதும் அவனைத் தன் பிடியில் இருந்து விலகாமல் வைத்திருந்தது. கருப்பன் அயர்ந்தான். நாகம் அவன் மார்பில் இருக்க அதை கையறுநிலையில் பார்த்தான். அவன் மனம் அவன் குலதெய்வம் கருப்பசாமியை இடைவிடாமல் வேண்டிக் கொண்டது.
நாகம் பளபளக்கும் விழிகளுடன் அவனைத் தீண்ட அவன் முகத்தை நெருங்க எங்கிருந்து அவனுக்கு அத்தனை துணிச்சல் வந்ததோ? சட்டென்று அதை கைகளால் பிடித்துத் தூக்கி எறிந்தான். அதை எதிர்பாராத நாகம் தரையில் போய் விழுந்து மீண்டும் முழு சீற்றத்துடன் அவனை நோக்கித் திரும்ப கருப்பன் முழு வேகத்தில் அந்தக் காட்டை விட்டு வெளியில் ஓடினான்.
ஓடிச் சென்ற கருப்பன் வெள்ளச்சி தயாராக வைத்திருந்த பரிசலில் ஏறிக்கொண்டான்
வெள்ளச்சி பரிசலை விடுவித்தாள். பரிசல் ஆற்றில் பயணிக்க ஆரம்பிக்க நாகம் மட்டும் எதனிடமோ எதையோ சொல்லிக்கொண்டிருந்தது. தூரத்தில் ஏதோ ஒரு மிருகம் இதுவரை கேட்டிராத சத்தத்துடன் வினோதமாகக் கத்திய சத்தம் கருப்பன் வெள்ளச்சி இருவரின் காதுகளிலும் கேட்டு அவர்களை உறைய வைத்தது.
***
கீதாவின் பார்வை வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்த சண்முகம் திகைப்பாய் பார்த்தான்.
"கீதா என்னாச்சு?"
கேட்ட சண்முகத்தை பதில் ஒன்றும் சொல்லாமல் வெறித்தபடி பார்த்தாள் கீதா.
"கீதா" சண்முகம் அவளை உலுக்க
"சொல்லுங்க" என்றாள்.
"என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?"
"எனக்கு ஒண்ணுமில்ல. நான் நல்லாத்தான் இருக்கேன்."
"ஒண்ணும் பயமில்லையே?"
"ஒரு பயமும் இல்ல. இது என் வீடு" சொன்னவள் புன்னகைத்தபடி தொடர்ந்தாள் "இது நம்ம வீடு"
அவள் சொன்ன தொனி சண்முகத்தை உள்ளே திகைப்படைய வைத்தாலும் அவள் பயப்படாமல் இருந்தது அவனுக்கு மகிழ்வையே தந்தது.
நாய் தன் அருகே வந்து மூச்சிறைக்க சண்முகம் திடுக்கிட்டான்.
"சீ போ " சொன்னவனை கீதா முறைத்தாள்.
விரட்ட முற்பட்டவனைத் தடுத்தாள்.
"வேண்டாம் இருக்கட்டும்"
"என்ன கீதா சொல்ற? இந்த நாயை பார்த்தா ஒரு மாதிரியா இருக்கு"
"நீங்க வேலைக்கு போனதுக்கப்புறம் எனக்கு இருக்கப்போற ஒரே துணை இதுதான். எனக்கும் இதுக்கும் செட் ஆயிடுச்சு. இல்லையா பைரவா ?" கீதா கேட்க நாய் தலையாட்டியது. தன் தலையை தரையில் வைத்து உத்தரவிற்காகக் காத்திருந்தது. இருட்டில் பளபளத்த அதன் கண்களைப் பார்த்தபடி சொன்னாள் கீதா.
"இனிமேதான் நிறைய வேலையிருக்கு"
தொடரும்.
copyrights@varnajalam.in
Comments